மைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர் அரண்மனையின் அடுத்த வாரிசு யார்? என்ற குழப்பம் ராஜ குடும்பத்தில் நிலவி வந்தது.
இந்நிலையில், காலஞ்சென்ற மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மூத்த சகோதரியான காயத்ரி தேவியின் பேரனான யடுவீர கோபாலராஜே அர்ஸ் என்பவரை அடுத்த வாரிசாக நியமிப்பது என ராஜ குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
23 வயது இளைஞரான இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்று வருகிறார்.
இவரை மைசூர் சமஸ்தானத்தின் அடுத்த அரசராக அறிவிக்கும் தத்தெடுக்கும் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மைசூர் அரண்மனையில் நடைபெற்றது.
மறைந்த மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாரின் மனைவியான ராணி பிரமோதா தேவி அவரை சம்பிரதாயப்படி, தனது மடியில் அமர வைத்து, யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என்னும் புதிய பெயரை சூட்டினார்.
பின்னர், வெள்ளி தேரில் ஏறி அரண்மனை வளாகத்தை புதிய மன்னர் சுற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் புதிய மன்னரின் பெற்றோர், கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் ராஜ குடும்பத்தை சேர்ந்த சுமார் 37 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
புதிய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கு வரும் மே மாதம் முறைப்படி முடிசூட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் மைசூர் அரண்மனையில் நடைபெறும் தசரா திருவிழா கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு புதிய மன்னரின் தலைமையில் நடைபெறும் என தெரிகின்றது.
எனினும், ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையாருக்கு கொள்ளி போட்ட காந்தாராஜ் உடையாருடன் பெரிய சட்ட போராட்டத்தை நடத்தி, வெற்றி பின்னரே மைசூர் ராஜாவின் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு புதிய மன்னர் பூரண உரிமை கோர முடியும் என கூறப்படுகிறது.