யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு இன்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும் உங்களுக்கு 8 லட்சம் ரூபாய் பணப்பரிசு கிடைத்துள்ளதாகவும் அழைப்பை ஏற்படுத்தியவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உங்களுக்கு பணபரிசு கிடைக்கப்பெற்ற தகவலை கடந்த 2 திகதி குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தோம் ஏன் அதற்கு பதில் அளிக்கவில்லை  என கேட்டதுடன் இன்றைய தினம் தான் பண பரிசினை பெற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எனவும் நீங்கள் இன்றைய தினம் பணப்பரிசை பெற்றுக்கொள்ளாவிடின் அப் பணத்தை வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொடுத்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பாதிக்கப்பட்ட நபர் தான் அப்படி ஒரு குறுஞ்செய்தி வந்ததை அறியவில்லை என தெரிவித்துள்ளார். அதற்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் நீங்கள் அக்குறுஞ்செய்திக்கு பதில் போடாததால் உங்களுக்கான பணபரிசை பெற எமது நிறுவனத்திற்கு சிறு தொகை பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பாதிக்கப்பட்ட நபர் இணங்கி தான் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என கேட்ட போது 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை இந்த தொலைபேசி இலக்கத்திற்கு ரீலோர்ட் செய்யுமாறு கூறியுள்ளார்.

அதற்கு தன்னிடம் தற்பொழுது அவ்வளவு பணம் இல்லை 15 ஆயிரம் ரூபாய் பணமே இருக்கின்றது என கூறிய போது அதனை ரீலோர்ட் செய்யுமாறு அழைப்பை ஏற்படுத்திய நபர் கூறியுள்ளார். அதனை அடுத்து பாதிக்கபப்ட்ட நபர் ரீலோர்ட் செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய நபர் இன்னுமொரு 15 ஆயிரம் ரூபாயை ரீலோர்ட் செய்யுமாறு கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரும் அதை நம்பி மீண்டும் 15 ஆயிரம் ரீலோர்ட் பண்ணியுள்ளார். மறுபடியும் அழைப்பை ஏற்படுத்திய நபர் இன்னமொரு 5 ஆயிரம் ரூபாயை ரீலோர்ட் செய்யுமாறு கூறியுள்ளார் அதனையும் ரீலோர்ட் செய்துள்ளார்.

பின்னர் சிறுது நேரத்தில் அழைப்பை ஏற்படுத்திய நபர் 8 லட்சம் ரூபாய் பணப்பரிசை பெற நீங்கள் எமது நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் நீங்கள் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி விட்டீர்கள் மிகுதி 15 ஆயிரத்தை ரீலோர்ட் செய்தால் உங்கள் பணபரிசினை எமது நிறுவனத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகே பாதிக்கப்பட்ட நபர் சந்தேகம் கொண்டு யாழ்.நகரில் உள்ள குறித்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் வினாவியுள்ளார்.

அப்பொழுது குறித்த நிறுவனத்தினர் தாம் அப்படி ஒரு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர். அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை அறிந்துள்ளார்.

அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply