வடக்கில் இருந்து இராணுவத்தையும் முகாம்களையும் அகற்ற மாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியிருப்பதை தமிழ் மக்களை இன்னுமொரு அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கான வேலைத்திட்டமாகவே பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மக்களை மீளக்குடியமர்த்துமாறு நாம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் கூறப்பட்ட கருத்துக்கள் மக்களினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சுமார் 10 இலட்சம் மக்கள் வாழும் வடமாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் அவசியம் இல்லை. இலங்கையில் 9 மாகாணங்கள் இருக்கின்றன. 2 இலட்சம் இராணுவத்தினை 9 மாகாணங்களுக்கும் சரிசமமாக பிரித்துக்கொள்ள முடியும்.
அவ்வாறு பிரித்துக்கொள்வதன் மூலம் வடக்கில் உள்ள பொது மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படும். அந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியும்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவிற்கும் கூறியிருக்கின்றோம். மீள்குடியேற்றம் விரைவில் செய்யப்பட வேண்டும்.
புதிய அரசினால் நிர்ணயிக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் மீள்குடியேற்றம் வேண்டும்.வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
58 சதுர கிலோ மீற்றர் விடுவிக்கப்பட வேண்டிய பிரதேசத்தில் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய பிரதேசங்களில் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பன 5.3 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் உள்ளன.
இராணுவ குடியிருப்பு மற்றும் விவசாய விடுதிகள் இல்லாத 10 சதுர கிலோ மீற்றர் பரப்பு பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியும்.
இந்த பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு மாதங்கள், வருடங்கள் தேவையில்லை. வலி. வடக்கு பிரதேசத்தில் 18 அதி சொகுசு விடுதிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒவ்வொரு பிரிகேடியர்களுக்கும் சொந்தமானதாகும்.
15 அல்லது 16 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கிளிசறியா மரத்தில் இருந்து மின்சாரம் பெறக்கூடிய வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும், இராணுவ பாதுகாப்பிற்காக அல்ல. இராணுவத்தினரின் சுகபோக வாழ்க்கைக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விடுதிகள், நீச்சல் தாடகங்கள், விளையாட்டு மைதா னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்திலா, கடலிலா படையினர் முகாம் அமைப்பது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேட்பது முறையானதன்று.