சர்வதேச விசாரணைக்குப் பதிலான உள்ளூரில் விசாரணைகள் நடத்தப்படும், அதற்கான இணக்கப்பாட்டைத் தாங்கள் பெற்றிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணையைப் புறந்தள்ளுவதும், அத்தகைய சர்வதேச விசாரணையொன்று தொடர்ந்து முன்னெடுப்பதைத் தடுப்பதுமே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

makinthaஇந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, மறுபுறத்தில். பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு, மார்ச் மாத மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் வெளிவராமல் தடுத்திருக்கின்றது.

உள்ளக  விசாரணைகளே போதும். சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. அவைகள் அவசியமில்லை என்று அரசாங்கம் எடுத்துள்ள  நிலைப்பாட்டை   வலுவாக முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உறுதுணை புரிகின்றது என்றே கூற வேண்டியுள்ளது.

ஏனெனில்,

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக மடக்கவேண்டும், அவர்களை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் உறுதியாக இருந்தது என்றும் அதற்காக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைக்கு உறுதுணையாக அது செயற்பட்டிருந்தது என்றும் காரணம் கூறப்படுகின்றது.

இதனால், யுத்த காலத்தில், இலங்கைக்குத் தேவையான ராடர் சாதனங்கள் உட்பட ஆயுத தளபாடங்களை வழங்கியதுடன், வெவ்வேறு மூலோபாயச் செயற்பாடுகளிலும் இந்தியா இலங்கை இராணுவத்திற்கு ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தது. இதனை எல்லோரும் அறிவார்கள்.

அண்டை நாடு என்ற வகையிலும், உள்நாட்டு யுத்தம் ஒன்றில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய நாடு என்ற ரீதியிலும், ஓர் அரசாங்கத்திற்கு இன்னுமோர் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதென்பது  வழமையான  ஒரு நடவடிக்கையே.

இருநாடுகளுக்கும் இடையில் இராஜாங்க ரீதியிலான ஓர் ஒத்துழைப்புச் செயற்பாடாக இதனைக் குறிப்பிடுவார்கள். இதனை எவரும் தவறாகக் கொள்வதில்லை.

ஆனால், இலங்கையின் இனப்படுகொலை என்று வர்ணிக்கப்பட்ட, 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தையடுத்து, இலங்கை அரசின் இனக்குரோத வன்முறைச் செயற்பாடுகளில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும், தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு   வந்துள்ள   இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக,

ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், தமிழ் இளைஞர்களை ஓர் ஆயுதப் போராட்டத்தில் துணிந்து இறங்குவதற்கு இந்தியாவே பின்புலத்தில் இருந்து செயற்பட்டிருந்தது.

தமிழ்  இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்குப்  பின்தளமாக இந்தியா இருந்தது. அவர்களுக்கான இராணுவப் பயிற்சியும் இந்தியாவினால் வழங்கப்பட்டது.

அவ்வாறு இந்தியாவினால் வளர்த்துவிடப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முழு அளவில் முன்னெடுக்கும் நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பிரதேசத்தில் “ஒப்பரேஷன் லிபரேஷன்” என்ற  பெரும்  தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது…..,

ஆயுதமேந்திப் போராடிய தமிழ் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அப்பாவிப் பொதுமக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த நேரம் “ஒப்பரேஷன் பூமாலை” என்ற பெயரில்  மனிதாபிமான  நடவடிக்கையாக வடமராட்சி பிரதேசத்தில் வானத்தில்  இருந்து நிவாரண   உதவியாக உணவுப் பொட்டலங்களைப் போட்டு, அதன் ஊடாக இலங்கையின் உள்ளே இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை (இந்திய பாதுகாப்புப் படை ஐ பி கே எவ்) என்ற பெயரில் இந்திய அரசாங்கம் நுழைந்திருந்தது.

அதன் பின்னர்  “இலங்கை -இந்திய” ஒப்பந்தம் செய்யப்பட்டு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாகாண அரசியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவது  உள்ளிட்ட  பல்வேறு  நடவடிக்கைகளை   இந்திய அரச மேற்கொண்டிருந்தது.

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது

எனினும், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்திய அமைதிப்படைக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் நீண்டன.

இந்திய இராணுவம்  இலங்கையைவிட்டு வெளியேறியது. முன்னாள் இந்தியப் பிரதமர் தமிழகத்தில் வைத்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.

அப்போது  தற்கொலைத்  தாக்குதல்களைத் தமது உச்ச கட்ட இராணுவ  தாக்குதல் நடவடிக்கையாகவும், இராணுவ தாக்குதல் உத்தியாகவும் பயன்படுத்தி வந்த விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அணியே இந்தக் கொலையைச் செய்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இத்தகைய ஒரு நிலைமையில்தான், இந்தியா இலங்கைப் பிரச்சினைகளில் இருந்து சில காலம் ஒதுங்கி மௌனம் காத்திருந்தது.

இலங்கை தனது உள்நாட்டு யுத்தத்தைத் தானே சமாளித்துக் கொள்வதற்காக யுத்த மோதல்கள் என்றும் யுத்த நிறுத்தம், சமாதானப் பேச்சுவார்த்தைகள், மீண்டும் யுத்தச் செயற்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த வரிசையில் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாகி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தச் செயற்பாடுகளை முழு அளவில் மேற்கொண்டபோது, அஞ்ஞாதவாசத்தைப் போன்று இலங்கை விவகாரங்களில்  இருந்து ஒதுங்கியிருந்த இந்தியா இராணுவ ரீதியான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததுபோன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு எழுந்திருந்தது.

அத்துடன், பிராந்திய ரீதியிலான இராணுவ அரசியல் நிலைமைகளில், முப்படை வசதிகளுடன் இராணுவ ரீதியில் வலிமை பெற்றுள்ள ஒரு போராட்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமும், பிராந்தியத்தின் வல்லரசு என்ற வகையில் இந்தியாவுக்குத் தேவை எழுந்திருந்தது,

இத்தகைய காரணங்களுக்காகவே இந்தியா விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கான இலங்கை அரச படைகளின் முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்தும் ஆய்வாளர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான மூர்க்கமான ஓர் இராணுவ நடவடிக்கையை இந்தியா விரும்பியிருக்கவில்லை என்றும், அத்தகையதோர் இராணுவ முன்னெடுப்புக்குத் தேவையான இராணுவ உதவிகளை இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அரசியல் எதிரிகளாகக் கூறப்படுகின்ற, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான   முயற்சிகளில் ஈடுபட்டு, ஓரளவுக்கு அது, அவற்றில் வெற்றியும் பெற்றிருந்தது.

இவ்வாறு இலங்கை தனது கையை மீறிய வகையில் எதிரணி தரப்பில் இணைந்து செயற்படுவதையும், அந்த உறவுகள் வலுப்படுவதையும் இந்தியா விரும்பவில்லை.

ஆகவே, இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கினாலும், இலங்கையைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டிய அரசியல் தேவையும் இருந்தது. அது இன்னும் இருப்பது மட்டுமல்லாமல் அந்த தேவை தொடர்ந்து நீடிக்கும் என்றே சொல்ல வேண்டும்.

இலங்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே நோக்கம்

இத்தகைய ஒரு பின்னணியில்தான், விடுதலைப் புலிகள், மன்னார் மாவட்டத்தின் மடுக்கோவில் பிரதேசத்தில் இருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி, இலங்கை அரச படைகளினால், ஓரங்கட்டி பின்நோக்கி நகர்த்திச் செல்லப்பட்டபோது, எண்ணற்ற பொதுமக்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களை இந்தியா கண்டுகொள்ளவே இல்லை.

முள்ளிவாய்க்காலின் ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் மூன்று லட்சம் மக்களை, விடுதலைப்புலிகளின் படையணிகளுடன், ஒடுங்க வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய அரச படைகளின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்தியா எந்தவிதமான முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை.

அப்போது தமிழக முதல்வர் கருணாநிதி, அவருடைய மகள் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தமிழகத் தலைவர்களுடனும் இலங்கை இராணுவத்தின் எறிகுண்டு மழைக்குள்ளே சிக்கித் தவித்த பொதுமக்கள் பலர் நேரடியாக, செய்மதி தொலைபேசிகள் வழியாக, தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சி கதறி துடித்து அழுத போதிலும், அவர்களுடைய அவலக்குரல்கள் இந்திய அரசாங்கத்தை அசைக்க முடியாமல் போனது.

இலங்கை – இந்தியா ஒப்பந்தமாகிய ராஜீவ் -ஜே.ஆர்.ஒப்பந்தத்தையடுத்து, யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அடையாளமாக, இந்திய அமைதிப்படைகளிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகள்….,

பின்னர், அதே இந்திய அமைதிப்படைக்கு எதிராகத் தமது தாக்குதல்களைத் தொடுத்தபோது, முல்லைத்தீவு காட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, எந்த நேரத்திலும், அவர் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தலாம் அல்லது அவரை உயிரோடு பிடிக்கலாம் என்றதொரு நிலைமை ஏற்பட்டிருந்தபோது,

அவர் மீதான முற்றுகையைக் கைவிட்டு, பின்வாங்குமாறு இந்தியப் படைகளுக்கு இந்திய அரசிடமிருந்து அவசர உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், அதே இந்தியாவும், அதன் அரசாங்கமும், முள்ளிவாய்க்காலில் அப்பாவிப் பொதுமக்கள் தாங்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதாகக் கதறி அழுத போது, அவர்களின் அவலக்குரல்களைக் கேட்டும், கேட்காதது போன்று இந்திய அரசு நடந்து கொண்டது.

இந்திய அரசாங்கத்தின் இந்த இரண்டு செயற்பாடுகளையும் இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள், இந்தியாவின் அந்த இரண்டு செயற்பாட்டின் பின்னணி மற்றும் அப்போதைய அரசியல் சூழல்களையும் தளமாக வைத்து உற்று நோக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.

இவ்வாறான வரலாற்றுச் சம்பவங்களின் சங்கிலித் தொடரில், இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், இறுதி யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டிய கட்டத்தில், அத்தகைய ஒரு விசாரணையை இந்தியா வரவேற்கும், அத்தகைய ஒரு முயற்சிக்கு உதவிபுரியும் என்று கூறுவதற்கில்லை.

ஆகவேதான், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணை அறிக்கை, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், சர்வதேச விசாரணையொன்றிற்குப் பதிலாக உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்வதை இந்தியா விரும்புகின்றது என்றும் சொல்லப்படுகின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து  இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான விசாரணைக்கு உந்து சக்தியாக அமைந்திருந்தன.

unoஇந்தப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டபோது சிலவேளைகளில் இந்தியா ஆதரவளித்தது. சில சமயங்களில் ஆதரவளிக்காமல் இருந்தது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முழு அளவிலான விருப்பத்திலும் பார்க்க, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் இராணுவ, அரசியல்.

பொருளாதார நலன்களைப் பாதிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த சில நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான, ஒரு வாய்ப்பாகக் கருதி, இந்தியா செயற்பட்டமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இலங்கையைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்ற அதேநேரத்தில், யுத்த காலத்தில் அந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு கூறும்போது, அது தொடர்பான விசாரணைகளில், யுத்தத்தை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியாவையும் தொடர்புபடுத்த நேரிடலாம் என்று ஆய்வாளர்களினால் கருதப்படுகின்றது.

இந்தியா மட்டுமல்ல. இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவி புரிந்த ஏனைய நாடுகளும்கூட இத்தகைய நிலைமைக்கு ஆளாக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது இதன் காரணமாகத்தான் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை, அண்டை நாடு என்ற வகையில், இந்தியா விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச விசாரணைக்குப் பதிலாக உள்ளூர் விசாரணையொன்றை நம்பகமான முறையில் மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது.

இத்தகைய உள்ளூர் விசாரணையை இந்தியாவும், ஏன், அமெரிக்காவும்கூட ஏற்றுக்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார்.

முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் பாதிக்கப்பட்ட மக்களையோ, தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளையோ அல்லது அத்தகைய விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்த ஐ.நா.வையோ, சர்வதேச சமூகத்தையோ அல்லது சர்வதேச மனித  உரிமை  அமைப்புக்களையோ, ஜனநாயகத்தின்  மீது பற்றுள்ளவர்களையோ  திருப்திப்படுத்தவில்லை.

அந்த விசாரணைக் குழுவையும், அதன் நடவடிக்கைகளையும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே அவர்கள் நோக்கினார்கள்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று அதன் முன் தோன்றி சாட்சியமளித்தவர்களே முகத்தில் அடித்தாற்போல தெரிவித்திருந்தார்கள்.

விசாரணைகளின் முடிவில், அந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கையற்றவை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று விசாரணைகளின் முடிவில் தெரிவித்திருந்தது.

ஆயினும், அந்த ஆணைக்குழு முன்வைத்திருந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகமும், ஐ.நா.வும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தை பல தடவைகள் வலியுறுத்தியிருந்தன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விவாதங்களின் போது, இந்தப் பரிந்துரைகளும் எடுக்கப்பட்டிருந்தன. மட்டுமல்லாமல், அவற்றை நிறைவேற்றுவதற்கு அன்றைய அரசுக்குக் கால அவகாசமும்கூட வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், முன்னைய அரசாங்கம் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உளப்பூர்வமாக விரும்பியிருக்கவில்லை. அதனால்  சாக்குப் போக்குகளைக் கூறி காலத்தைக் கடத்தியதன் பின்னர், சர்வதேச அழுத்தத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது.

அந்த ஆணைக்குழுவின் கடமைகள் குறித்து பெரிதாகக் கூறப்பட்டிருந்தாலும்கூட, அதன் விசாரணை நடத்தைகள், மனித உரிமை மீறல்களில் இலங்கை அரச படைகள் ஈடுபடவே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன.

அத்துடன் விடுதலைப்புலிகளே மனித உரிமை மீறல்களிலும், போர்க்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள் என்று குற்றம் சாட்டுவதற்குத் தேவையான ஆதாரங்களைத் தேடும் வகையிலேயே அமைந்திருந்தன.

புதிய அரசாங்கம் உள்ளூர் விசாரணை பொறிமுறையொன்றை அமைக்கப்போவதாக அறிவித்துள்ள அதேநேரம், முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு நம்பகமற்ற விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடித்திருக்கின்றது.

இந்த நிலையில் தனது விசாரணைகளை திருகோணமலையில் நடத்தப் போவதாக அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுடைய நம்பகத்தன்மை குறித்து, பல்வேறு விமர்சனங்கள் வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

மறுபுறத்தில் இந்த விசாரணைகளுக்கு சர்வதேச அந்தஸ்து ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச நிபுணர்களாக நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பணக் கொடுப்பனவு குறித்தும் இப்போது கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

கடந்த வருடம் ஜூலை மாதம் மூன்று சர்வதேச நிபுணர்கள் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நியமனத் திகதியில் இருந்து இந்த பெப்ரவரி மாதம் வரையில் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருக்கின்றது.

இந்தப் பணமானது, அமைச்சரவையின் அனுமதியின்றி, மத்திய வங்கியில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச நிபுணர்கள் அரசாங்கம் விரும்பிய வகையில் விசாரணை அறிக்கையை அல்லது விசாரணைகளின் முடிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கான கையூட்டாகவே கருதப்படுகின்றது.

சர்வதேச நிபுணர்கள் என்றால் பெருமளவு பணம் கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டியிருக்கும் என்றாலும், அது அரசாங்கத்தின் நிதி நடைமுறைகளுக்கு மாறான வகையில் மத்திய வங்கியில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தக் குழுவினர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராகிய தன்னைச் சந்திக்கவே இல்லை என்றும், மூன்று தடவைகள் அவர்கள் இலங்கை வந்து சென்றதுடன், தன்னிச்சையாக அவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தார்கள் என்றும் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தொடர்பான விசாரணை பின்போடப்பட்டிருப்பதுவும், சர்வதேச விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணையொன்று நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவித்தலும் பலத்த சந்தேகங்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.

அத்துடன் அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் நடைபெறப் போகின்ற உள்ளூர் விசாரணை நம்பகமான முறையில் நடத்தப்படுமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கின்றது.

Share.
Leave A Reply