சேலத்தில் 4 பெண்டாட்டிக்காரர் கொலையில் கைதான சமையல் தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தனது கள்ளக்காதலியை அபகரிக்க முயன்றதால் தீர்த்து கட்டியதாக கூறினார்.
சேலம் தாதகாப்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (45). இவர் கோபால் என்பவரிடம் சமையல் வேலைக்கு உதவியாளராக சென்று வந்தார். இவருக்கு 4 மனைவிகள்.
முதல் மனைவி சீதா. இவர் குடும்ப பிரச்சினையில் தீக்குளித்து இறந்தார். 2–வது மனைவி சாந்தி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
3–வதாகவும் சாந்தி என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றவிட்டார். 4–வதாக மணியனூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த 31–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறி சென்ற அங்கமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள சமையல் தொழிலாளி கோபால் வீட்டின் முன் பகுதியில் உள்ள செப்டிக் டேங்கில் ஒரு பிணம் கிடப்பதாக அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டபோது அது காணாமல் போன சமையல் உதவியாளர் அங்கமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபாலை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் அங்கமுத்து திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிணத்தை வீட்டின் முன்பு உள்ள செப்டிக் டேங்கில் வீசியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அங்க முத்துவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக தாக்கப்பட்டு அங்கமுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கோபாலிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கோபால் தனது கள்ளக்காதலி செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து அங்கமுத்துவை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வியையும் பிடித்து வந்தனர்.
பின்னர்அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
போலீசாரிடம் கோபால் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். எனக்கும் எனது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த சில மாதங்களாக நான் தனியாக வசித்து வருகிறேன்.
சம்பவத்தன்று மாலை அங்கமுத்து எனது வீட்டிற்கு வந்தார். அப்போது நான் மணியனூரை சேர்ந்த எனது கள்ளக்காதலி செல்வி (46) என்பவரை எனது வீட்டிற்கு அழைத்தேன்.
பின்னர் 3 பேரும் வீட்டில் மது குடித்தோம். குடிபோதையில் இருந்த நான் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றேன்.
பின்னர் நான் மீண்டும் வீடு திரும்பினேன் அப்போது அங்கமுத்து செல்வியுடன் உல்லாசம் அனுபவிக்க முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் அருகில் இருந்த கல் மற்றும் இரும்பு ராடை எடுத்து அங்கமுத்துவை தாக்கினேன்.
இதில் பலத்த காயம் அடைந்த அங்கமுத்து துடிதுடித்து இறந்தார். வெள்ளிக்கிழமை இரவு இறந்த அங்கமுத்துவின் உடலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை வீட்டிற்குள்ளேயே வைத்து இருந்தோம்.
பின்னர் வீட்டிற்கு முன்பு இருந்த செப்டிக் டேங்கை திறந்து அங்கமுத்துவின் உடலை தூக்கி வீசினோம். அதை சரியாக மூடாததால் அங்கமுத்துவை தேடி எங்கள் வீட்டிற்கு வந்த அவரது மனைவி காமாட்சி பார்த்து விட்டு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நாங்கள் சிக்கி கொண்டோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் கோபால் அவரது கள்ளக் காதலி செல்வி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.