நடைமுறையில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறை படுத்துவதுதான் தமிழாகளுக்குரிய தீாவா? கூட்டமைப்பு இதுபற்றி எந்தவித கருத்தும் கூறாது மௌனமாக இருப்பதேன்??
1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி – இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
இதன்படி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை ஒரே மாகாணமாக இணைப்பது, இம்மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது ஆகியவற்றுக்காக இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது சரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் தற்போது வரை 13வது அரசியல் சாசனத் திருத்தம் மூலமே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மைத்ரிபால சிறிசேன அதிபரான பின்னர் இலங்கை நாடாளுமன்றம் நேற்று முதல்முறையாக கூடியது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது: இன்று இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.
இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கும் ஒழுக்கமான ஒரு அரசை உருவாக்கவும் வழி ஏற்பட்டுடுள்ளது.
100 நாட்களில் புதிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஒரு அடித்தளத்தை தொடங்க அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள்.
நாட்டின் இரு பிரதான கட்சிகள் மட்டுமல்ல ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒரே நோக்கத்திற்காக ஒரு பொதுவான பயணத்துக்கு புறப்படுவதும் இந்த நாடாளுமன்றத்தில் இருந்துதான்.
இன்று நமது நாடு மிகவும் பலமிழந்த நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக பலத்த நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கி இருக்கிறோம்.
தேசிய, சர்வதேச நிலையில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அதிபருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்குப் பதிலாக அமைச்சரவையின் மூலமாக நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் தரக்கூடிய புதிய அரசு முறையை உருவாக்குவோம்.
இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
தமிழருக்கு அதிகாரம் வழங்கும் 13வது திருத்தச் சட்டமும் ஒற்றையாட்சிக்குட்பட்டதாக இருக்கும். இந்த 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம். இனப்பிரச்சினைக்கான தீர்வை நாடாளுமன்றத்தின் மூலமே காண்போம் இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.