யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவது அத்தியாவசியமானதாகும்.
இதனை விளங்கிக்கொள்ளாமல் பலரும் இந்த உள்ளக விசாரணை யில் நம்பிக்கையில்லையென்று தெரிவித்துவருகின்றனர்.
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 10ஆவது பந்தியில் சர்வதேச விசாரணையும் உள்ளக விசாரணையும் நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டிருக்கிறது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் அதன் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதே எம் அனைவரதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.
எனவே உள்ளக விசாரணையானது இதுவரையில் தெரிந்த உண்மைகளுக்கு அப்பால் வேறு வெளிவராத பல உண்மைகளை கண்டறிய வாய்ப்பாக அமையுமெனவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படாமல் சர்வதேச விசாரணை மட்டும் நடத்தினால் அந்த அறிக்கை வெறும் அறிக்கையாக மட்டுமே இருக்கும்.
உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் இரண்டையும் ஒப்பிட்டு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். அதேநேரம் உள்ளக விசாரணையின் மூலம்தான் போர்குற்ற விசாரணையை முன்னெடுத்து தக்க நடவடிக்கை எடுக்க முடியும். சர்வதேச விசாரணையை மட்டும் நடத்தி எந்தவித பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
எவ்வாறு நடக்கும்?
அது வெறும் ஒரு அறிக்கை அளவிலேயே வெளியிடப்பட்டு எங்கோ ஒரு மூலையில் முடங்கி கிடக்கும். மேலும் குற்றம் இளைத்தவர்களே விசாரணை நடத்துவதில் எமக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் இப்போது அப்படியல்ல, உள்ளக விசாரணையை நடத்துவது இந்நாட்டு அதிகாரிகள் என்றாலும், அது சர்வதேச விசாரணைகளை நடத்தியவரின் மேற்பார்வையின் கீழ்தான் செயற்படும்.
இந்த விதிமுறை ஐ.நா. பிரேரணையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. சர்வதேச விசாரணையை நடத்தியவர்களின் மேற்பார்வையின்கீழ்தான் உள்ள விசாரணை நடத்தப்படவேண்டும் என்று குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்வம் காட்டாத மஹிந்த அரசு
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு உள்ளக விசாரணை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இப்போதைய அரசாங்கம் உள்ளக விசாரணை நடத்த முன்வந்திருக்கிறது. இதை நாம் வரவேற்கிறோம்.
அப்படி நடக்கும் பட்சத்தில் சர்வதேச விசாரணையின் அறிக்கையும், உள்ளக விசாரணையின் அறிக்கையும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்க முடியாது. அதனால் உள்ளக விசாரணை எமக்கு சாதகமாகத்தான் அமையும்.
அறிக்கை தாமதம்
சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது பிற்போடப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்தமாக அதை கைவிட்டுவிடவில்லை.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதற்குள் உள்ளக விசாரணையும் நடத்தப்பட்டால் இரண்டையும் வைத்துக்கொண்டு நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்னேறலாம்.
காணி விவகாரம்
தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க நாம் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறோம். அது நடக்கும்வரை நாம் அதற்கான அழுத்தங்களை தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருப்போம்.
காணாமல் போனவர் விவகாரம்
காணாமல் போனவர்கள் இறந்திருந்தால் அவர்களுக்கு நிதியதவி வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெறும் நிதியுதவி மட்டும் வழங்குவதால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை. அவர்களைக் கடத்தியது யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றி முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை வழங்க வேண்டும் என்றார்.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்
காலம் பிற்போடப்பட்டாலும் பலமானதொரு சர்வதேச விசாரணை அறிக்கை வெளிவருமாயின் அதுவே எமக்கு கிடைக்கும் சாதகமான விளைவாகும்.
உள்ளக விசாரணை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிப்பது வெளிவரவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையேயாகும். எதிர்வரும் செப்டம்பர் வரையிலே இலங்கைக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவர இருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணை அறிக்கையேயாகும். இலங்கையின் உள்ளக விசாரணை அறிக்கை அல்ல.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டும் என நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.
கண்துடைப்பாக இருக்கக்கூடாது
எனினும் முன்னைய அரசாங்கம் இவை எதனையும் கவனத்திற்கு கொள்ளாது தான்தோன்றித்தனமானதொரு செயற்பாட்டில் சென்று கொண்டிருந்தது.
எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் புதிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளதுடன் இவ் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமேயாகும்.
எனினும் இவை வெறும் கண் துடைப்பாக இருப்பின் நாம் தொடர்ந்தும் எமது அழுத்தங்களை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஐ.நா. தீர்மானத்தின்படி இலங்கை விடயத்தில் இரு வேறு விதமான வழிமுறைகளை தெரிவித்தனர். அதாவது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைச் செயற்பாடொன்று சுயாதீனமாக இடம்பெற வேண்டும்.
அவ் விசாரணை ஐ.நா. உயர்ஸ்தானிகரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும் எனவும் அதே சந்தர்ப்பத்தில் உள்ளக விசாரணைக்கு சமாந்தரமான சர்வதேச விசாரணையொன்றும் இடம்பெறுமென சுட்டிக்காட்டப்பட்டது.
பாரிய தவறுகள்
சர்வதேச விசாரணை நடத்தப்படுவது சாதாரண செயற்பாடாகும். ஆனால் இலங்கையின் அனுமதியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதே உண்மைகளை கண்டறிய சாதகமாக அமையும்.
அதையே ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கையரிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியது. எனினும் இச்செயற்பாட்டில் முன்னைய அரசாங்கம் பாரிய தவறுகளை இழைத்து விட்டது.
இப்போது அனைத்து விடயங்களுக்கும் நல்லதொரு சந்தர்ப்பம் அமைந்துள்ள நிலையில் ஐ.நா. விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருப்பது எமக்கு ஏமாற்றமளிக்கும் விடயமே.
தெரியாத உண்மைகள் வரலாம்
எனினும் ஒரு விடயத்தினை கருத்திற் கொண்டு நாம் செயற்பட வேண்டும். என்னவெனில் இலங்கை தொடர்பில் ஐ.நா. விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டிருப்பது.
இதுவரையில் தெரிந்த உண்மைகளுக்கு அப்பால் வேறு வெளிவராத பல உண்மைகளை கண்டறிய வாய்ப்பாக அமையுமெனவும் செப்டெம்பரில் கட்டாயம் ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாக்குறுதியளித்துள்ளார்.
அநீதிகள் முழுமையாக வரவேண்டும்
எனவே, தற்போது பிற்போடப்பட்டிருக்கும் அறிக்கை மேலும் பலப்படுத்தப்பட்டு நடுநிலையானதும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யக் கூடிய வகையிலும் அமையுமெனின் இவ் அறிக்கை பிற்போடப்பட்டதால் பாதகம் ஏதும் இல்லை.
ஏனெனில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் அதன் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதே எம் அனைவரதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.
அதனை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்தது. இப்போது புதிய அரசாங்கம் இவ் விசாரணைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது சர்வதேச ஒத்துழைப்பினை ஏற்றுக்கொண்டமைக்கு சமமானது.
எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையினை வெளியிடுவதனால் அவ் அறிக்கையின் மூலம் வெளிவரும் உண்மைத் தன்மைகள் இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளை சிறப்பாக கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகளையும் உண்மைகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அடிப்படையாக அமையும். என்பதனை கருத்திற் கொள்ள வேண்டும்.