“பிறந்து 30 வருஷமாயிடுச்சு. சினிமாவில் நுழைஞ்சப்ப நிறைய பண்ணனும்னு ஆசை இருந்தது. இப்போ எதுக்காகப் பொறந்தோம்னு ஒரு ஆன்மிகத் தேடல்தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு.
மனசுக்குள்ள ஒரு தெளிவு இருக்கு. சினிமாவில் எல்லாத்தையும் பார்த்திருக்கேன். கடைசி ரெண்டு வருஷத்தில் எதுவுமே இல்லாமல் இருந்த இன்னொரு பக்கத்தையும் பார்த்திருக்கேன்.
அதனால, இந்த வருடப் பிறந்த நாளை ரொம்ப நிம்மதியா கொண்டாடினேன்!” என்று கூறும் சிம்புவின் வார்த்தைகள் ஒவ்வென்றிலும் வழிகிறது வாழ்க்கை தத்துவங்கள்.
உங்கள் பிறந்தநாள் விருந்தில் நயன்தாரா கலந்துகொண்டது பரபரப்பாகி இருக்கிறதே?
ஏன் அவங்க வரக் கூடாது? என்னோட நடிக்க தினசரி படப்பிடிப்புக்கு வர்றவங்க, என்னோட பார்ட்டிக்கு வந்ததில் என்ன பரபரப்பு? நயன் மட்டுமில்ல, நிறைய பேர் அந்த பார்ட்டிக்கு வந்தாங்க. தனுஷ், நயன்தாரான்னு எல்லாரோடவும் நெருக்கமாத்தான் பழகுறேன்.
ஹன்சிகா, நயன்தாரா இருவருடனும் காதல் பிரிவிற்கு பிறகு நடித்திருக்கிறீர்கள். காதலிக்கும்போது இருந்த மனநிலை என்ன? நடிக்கும் போது இருந்த மனநிலை என்ன?
பாகவதர் காலத்தில் இருந்தது போலவே இப்பவும் நாம இருக்க முடியாது. வாழ்க்கைங்கிறது ஒரு சிலரோட மட்டும் முடியுற பொழப்பு இல்ல.
இப்படி நடந்திடுச்சேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தால் வாழ்க்கை நகராது. இந்தப் புரிதல் என் மனசில் தெளிவா இருக்கிறதாலதான் நயன், ஹன்சிகாவோட எதையும் பார்க்காமல் நடிக்க முடியுது.
நிகழ்காலம், வருங்காலம்னு நினைக்கிறது முட்டாள்தனம். இப்போ நகரும் மணித்துளிகள் மட்டுமே உண்மை.
நீங்கள் காதலிக்கும்போது பண்ணிய வேடிக்கையான விஷயம் என்ன?
நான் காதல் பண்றதே க்ரேஸியான விஷயம்தான். என்னை மாதிரி ஒருத்தன் காதலிக்கவே முடியாது. மூன்று காதலைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
2015 இல் திருமணத் திட்டம் உள்ளதா?
எதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்? நான் கல்யாணத்திற்கு எதிரானவன் இல்லை. கல்யாணம்கிறது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்ணிக்கொள்வது. கல்யாணம் நடக்கிற அளவுக்கு இப்போ விவாகரத்தும் நடக்கத் தொடங்கிடுச்சு.
கல்யாணம் பண்ணி விவாகரத்தாகி, அப்புறம் புரிதல் உண்டாகி, அதுக்கப்புறம்தான் கல்யாணம் சரியா அமையுது. ஒவ்வொரு பத்து வருடத்துக்கும் நம்முடைய கலாசாரமும், சமூகமும் மாறிக்கிட்டேதான் இருக்கு.
அதுக்கு ஏற்பத்தான் நாம வாழணும். அதை விட்டுட்டு, பின்னோக்கிப்போய் நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்ல முடியாது.
சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்திக்கிறவன்தான் இந்த சிம்பு. ஏதோ ஒரு பெண் பார்த்து, பேசி முடிச்சு, தாலி கட்டி வாழ்ந்துட முடியாது. ‘இவகிட்ட சாகுற வரைக்கும் தோற்கலாம்‘கிற அளவுக்கு மனசைப் பொளக்குற பொண்ணு கிடைக்கட்டும்.
உங்கள் படங்கள் வெளியாக மூன்று வருட இடைவெளி விழுந்துடுச்சே?
இனிமேல் இந்தப் பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். அதனாலதான் ‘இது நம்ம ஆளு’ படத்தை நானே தயாரிக்கிறேன்.
அதற்குப் பிறகு வரக்கூடிய படங்கள் எல்லாமே தேர்ந்தெடுத்து சரியாத்தான் பண்ணுவேன். கெளதம் மேனன் படத்தை முடிச்சிட்டு, செல்வராகவன் இயக்கும் படத்துக்கு ‘டேட்’ கொடுத்திருக்கேன்.
“தமிழில் குழந்தை மாதிரிக் கொஞ்சிறாங்க”
‘இந்தியா பாகிஸ்தான்’ படத்துக்காக விஜய் அன்டனியுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் சுஷ்மா ராஜ். கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சுஷ்மா ராஜ் வழங்கிய நேர்காணல்.
சுஷ்மா ராஜ் தமிழுக்கு வந்தது எப்படி?
சொந்த ஊர் ஆந்திரா. படித்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரு. ஆடை வடிவமைப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மொடலிங் செய்யப் பல வாய்ப்புகள் கிடைத்தன. விளம்பரங்கள் வழியே சினிமாவுக்கு வந்தேன்.
முதல் படம் ‘மகரந்தி’. கல்லூரி படிக்கும்போதே நடித்த இப்படம் பெரிய வெற்றியைத் தந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘மாயா’, ‘ஜோரு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் தந்த வாய்ப்புதான் ‘இந்தியா பாகிஸ்தான்’.
சினிமாவில் நடிக்க வந்ததை உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
அப்பா ரவிக்குமார் கட்டுமானத் துறையில் இருக்கிறார். அம்மா கஸ்தூரி குடும்பத்தலைவி. யஷ்வந்த், யாமினி என்று இரட்டை சகோதரச் சகோதரிகள் இருக்கிறார்கள்.
நான்தான் மூத்தவள். மிகவும் முற்போக்கான குடும்பம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததும் மறுக்காமல் சம்மதம் சொல்லிவிட்டார்கள்.
கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமா – எது பிடித்திருக்கிறது?
நான் கல்லூரி படிக்கும்போதே கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியிருக்கிறேன். இதனால், மேடை பயம் வந்ததில்லை. ஆனால், சினிமாவுக்குப் புதுசு என்பதால் ஆரம்பத்தில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என பலரும் என்னை நடத்திய விதம் எரிச்சலை ஏற்படுத்தியது.
பிறகு தமிழில் குழந்தை மாதிரித் தாங்கோ தாங்கென்று தாங்கி கொஞ்சவே ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த அன்பை, பாசத்தைத் தெலுங்கிலோ, கன்னடத்திலோ எதிர்பார்க்க முடியாது. நம்மைச் சுதந்திரமாக விட்டுவிடுவார்கள்.
உங்கள் நாயகன் விஜய் அன்டனி என்ன சொன்னார்?
விஜய் அன்டனியின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அவர் இசையமைத்த ‘நாக்க முக்க’ , ‘மக்கயாலா’ பாடல்கள் என்றால் தனி விருப்பம்.
அவர் நடித்த ‘நான்’, ‘சலீம்’ படங்கள் பார்த்தேன். இசையமைப்பாளராக இருந்துகொண்டு, நடிகனாக , தயாரிப்பாளராகக் கதைகளைத் தேர்வு செய்யும் திறமை விஜய் அன்டனிக்கு அதிகம்.