உலகக் கோப்பையை பிரமாதமான, ஸ்பெஷல் வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. அடிலைட் ஓவல் மைதானத்தில் இன்று நடந்த தனது முதல் போட்டியில் பரம வைரி பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி விட்டது இந்தியா. முதலில் பேட்டிங்கில் பிரமாதப்படுத்திய இந்தியா, பின்னர் பவுலிங்கிலும் ஒரு மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியை வெற்றியில் முடித்து விட்டது.

15-1424000204-ind-wins-pak

இந்தியாவின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வேகமாக விக்கெட்களை இழந்து 47 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி விட்டது. மேலும் இன்றைய போட்டியின் மூலம் தனது வருகையையும், உலகக் கோப்பையை தக்க வைக்க தாங்கள் முழுத் தகுதியுடன் இருப்பதையும் பிற அணிகளுக்கு எச்சரிக்கைச் செய்தியாகவும் மாற்றியுள்ளது இந்தியா.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. விராத் கோஹ்லி போட்ட அபார சதம், சுரேஷ் ரெய்னாவின் புயல் வேக ஆட்டம், ஷிகர் தவானின் பிரில்லியன்ட் ஆட்டம் காரணமாக இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களைக் குவித்தது.
தனது 22வது ஒரு நாள் சதத்தை இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில் போட்டார் கோஹ்லி. தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அவரை சொஹைல் கான் அவுட்டாக்கி வெளியேற்றினார்.
15-1424000225-virat-4

கோஹ்லி வெளியேறினாலும் கூட சுரேஷ் ரெய்னா தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். 56 பந்துகளில் 74 ரன்களைக் குவித்திருந்த ரெய்னா சொஹைல் கான் பந்து வீச்சில், ஹாரிஸ் சொஹைலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரது ரன்களில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கமாகும். இவர் போன சிறிது நேரத்தில் ரவீந்திர ஜடேஜா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோஹைல் கான் பந்து வீச்சில், தூக்கி அடித்து மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷிகர் தவானும், விராத் கோஹ்லியும் இணைந்தனர்.
இருவரும் இணைந்ததும் ஆட்டத்தில் சூடு பிடித்தது. சிங்கிள் ரன்களில் அதிக ஆர்வம் காட்டிய இருவரும், சரியான பந்துகள் சிக்கியபோது பவுண்டரிக்கு விரட்டவும் தயங்கவில்லை. ஒவ்வொரு பந்தையும் வீணாக்காமல் ரன்னாக மாற்றி அதிரடியாக ஆடி வந்தனர்.
15-1424000245-indiavspakistan4

இந்தியா 100 ரன்களைக் கடந்ததும் ஷிகர் தவான் அடுத்த சில பந்துகளில் அரை சதம் போட்டார். அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அரை சதம் போட்டார்.
ஷிகர் தவான் 76 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்த நிலையில், 30வது ஓவரின் போது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் செய்யப்பட்டு விட்டார். ஹாரிஸ் சொஹைல் பந்தை அடித்த கோஹ்லி அதை மிட் விக்கெட்டுக்கு விரட்டினார்.
இதையடுத்து தவான் மறு முனையிலிருந்து ஓடி வந்தார். இதைப் பார்த்த கோஹ்லியும் ஓடி வர எத்தனித்தார். ஆனால் அதற்குள் மிஸ்பா பந்தைத் தடுத்துப் பிடித்தார்.
இதைப் பார்த்த கோஹ்லி திரும்பினார். இதனால் தவானும் திரும்ப முயலுகையில் பந்தை சஷாத் வாங்கி விக்கெட்டை நோக்கி வீசி ரன் அவுட் செய்து விட்டார்.
தவான் ஆட்டமிழந்த பிறகு சிறப்பாக ஆடி வந்த விராத் கோஹ்லி ரசிகர்களுக்கு பெரும் ரன் விருந்து படைத்தார். தொடர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்து ஆடிய அவர் 107 ரன்களில் இருந்தபோது சொஹைல் கான் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் உமர் அக்மலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
15-1424000877-indiavspakistan2

126 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி 8 பவுண்டரிகளுடன் இந்த சதத்தைப் போட்டார். அவருக்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து சிறப்பாக ஆடி 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் ஜடேஜா (3), டோணி (18), ரஹானே (0) ஆகியோர் சடசடவென்று ஆட்டமிழந்ததால் இந்தியாவால் மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானில் சொஹைல் கான் பந்து வீச்சுதான் பிரமாதமாக இருந்தது. சிறப்பாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்களைச் சாய்த்தார். கடைசி நேரத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை அவர் எடுத்தது இதில் முக்கியமானது.
மற்றவர்களில் வஹாப் ரியாஸுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி 5 ஓவர்களில் இந்தியா சற்று சொதப்பி விட்டது. இல்லாவிட்டால் இன்னும் மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா எடுத்திருக்க முடியும். பின்னர் ஆட வந்த பாகிஸ்தான் நிதானமாகத்தான் ஆடியது. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு ஆடியது. இதனால் இந்தியா பதைபதைப்புடன்தான் இருந்தது.
15-1424000235-ind-pak-6087

அதிலும் அபாயகரான பேட்ஸ்மேனான அகமது அகமது செஷாத் வீழும் வரை இந்தியா பதைப்புடன்தான் இருந்தது. அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.
யூனிஸ்கானை 6 ரன்களில் வெளியேற்றி விட்டபோதிலும் செஷாத்தும், ஹாரிஸ் சொஹைலும் நிலைத்து நின்று ஆடியதால் இந்தியத் தரப்பு கவலையில் மூழ்கியது.
இந்த நிலையில் ஹாரிஸ் சொஹைலை 36 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ரோஹித் சர்மா கேட்ச் செய்து வெளியேற்றினார். அதன் பின்னர் சொஹைப் மக்சூத் டக் அவுட் ஆனார். உமர் அக்மலும் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் அப்ரிடியும், மிஸ்பா உல் ஹக்கும் சேர்ந்து நிலைத்து ஆட ஆரம்பித்தனர்.
இந்த ஜோடியைப் பிரிக்க இந்தியா சற்று தடுமாறியது. இந்த நிலையில், உமேஷ் யாதவ் பந்து வீச்சில், அப்ரிடி தூக்கி அடிக்க அதை அழகாக கேட்ச் செய்தார் விராத் கோஹ்லி. 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அப்ரிடி. அவரைத் தொடர்ந்து வஹாப் ரியாஸும் ஆட்டமிழந்தார்.
15-1424000215-rohit-6

பின்னர் மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து அதகளம் செய்து வந்தார். இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நல்ல வேளையாக மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழந்ததும்தான் இந்தியாவின் வெற்றி உறுதியானது. தனி நபராகப் போராடிய மிஸ்பா ரன்கள் எடுத்தார்.
47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆட்ட நாயகனாக சதம் அடித்த விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டார்.
Share.
Leave A Reply