இலங்கையில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா இன்று திங்கட்கிழமை கொழும்பில் இரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 11 ஆம் தேதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அந்தக் கட்சியிலிருந்து விலகி அன்றைய ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் இவருக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சில வாரங்களில் இவரது அமைச்சர் பதவி பறிபோனது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக குற்றம் சாட்டியதோடு, அவர்கள் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம் என்பதாக ஆவணமொன்றையும் அவர் அப்போது வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டை அப்போது கடுமையாக மறுத்திருந்த ரணில் விக்கிரமசிங்க, தன் மீது குற்றம் சுமத்திய திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு துறையிடம் புகார் செய்திருந்தார்.

தற்போது ரனில் விக்ரமசிங்கவின் அந்த புகாரின் மீதான விசாரணைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளரான அஜித் ரோகன தெரிவித்திருக்கிறார்.

1125314003thissa

Share.
Leave A Reply