இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka)

பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது, “சிங்களவர்களிடம் தமிழர்கள் அடிமைப் பட்ட தினமாகையினால், அதனை தமிழர்கள் கருப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்” என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கூறி வருகின்றனர்.

இன்னும் சிலர், “அன்றைக்கே ஈழம் கேட்காமல் விட்ட தமிழ்த் தலைவர்களின் தவறு” பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

வரலாறு தெரியாமல், அல்லது அது குறித்து பக்கச் சார்பற்ற ஆய்வு இல்லாமல், இது போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்கள் எந்தக் காலத்திலும் இழக்க விரும்பியிராத, இந்தியாவே கையை விட்டுப் போகிறது என்ற கவலையில், இலவச இணைப்பாக வழங்கப் பட்டது தான், இலங்கையின் சுதந்திரம்.

பிரிட்டன் தனது பணக்கார காலனியான சுதந்திர இந்தியாவின் பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் தீராத தலையிடியை உண்டுபண்ணும் நோக்கில், பாகிஸ்தான் பிரிவினைக்காக பாடு பட்டது. அதே நேரம், இலங்கையில் ஈழம் பிரிப்பதற்கு அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை.

உண்மையில் அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் யாரிடமும் தனி ஈழம் கேட்கும் எண்ணம் இருக்கவில்லை. அதற்குக் காரணம், அன்று யாருடைய மனதிலும் தமிழ் தேசிய உணர்வு இருக்கவில்லை. இன்னும் சொன்னால், தமிழர் என்ற இன உணர்வே அப்போது உருவாகி இருக்கவில்லை.

தமிழ் தேசியக் கருத்தியல், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு, குறைந்தது இரு தசாப்த காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து முரண்பட்டு பிரிந்து சென்ற, தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் காரணமாக, பிற்காலத்தில் உருவானது தான் தமிழ்த் தேசிய அரசியல்.

சேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைமைகள் தங்களை ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவர்களாக கருதிக் கொள்ளவில்லை. தாம் சார்ந்த வெள்ளாள சாதியின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுப்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில், படித்த மேட்டுக்குடி வர்க்கமாக உருவான வெள்ளாளர்கள் தான், இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

அவர்கள் சிங்களத்தில் கொவிகம என்று அழைக்கப் பட்டாலும், மொழி கடந்து திருமண உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு, சாதி அபிமானம் நிலையானதாக இருந்துள்ளது.

அன்றிருந்த சிங்கள – தமிழ் மேட்டுக்குடியினருக்கென சில பொதுவான அம்சங்கள் இருந்தன. அதுவே அவர்களது சாதி – வர்க்க ஒற்றுமைக்கு முக்கிய காரணம்.

அவர்களின் பூர்வீகம் சிங்களமாக, அல்லது தமிழாக இருந்தாலும், அவர்கள் தமது தாய்மொழியை புறக்கணித்து வந்தனர். அதற்குப் பதிலாக அன்னியரின் ஆங்கில மொழியையே வீட்டிலும் வெளியிலும் பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை தழுவி, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றி வந்தனர்.

அன்றைய சிங்கள – தமிழ் மேட்டுக்குடியினரின் நலன்களும் ஒன்றாகவே இருந்தன. வர்த்தக நலன்களுக்காக, முஸ்லிம்களுடன் முரண்பட்டார்கள்.

இலங்கையில் முதன்முதலாக தோன்றிய இனக் கலவரம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்வதற்காக, சேர் பொன் இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்கை வாதாடி வென்று கொண்டு வந்தார். நாடு திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்றார்கள்.

SirponramanathanSir Ponnambalam Ramanathan
மேற்படி சம்பவத்தை நினைவுகூரும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், “ஒரு தமிழ்த் தலைவரை சிங்களவர்கள் மதித்த காலம்…” என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்.

உண்மையில் அது, அவர் ஒரு தமிழர் என்பதற்காக கிடைத்த மரியாதை அல்ல. இராமநாதனின் சாதிக்கு, அல்லது வர்க்கத்திற்கு கிடைத்த மரியாதை. இலங்கையில் அன்றிருந்த சாதி உணர்வு, வர்க்க உணர்வு என்பன அந்தளவு இறுக்கமானது.

சிங்கள – தமிழ் மேட்டுக்குடியினரின் ஒற்றுமைக்கு இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். அன்று முஸ்லிம்களுக்கு அடுத்ததாக, இந்தியர்கள் கொழும்பு வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வந்த பெருமளவு கூலித் தொழிலாளர்கள், கொழும்புத் துறைமுகம் போன்ற தொழிற்துறைகளில் வேலை செய்தார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். கணிசமான அளவு தெலுங்கர்கள், மலையாளிகளும் இருந்தனர்.

அன்றைய இலங்கைப் பொருளாதாரம் மலேசியாவை விட முன்னேறிய நிலையில் இருந்தது. அதாவது, இன்றைக்கு சிங்கப்பூர், மலேசியா போன்ற பணக்கார நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைப் போன்று, அன்று பல இந்திய தொழிலாளர்கள் பணக்கார இலங்கைக்கு வேலை தேடிச் சென்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் பெருகிக் கொண்டிருந்த இந்திய குடியேறிகளை தடுப்பதற்காக தோன்றிய சிங்கள இனவாத அரசியல், பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பியது.

கொழும்பு இந்தியர்கள் மட்டுமல்ல, மலையக தோட்டத் தொழிலாளர்களினதும் குடியுரிமையை பறிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் வந்த நேரம், “தமிழ்த் தலைவர்” ஜிஜி பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்தார்.

இப்படியான கலாச்சார பின்புலத்தைக் கொண்ட “தமிழ்த் தலைவர்கள்” எவ்வாறு ஈழம் கேட்டிருப்பார்கள்? அது அவர்களது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயம்.

ஆங்கிலேயர் போன பின்பு, இலங்கை முழுவதையும் தங்களது வெள்ளாள சாதி ஆளப் போகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள்.

எவ்வாறு நாட்டை கூறு போட சம்மதித்திருப்பார்கள்? சிலநேரம், அன்றைக்கு ஒரு புலிகள் இயக்கம் தோன்றி, ஈழப் போராட்டம் நடத்தி இருந்தால், அதை நசுக்குவதற்கு இவர்களே முன் நின்று உழைத்திருப்பார்கள்.

எல்லாவற்றையும் “சிங்களம் – தமிழ்” என்று, கருப்பு வெள்ளையாக பார்ப்பது தான், தேசியவாத அரசியல் கோட்பாடு. ஆனால், அது எல்லா இடங்களிலும், எல்லாக் காலத்திற்கும் சரிவரும் சூத்திரம் அல்ல.

இலங்கையின் சாதிய அரசியல், அதற்குப் பின்னால் மறைந்திருந்த வர்க்க அரசியல், இவற்றை ஆராயாமல் பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிக்க முடியாது.

-கலையரசன்-

us tamilஆள் பாதி, ஆடை பாதி, அமெரிக்கா மீதி!

Share.
Leave A Reply