கிழக்கு மாகாணசபையில்  மீண்டும் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அணுகுமுறைகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே ஏற்பட்டுவிட்ட அரசியல் சூழலினால், கிழக்கு மாகாணத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், கிழக்கு மாகாணசபையில் புதிய ஆட்சி அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடுமையான பிரயத்தனங்களில் ஈடுபட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மட்டுமே கூட்டணி வைத்து, ஆட்சி அமைப்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஆனால், முதலமைச்சர் பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்க அது தயாராக இருக்கவில்லை.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினாலும், முதலமைச்சர் பதவி தமக்கு வேண்டும் என்று அடம்பிடித்தது.

தொடர் பேச்சுக்கள் தோல்வி அடைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைவிட்டு, முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் செய்துகொண்ட பழைய உடன்பாட்டை புதுப்பித்துக்கொண்டு, அதனுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

musமுதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்படும்வரை, அது பற்றி எந்தக் கட்சியுடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆலோசனை நடத்தவில்லை.

எல்லாவற்றையும் தன்னிச்சையாக செய்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாருஸ்ஸலாமில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எல்லாக் கட்சிகளையும் கிழக்கு மாகாண அரசில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

கிழக்கில் முன்னுதாரணமான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க அழைப்பு விடுத்த அவருக்கு, அதற்கு முன்னதாக எல்லாக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து முதலமைச்சரை நியமிக்கவேண்டும் என்ற அரசியல் நாகரிகம் தெரியாமல்போயுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முதலமைச்சர் பதவி விடயத்தில் விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டதாகவும் அதனாலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்றதொரு கட்சி இருக்கிறதா என்பது முதல் கேள்வி. ஏனென்றால், அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட 16 கட்சிகளை உள்ளடக்கியதொரு கூட்டணி.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்துள்ளதே தவிர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னமும் பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே இருந்துவருகிறது.

தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பாலான கட்சிகள், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், காலாவதியாகிப்போன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அமைய, முதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அஹமட் பொறுப்பேற்றதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளமை அபத்தமானது.

முதலமைச்சர் விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தளவுக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததோ, அதே அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விட்டுக்கொடுக்க மறுத்தது.

அதுபோலவே, முதலமைச்சராக தமது கட்சியினரே வரவேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த அத்தனை நியாயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பொருந்தக்கூடியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடிவாதம் பிடிப்பதாகவும் விட்டுக்கொடுப்புக்கும் ஓர் எல்லை உண்டு என்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட கருத்து மிகவும் குதர்க்கமானது.

அதாவது, 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னர், முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கூட விட்டுக்கொடுக்க தயாராக இருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அவ்வாறு விட்டுக்கொடுப்பின் உச்சத்துக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டமை, அவரது அரசியல் நேர்மையை கேள்விக்கு உள்ளாக்கியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, பல முஸ்லிம் தலைவர்களும் கூட, அமைச்சர் ரவூப் ஹக்கீம் முதுகில் குத்திவிட்டதாக அப்பட்டமாக கொதித்திருந்தார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் வரலாறு தனியே பதவிகளை அடிப்படையாக கொண்டது. அதற்காக யாருடனும் கூட்டுச்சேரத் தயாராக இருக்கும் என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.

இப்போது ஒரு பக்கத்தில், மத்தியில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இருக்கிறது. அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போகிறது.

ஆனால், கிழக்கு மாகாணசபையில் மைத்திரிபால சிறிசேனவை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது.

இது, எங்கு எப்படி பதவிகளை பெறமுடியுமோ, அவ்வாறு தமது கொள்கையை மாற்றிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பண்பை வெளிப்படுத்துகிறது.

2012ஆம் ஆண்டு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடனும் இணைந்து ஆட்சி அமைக்க முன்வராத முஸ்லிம் காங்கிரஸ், இப்போது அதேபோன்றதொரு முரண்பாடுகளை கொண்ட முறையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

அதிக ஆசனங்களை கொண்ட கட்சிகளை ஓரம் கட்டிவிட்டு, எப்படி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று புதிய வழியை காட்டியிருக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்.

அதுமட்டுமன்றி, கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்பது போலவும் அதுவே நியாயம் என்றும் உரிமை என்றும் வாதிட்டிருந்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

கிழக்கில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்று கூறியே வாக்கு கேட்டதாகவும் மக்களின் ஆணையை மீறமுடியாது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நியாயப்படுத்தினார்.

ஆனால், 2012ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்தே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனாலும், யாரை எதிர்த்து வாக்குகளை கேட்டதோ, அவர்களுடனேயே கூட்டணியை வைத்துக்கொண்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

அப்போது, கிழக்கு மக்கள் அளித்த ஆணை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு நினைவு இருக்கவில்லை. இப்போது மட்டும் அது நினைவுக்கு வந்திருக்கிறது.

கிழக்கு மாகாணசபையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல அரசியல் தர்மங்களை மீறியிருக்கிறது.

இது மூவின மக்களும் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கச் சூழலை உருவாக்குவதற்கு சவாலான விடயமாகவே இருக்கப்போகிறது.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை துரோகம் இழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது மெல்ல மெல்ல சமரசத்துக்கு இணங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் நியாயமாக நடந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் கருத்திற்கொண்டு செயற்பட்டுள்ளது என்று கருதுவதற்கில்லை.

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி எடுத்திருந்தது.

முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு வைத்துக்கொண்டு அமைச்சர் பதவிகளை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவது குறித்து பேசப்பட்டது. ஆனால், இரண்டு தரப்புமே முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை.

2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையில் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தை துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கவும் தயாராக இருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஆனால், இப்போது மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதால், அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்காக அடம் பிடித்தது.

கடந்தமுறை நல்லெண்ணத்துடன் விட்டுக்கொடுக்க முனைந்த முதலமைச்சர் பதவியை, இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை.

இம்முறை முதலமைச்சர் பதவியை தாம் விட்டுக்கொடுக்க முடியாது. அதுவே நியாயமான கோரிக்கை என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2012ஆம் ஆண்டு அந்த நியாயமான கோரிக்கையை ஏன் புறந்தள்ளியது என்ற கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்கமுடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில், கிழக்கு மாகாணசபையில் தனித்து ஆட்சி அமைக்க ஆணை தாருங்கள் என்றே தமிழ் மக்களிடம் கோரியது.

ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட, சுமார் 6,500 வாக்குகளை குறைவாக பெற்றுக்கொண்டதால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைப்போம் என்ற பிடிவாதத்தில் இருந்தது சரியா என்ற கேள்வியும் இருக்கிறது.

தேசிய அளவில் இணக்க அரசியல் நடத்தும் அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாராண்மைக் கொள்கையை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது.

கடந்தமுறையும் இந்தமுறையும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையின வேட்பாளருக்காக வாக்கு கேட்டது.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளாவிடினும், புதிய அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகிறது. அப்படியான நிலையில், கிழக்கு மாகாணசபையில், முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்க கூட்டமைப்பு முயற்சித்திருக்கலாம்.

அது ஒருவேளை, கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுத்தந்திருக்கக்கூடும். அந்த வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உதறித் தள்ளியது.

அது மட்டுமன்றி, கிழக்கு மாகாண முதல்வராக ஹாபீஸ் நஸீர் அஹமட் பதவியேற்றதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்களின் ஆணையை மீறிவிட்டதாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதனை முஸ்லிம் காங்கிரஸின் துரோகம் என்று வர்ணித்தனர். அவ்வாறானவர்கள், கிழக்கு மாகாணசபையில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேச முனைந்திருக்கக்கூடாது.

முதலமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், கிடைத்த அமைச்சர் பதவிகளையாவது பெறுவோம் என்ற வகையில் இந்தப் பேரம்பேசல்கள் கருதப்பட்டன.

முதலமைச்சர் பதவியை தட்டிப்பறித்த முஸ்லிம் காங்கிரஸுக்கு, அதன் தவறை உணர்த்துவதற்கு அமைச்சர் பதவிகளையும் ஏற்காமல் ஒதுங்கியிருப்பதே ஒரே வழி.

வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம். எஞ்சிய காலத்துக்கு ஆட்சி செய்யுங்கள் என்று பெருந்தன்மையோடு ஒதுங்கியிருக்கவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

முதலமைச்சர் பதவி தட்டிப்பறிக்கப்பட்ட பின்னரும், அமைச்சர் பதவிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசுவதற்கு இறங்கிப்போனது அருவருக்கத்தக்க செயலாக பார்க்கப்படுகிறது.

அதைவிட முதலமைச்சர் பதவியை இப்போது கைவிட்டு, கிடைத்த அமைச்சர் பதவியை ஏற்பது குறித்து ஆலோசிக்க தயாராகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆரம்பத்திலேயே முதலமைச்சர் பதவிக்காக முரண்டுபிடிக்காமல் விட்டுக்கொடுத்திருக்கலாம்.

அப்போது விட்டுக்கொடுத்திருந்தால், அதுவே முஸ்லிம்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால், முதலமைச்சர் பதவிக்காக இழுபறிப்பட்டு விட்டு, இதனால், இரு சமூகங்களும் முட்டி மோதிக்கொண்ட நிலையில், எட்டாத பழம் புளிக்கும் என்ற வகையில் ஒதுங்கிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அவமானம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே நேரத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் முஸ்லிம் மக்களின் நல்லெண்ணத்தையும் பெறுவதற்கு எதிர்பார்க்கிறது. ஆனால், கிழக்கின் இனவாத அரசியல் சூழல் அத்தகையதொரு ஏதுநிலையை இன்னமும் ஏற்படுத்தவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில், தனது அரசியல் உத்திகளை மாற்றிக்கொள்ளாவிடின், எப்போதுமே இதுபோன்று தானும் ஏமாந்து தமிழ் மக்களையும் ஏமாற்றிக்கொள்ள நேரிடும்.

-கே.சஞ்சயன்

Share.
Leave A Reply