திரௌபதிக்கு மட்டுமா ஐந்து கணவர்மார்? அவரது மாமியாரான குந்திதேவிக்கும் ஐந்து கணவர்மார்களே. இது பலருக்குத் தெரிந்தும் சிலருக்குத் தெரியாமலும் இருக்கலாம்.
திருதராட்டினரின் மகனான துரியோதனன், ஆகியோர் கௌரவர்கள். திருதராட்டினரின் தம்பியான பாண்டுவின் புத்திரர்களே பஞ்ச பாண்டவர்கள். வியாசக முனிவருக்கும் அம்பிகாவிற்கும் பிறந்தவரே திருதராட்டினர்.
வியாசக முனிவருக்கும் அம்பாலிக்காவிற்கும் பிறந்தவர் தான் பாண்டு, இங்கு தந்தை ஒருவர் தாய்மார் இருவர்.
குந்திதேவி சிறுமியாக இருக்கும் போது துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்தமையால் அவர் மந்திரம் ஒன்றை குந்திதேவிக்கு உபதேசித்தார்.
“இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து எந்தத் தெய்வத்தை வேண்டினாலும் அத்தெய்வம் அவள் மீது பிரசன்னமாகும். குந்திதேவி இளமையில் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து சூரியனை அழைத்தாள்.
அதன் விளைவாக கர்ணன் பிறந்தான். பின்பு அவள் பாண்டுவைத் திருமணம் செய்து கொண்டாள். பாண்டு இளமையில் ஒருநாள் வேட்டையாடச் சென்றபோது இரண்டு மான்கள் இணைந்து இன்புற்றிருப்பதைக் கவனியாது அம்பை எய்துகொன்றான்.
இதனால் “மனைவியைத் தழுவினால் மரணம் ஏற்படும்” என்ற சாபம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் தனக்கு சந்தானம் இல்லை என்று பாண்டு மனம் வருந்தினார். இந்தவேளையில், குந்திதேவி தன்னிடமுள்ள மந்திரத்தின் சக்தியை எடுத்துக் கூறினாள்.
பாண்டுவின் வேண்டுகோளிற்கிணங்கவே
1.தருமதேவனை அழைத்து தருமரையும்
2.வாயு பகவானை அழைத்து வீமனையும்
3.இந்திரனை அழைத்து அர்ச்சுனனையும் பெற்றாள்.
எனவே குந்திதேவிக்கு ஐந்து கணவர்மார்.
1.சூரியன் – – கர்ணன்
2.தர்ம தேவன் – – தருமர்
3.வாயு பகவான் -– வீமனையும்
4.இந்திரன் – – அர்ச்சுனனையும் பெற்றாள்
5. பாண்டு
பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு குந்திதேவி தான் கற்ற மந்திரத்தை கொடுத்ததன் விளைவாக அவள் அசுவினியை வேண்டிச் செபிக்கவே நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தார்கள். பஞ்ச பாண்டவர்கள் இவ்வாறே தோன்றினார்கள்.
தருமர், வீமன், அர்ச்சுனன், நகுலன்,சகாதேவன் இந்த ஐவரும் உண்மையில் திருதராட்டினரின் தம்பியான பாண்டுவிற்குப் பிறக்கவில்லை. எனவே உண்மையில் துரியோதனன் ஆகியோருக்கு இவர்கள் சகோதரர்களா?
இவர்களுக்கு உண்மையில் இராஜ்ஜியத்தைப் பெறும் தகுதி உண்டா? அப்படியானால் எதற்காக துரியோதனன் சுற்றிச் சுற்றி சூழ்ச்சிகளைச் செய்து அவனை வீழ்ச்சியடையச் செய்து இராஜ்ஜியத்தை அபகரித்து துரியோதனனுக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
துரியோதனரின் தந்தைக்கு பாண்டுதான் தம்பியாவார். தருமரின் தந்தையான தருமதேவரோ, வீமனின் தந்தையான வாயு பகவானோ, அர்ச்சுனனின் தந்தையான இந்திரனோ, நகுலன் சகாதேவனின் தந்தையான அசுவினியோ சகோதரர்கள் அல்லர்.
உண்மையில் பாண்டுவிற்கென்று பிள்ளைகள் கிடையாது. அப்படி நியாயப்படி நோக்கினால் இராஜ்யம் துரியாதனன் ஆகியோரையே சேரும்.
அப்படியிருக்க துரியோதனனை ஏமாற்றி சூழ்ச்சி செய்து தோல்வியைத் தழுவ வைத்துவிட்டு துரியோதனன் மீது பொய்க்குற்றங்களைச் சுமத்தி அவனை தீயவனாகச் சித்தரிப்பது நியாய அநியாயங்களைத் தெரிந்தவர்களை ஏமாற்றும் ஒரு செப்படி வித்தைதான்.
துரியோதனனின் தந்தையான திருதராட்டினரின் தம்பியான பாண்டுவிற்கு பஞ்சபாண்டவர்கள் பிறந்திருந்தால் துரியோதனனே முன்வந்து இராஜ்யத்தை பாகம் பிரித்துக்கொடுத்திருப்பார்.
அவரது பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம், துரியோதனனின் உற்ற நண்பன் கர்ணன் (குந்தியின் மூத்த மகன், கர்ணன் துரியோதனனுடைய சொத்துக்களையே எடுத்து தானதர்மங்கள் செய்து பெரியதர்மஸ்தர் என்ற பெயரைப் பெற்ற போதும் ஒரு முறையாவது கர்ணனிடம் “யாரைக் கேட்டு எனது சொத்துக்களை எடுத்து தானதர்மங்கள் செய்கிறீர்கள்” என்று கேட்டதும் கிடையாது.
அதுமட்டுமா? அவமானத்தால் தலைகுனிந்து நின்ற கர்ணனுக்கு அங்கதேசத்தை தந்து அவனை பட்டாபிஷேகம் செய்து மன்னனாக்கினான். இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்? சிந்திக்க வேண்டிய விடயம். துரியோதனன் துட்டனா? என்ற கேள்வி எழுகின்றது.
கலாபூஷணம் வயலற் சரோஜா