சூளகிரி: காதலுக்காக மண்டபத்தில் விஷம் குடித்த வாலிபருக்கும், அவரது காதலிக்கும் உறவினர்கள், முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது.
திருமண ஏற்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). இவருக்கும் சூளகிரி அருகே செம்பரசனப்பள்ளி கொரவதொட்டியை சேர்ந்த அனிதா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சூளகிரியில் உள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.
மணப்பெண் சூளகிரி அருகே திருமலைகோட்டாவில் உள்ள ஒரு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில், பாத்தகோட்டா அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த மாதேஷ் (23) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
மண்டபத்தில் விஷம் குடித்தார்
ஒரே இடத்தில் வேலைப்பார்த்த மாதேசும், அனிதாவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் தான் காதலித்து வந்த பெண்ணிற்கு, வேறு ஒருவருடன் சூளகிரியில் திருமணம் நடைபெறுவதாக மாதேசுக்கு தகவல் கிடைத்தது.
இதனால் பெண்ணை அழைத்து வருவதற்காக அவரது நண்பர்கள் சென்றனர். இதில் குமார், முருகேசன் ஆகியோர் மண வீட்டாரிடம் பிடிபட அவர்களை சூளகிரி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தனது காதலியுடன், தனக்கு திருமணம் நடக்காமல் போய் விடக்கூடாது என எண்ணிய மாதேஷ், மண்டபத்திற்கு நேராக சென்று தான் பாக்கெட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
இதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அனிதாவின் திருமணம் நின்றது.
உறவினர்கள் முன்னிலையில் திருமணம்
மணமகன் ரமேசிற்கு, அவர்களின் உறவுக்கார பெண் ஒருவருடன் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாதேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மாதேசும், அனிதாவும் காதலில் உறுதியாக இருப்பதை அவர்களின் உறவினர்கள் அறிந்தனர். இதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மாதேஷ் – அனிதா திருமணம் சூளகிரி கீழ்த்தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
உறவினர்கள் முன்னிலையில், மாதேஷ், தனது காதலி அனிதாவின் கழுத்தில் தாலியை கட்டினார். மணமக்களை, உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
தனது காதலியை மணமுடித்ததால் மாதேசும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.
காதலியை மணமுடிப்பதற்காக, வாலிபர் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்று, மணமுடித்த சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.