தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்கா கோரக் கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டியே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை பிற்போடும் படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக் கூடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுக்களின் போது, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், இதனை மேலோட்டமாக சுட்டிக்காட்டியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி கொண்டுள்ளது.
மைத்திரிபால சிறிசென- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில், அமெரிக்க- சிறிலங்கா உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான தீர்மானத்தை முன்வைத்து, குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை.
போர்க்குற்றங்களுக்கு எதிரான வலுவான தீர்மானத்தை முன்வைப்பது, தமிழர்களுக்கு இடமளிக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் தேசியவாத சக்திகளை தூண்டிவிட்டு விடும் என்றும், அதன் விளைவாக ,வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிஷா பிஸ்வால் எச்சரித்ததாகவும் தெரியவருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னதாக, 100 நாள் செயற்திட்டத்தில் ஏராளமான விடயங்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வருவது, 100 நாள் செயற்திட்டத்தில் இருந்து அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்பி விடும் என்றும் நிஷா பிஸ்வால் கூறியிருக்கிறார்.
எனினும், தமிழர் பிரச்சினையை மூடி மறைப்பதற்குத் தாம் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நிஷா பிஸ்வாலிடம் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளனர்.
கொழும்புக்கும் வொசிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் அதிகரித்து, மற்ற விடயங்கள் முன்னுரிமை பெறும் நிலையில் தமிழர் பிரச்சினை பின் தள்ளப்படும் அச்சம் தோன்றியிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் கூட்டத்தொடரிலேனும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுமா என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கம் தனது நலன்களிலேயே கவனம் செலுத்துகிறது. புதுடெல்லியும், வொசிங்டனும் தமது நலன்களிலேயே கவனம் செலுத்துகின்றன.
தமிழர்களைத் தவிர, தமிழர்களின் நலனில் யாருமே அக்கறைப்படவில்லை. இதனை நாம் எங்கு போய்ச் சொல்வது?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.