5 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலான சிறார்கள் இராணுவ பயிற்சி முகாமொன்றில் பயிற்சி பெறுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
சிரிய ரக்கா நகரிலுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்டிகளுக்கான நிறுவனம் என பெயர் சூட்டப்பட்ட தீவிரவாத பயிற்சி முகாமிலேயே மேற்படி சிறுவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த 9 நிமிட வீடியோ காட்சியில் சின்னஞ்சிறார்கள் தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் கட்டளைகளுக்கு அடி பணிந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அந்த வீடியோ காட்சியின் பின்னணியில் அரேபிய இசை ஒலிக்கிறது.சிறுவர்கள் நீரைப் பயன்படுத்தி மத ரீதியான சுத்திகரிப்பை மேற்கொண்ட பின்னர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து அவர்கள் இராணுவ பயிற்சிகளை ஒத்த பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த வீடியோ காட்சியானது ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சமூக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த இணையத்தள பக்கத்தில் சின்னஞ்சிறார்கள் துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் காட்சிகளும் அவர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டவர்களின் தலைகளை ஏந்தியிருக்கும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.