இலங்கையில் பாதுகாப்பு அமைச்சு எப்போதுமே சர்ச்சைக்குரியதொன்றாகத்தான் விளங்கி வந்திருக்கிறது.
கடந்த மூன்று தசாப்தங்களில் போரைக் கையாளும் அதிகாரம் பெற்றதாக விளங்கியதால், பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து வந்தது.
கடந்த காலங்களில் வரவு–செலவுத் திட்டத்தின் பெரும் பகுதியை விழுங்குகின்ற அமைச்சாகவும் இது விளங்கி வந்திருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தில், பாதுகாப்பு அமைச்சு என்பது, எல்லோரையும் நடுங்க வைக்கும் ஒன்றாகவே இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அப்போது, பாதுகாப்பு அமைச்சு எடுத்த முடிவுகளும் கையாண்ட வழிமுறைகளும், எப்போதுமே சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்தன.
அதனால்தான், பாதுகாப்பு அமைச்சின் முடிவுகள், செயற்பாடுகளை முன்னிறுத்தி இப்போதைய ஆட்சியில், கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் பாதுகாப்பு அமைச்சை சுற்றி நிகழும் சர்ச்சைகள் தொடரத்தான் செய்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே, பாதுகாப்பு அமைச்சர் பதவியை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனக்குத் தர வேண்டும் என்று பேரம் பேசியதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனாலும், பாதுகாப்பு அமைச்சர் பதவி ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதால், அதில் எந்த திருத்தங்களும் செய்யப்படாமல், சரத் பொன்சேகாவுக்கு அது கிடைப்பதற்கு வழியில்லை.
சரத் பொன்சேகாவின் குடியுரிமை மீள அளிக்கப்படாத நிலை, பாராளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை இந்த இரண்டும், பாதுகாப்பு அமைச்சில் சரத் பொன்சேகா செல்வாக்குச் செலுத்த தடையாக இருந்து வந்தன.
இப்போது, சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு விட்டாலும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திருப்பிக் கொடுக்க மறுக்கிறார் ஜயந்த கெட்டகொட.
இதனால், அவரால் அரசாங்கத்துக்குள் நுழையவோ, பாதுகாப்பு அமைச்சுக்குள் முக்கிய பதவியை ஏற்கவோ முடியாத நிலை காணப்படுகிறது.
பாதுகாப்புச் செயலர் பதவியை பெறுவதற்குத் தான் விரும்பவில்லை என்றும், அது கோத்தாபய ராஜபக் ஷவினால் கறைப்படுத்தப்பட்டது என்றும் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி, பாதுகாப்பு செயலர் பதவியை ஏற்க வேண்டும் என்றால், அரசியலைத் துறக்க வேண்டும் என்றும் அதற்குத் தான் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினராகி, பாதுகாப்பு அமைச்சுக்குள் அதிகாரம் செலுத்தும், விடயத்தில் சரத் பொன்சேகா உறுதியாக இருக்கிறார்.
அவர் எதிர்பார்ப்பது, முழுமையான பாதுகாப்பு அமைச்சையோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியையோ, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியையோ தான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், பாதுகாப்பு அமைச்சைத் தன் வசம் வைத்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜேவர்த்தனவை நியமித்திருந்தார்.
ருவன் விஜேவர்தன, ஐ.தே.கவின் தலைமைக்கான அடுத்த வாரிசாக ரணில் விக்கிரமசிங்கவினால் வளர்க்கப்பட்டு வருபவர் என்பது பலருக்குத் தெரியாத விடயம்.
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வம்சாவளியில் வந்தவர் தான் ருவன் விஜேவர்தன.
தனது மருமகனான ருவன் விஜேவர்தனவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க.வின் தலைவராக்கும் கனவுடன், அவரை முக்கியத்துவப்படுத்தி வருகிறார்.
அதனால்தான், பாதுகாப்புத் துறையுடனோ, நிர்வாகத்துறையுடனோ எந்த விதத்திலும் சம்பந்தப்படாத, அதுசார்ந்த அனுபவத்தைக் கொண்டிராத ருவன் விஜேவர்தனவை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமித்திருந்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், இந்த மாத முதல் வாரத்தில் அவர் வடக்கு, கிழக்கில் உள்ள படைத் தலைமையகங்களுக்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்தார், படையினர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
காரணம், வடக்கில் இருந்து படைகளையோ முகாம்களையோ விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாணத்தில், அளவுக்கதிகமாகப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
வடக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதும், முகாம்களை அகற்றுவதும், அங்கு இயல்புவாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான விடயமாக இருக்கிறது.
இது தற்போதைய அரசாங்கத்துக்கும் நன்றாகவே தெரியும்.ஆனாலும், படைகளை அகற்றுவதில்லை என்ற உறுதிமொழியை வெளியிட்டதன் மூலம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கடுமையான விமர்சனங்களைத் தமிழர் தரப்பிடமிருந்து எதிர்கொள்ள நேரிட்டது.
சிங்கள மக்களையும், படையினரையும் திருப்திப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணசபைக் கூட்டத்தில் கடுமையாகவே விமர்சித்திருந்தார்.
அதனை மாமன், – மருமகன் அரசியல் என்று சுட்டிக்காட்டிய அவர், ரணில் விக்கிரமசிங்கவின் குரலைத் தான் ருவன் விஜேனவர்தன பிரதிபலித்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு, கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்ட சில நாட்களிலேயே, ருவான் விஜேவர்தனவின் அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுப்படுத்திக் கொண்டார்.
கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, ருவன் விஜேவர்தனவின் கண்காணிப்புக்குரிய- அவரால் மேற்பார்வையிடத்தக்கதாக, அதிகாரம் பெற்ற நான்கு துறைகளை மட்டுமே பட்டியலிட்டிருந்தார்.
இந்த நான்குமே, பாதுகாப்பு அமைச்சில் உள்ள முக்கியத்துவமற்ற நான்கு துறைகள் என்பது கவனிக்கத்தக்கது.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடற் படையணி ஆகியவை மட்டுமே இப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் பொறுப்பிலுள்ள நான்கு துறைகளாகும்.
பாதுகாப்பு அமைச்சில், 20இற்கும் அதிகமான துறைகள் இருக்கின்றன.
அவற்றில் நான்கு துறைகளை மட்டுமே ருவன் விஜேவர்தனவிடம் ஒப்படைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
எஞ்சிய 15 வரையான துறைகளையும் ஜனாதிபதி தன்வசமே வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால், இராணுவத்தினரையோ அல்லது இராணுவ முகாம்களையோ மேற்பார்வை செய்யவோ அல்லது அவற்றின் நிர்வாகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவோ முடியாது.
இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த இந்த முடிவுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஐ.தே.க.வின் எதிர்காலத் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவினால், வளர்க்கப்படுவதால் தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அவரது சிறகுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்டியிருக்கிறார் என்கிறது ஒரு தகவல்.
கட்சி சார்ந்த முடிவாக இது இருக்குமேயானால், வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐ.தே.க.வுக்கும் இடையில் பெரும் புகைச்சல் ஏற்படும்.
அதேவேளை, ருவன் விஜேவர்தனவின் சிறகுகளை வெட்டியதற்கு சரத் பொன்சேகாவும் மற்றொரு காரணம் என்ற கருத்தும் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சைத் தற்போது, போதிய திறனற்றவர்களே நிர்வகித்து வருவதாக அவர் அண்மையில் தான் குற்றம்சாட்டியிருந்தார்.
அதுமட்டுமன்றி, மீண்டும் ஜெனரல் பதவி உள்ளிட்ட அனைத்தும் மீளளிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் பாதுகாப்புத் துறைசார்ந்த ஆலோசனைகளையும் வழங்கத் தொடங்கியிருப்பதாகத் தகவல்.
ஜெனரல் சரத் பொன்சேகா தான், பாதுகாப்பு அமைச்சுக்குள் நுழைவதற்கு வசதியாக, மைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி வரு வதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், பாது காப்பு அமைச்சு என்பது அதிகாரத்தை தக்கவைக்கும் மையமாக மீண்டும் மாறியி ருக் கிறது.
முன்னைய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கையிலேயே இருந்தாலும், சர்வ வல்லமையும் பெற்றவராக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய ராஜபக் ஷவே இருந்தார்.
அங்கு எதிர்த்துக் கேள்வி எழுப்ப யாராலும் முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை.
பாதுகாப்பு அமைச்சில் அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டி ஆரம்பமாகி யிருக்கிறது, இது, மைத்திரிபால சிறிசேன, சரத் பொன்சேகா, ருவன் விஜேவர்தன என்பவர்களுக்கிடையிலான போட்டியாக மட்டு மன்றி, கட்சிசார்ந்த போட்டியாகவும் மாறி வருவதாகவே தெரிகிறது.
இது, வடக்கின் பாதுகாப்பு விவகாரங் கள் சார்ந்த உறுதியான முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் பெரும் பின்ன டைவாக அமையும்.
ஏனென்றால், ஒருவரையொருவர் சாட்டிக் கொண்டு நழுவிக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.