சென்னை: மதுக்கடையில் பீர் வாங்கியது போல் சினிமாவுக்காக நான் நடித்ததை உண்மை என்று நம்ப வேண்டாம் என்று நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
‘நானும் ரவுடிதான்’என்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஒரு மதுக்கடைக்கு சென்று மது பாட்டில் வாங்குவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. ”நயன்தாரா மதுக்கடைக்கு சென்று மது பாட்டில் வாங்குவது போன்ற காட்சி படத்துக்காக எடுக்கப்பட்டது என்றாலும், அது கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பெண்களை குடிப்பழக்கத்துக்கு தூண்டுவது போல் அந்த புகைப்படம் அமைந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நயன்தாரா, “நான் மதுக்கடைக்கு சென்று பாட்டில் வாங்குவது போன்ற காட்சி, படத்துக்காக எடுக்கப்பட்டது.
என்னை பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகளை நான் கண்டு கொள்வதில்லை. அதற்கெல்லாம் விளக்கம் கொடுப்பதில்லை. இருப்பினும், படத்துக்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சியை தவறான கண்ணோட்டத்தில், பிரச்னையை தூண்டிவிடுகிற மாதிரி ஊதி பெரிதுபடுத்துவதை கண்டிக்கிறேன்.
இது, சிறுபிள்ளைத்தனமானது. புதுச்சேரியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு பகுதியில் இருக்கும் ’டாஸ்மாக்’ கடையில், அந்த காட்சி படமாக்கப்பட்டது.
என்னைப் போன்ற பிரபலமான ஒருவர், அந்த இடத்துக்குப்போய் எல்லோருக்கும் தெரிகிற மாதிரி மது பாட்டில் வாங்க முடியுமா? சினிமாவுக்காக நான் நடித்ததை உண்மை என்று யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.