‘‘உங்கள் காதலி/மனைவி மீதான உங்கள் அன்பைக் காட்ட, காதலர் தினம் என்ற ஒரு தினத்தில்தான் அது நிகழ வேண்டும் என்பதில்லை.
காதல் கொள்ளும் எல்லா நாளும், காதலர் தினமே!’’ – காதலால் கனிந்த கண்களுடன் சொல்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த 74 வயது தாத்தா, பில் பிரஸ்னன்.
தன் மனைவி கிரிஸ்டன் பிரஸ்னனுக்கு, அவர்களின் முதல் ‘டேட்டிங்’ நாளில் இருந்து, இன்று வரை கிட்டத்தட்ட 40 வருடங்களாகத் தவறாமல் தினமும் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் இவர், ‘‘எல்லா கடிதங்களிலும் தவறாமல் ‘ஐ லவ் யூ, மை டார்லிங்’ என்றெழுதி, முடிவில் சிம்பலுடன் கையெழுத்திடுவேன்!’’ என்று உலக மீடியாக்களிடம் தன் காதல் கடித வரலாறை சொல்லிக்கொண்டிருக்கிறார்!
இதுவரை பல்லாயிரம் கடிதங்களையும், கிரீட்டிங் கார்டுகளையும் தன் மனைவிக்கு அளித்துள்ள பிரஸ்னன், தன் மனைவி வெளியூரில் இருந்த நாட்களிலும், தவறாமல் தன் கடிதத்தை போஸ்ட் மூலம் அவரிடம் சேர்த்துவிடுவது ஆச்சர்யம்.
நியூஜெர்ஸியில் உள்ள அவர்களது இல்லத்தில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் ஆண்டுகளின் அடிப்படையில் 25 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது, நம் ஆச்சர்யத்தை இன்னும் கூட்டுகிறது!
‘‘அந்தக் கடிதங்கள் எல்லாம் எங்கள் அழகிய வாழ்க்கையின் சாட்சி. 1
980ம் ஆண்டின் ஒரு நாளில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை நான் இப்போது எடுத்துப் படித்தால், அன்று நாங்கள் சென்ற ரெஸ்டாரன்டோ, நாங்கள் பார்த்த திரைப்படமோ, அந்த நாளில் நாங்கள் பகிர்ந்துகொண்ட அன்போ அதில்சிறகடித்துக்கொண்டிருக்கும்!’’ என்கிறார் பிரஸ்னன் வெட்கத்துடன்! தென்றல் மட்டுமல்ல, புயல்களையும் கடந்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி.
‘‘சில வருடங்களுக்கு முன் எனக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்தபோது, ‘கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பது நீங்கள் அல்ல, நாம்!’ என்று எனக்கு அரவணைப்புத் தந்தார் என் மனைவி.
சில வருடங்களில் அவருக்கும் கேன்சர் என்று தெரியவந்தபோது, அதே அரவணைப்பை நானும் தந்தேன் அவருக்கு!’’ என்று நம்மைச் சிலிர்க்க வைக்கிறார், பிரஸ்னன்.
இத்தனை அழகான காதல் கிடைக்கப்பெற்ற கிர்ஸ்டன் பிரஸ்னன் என்ன சொல்கிறார்..?
‘‘இதுவரை எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கிறது என்றாலும், அதற்காக சண்டை போட்டுக்கொண்டதே இல்லை. அதைப் பேசி தீர்த்துக்கொள்வோம்.
ஒரு வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கான முதல் தேவையாக நாங்கள் நினைப்பது, அன்றைய தினம் உங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை அன்றே தீர்த்து விடுங்கள்.
படுக்கைக்குச் செல்லும்போது எப்போதும் பிரச்னையையோ, பிரச்னையின் எச்சத்தையோ சுமக்காதீர்கள். காதலை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்!’’- அன்பும் அனுபவமுமாக கிர்ஸ்டன் பிரஸ்னன் சொல்ல, இந்த காதலர் தினத்திற்கு தன் மனைவிக்கு சாக்லெட் மற்றும் ஃபைன் ஒயின் இணைந்த ரொமான்டிக் டின்னர் கொடுத்து அசத்தியிருக்கிறார், பிரஸ்னன்!
லவ் இஸ் பியூட்டிஃபுல்!
– ஜெம்.எம். ஜனனி