சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டார்.
மாலைதீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே நுழைவிசைவு பெறத் தேவையில்லை.
நுழைவிசைவு இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு இராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது.
அதேவேளை, ராஜபக்சவின் புதல்வர்களும் சீனாவுக்குச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு மகிந்த ராஜபக்ச, தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்ய முனைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்து, தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்வது தொடர்பான, ஆணையை தயாரிக்க சட்டமா அதிபரிடம், மகிந்த ராஜபக்ச கோரியதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அமைதியான முறையில் வெளியேறும்படியும், அதற்குரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, அலரி மாளிகைக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்சவை அழைத்துச் சென்று, டொரிங்டன் அவென்யூவில் உள்ள, வர்த்தகர் ஒருவரின் வீட்டில் விட்டதாகவும் கொழும்பு ரெலிகிராப் தெரிவித்துள்ளது.