அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விரியண்டா அல்வரேஸ் என்பவர் தனது மகளை அழைத்துக்கொண்டு ஹூஸ்டன் நகரில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றார்.
அப்போது பூங்காவிற்கு வந்த விரியண்டாவின் மகளின் தோழியான விக்டோரியா என்பவர், அவரது மகளை சரமாரியாக தாக்கினார்.
சண்டை முற்றியதில் இரண்டு இளம்பெண்களும் நீண்ட நேரம் கட்டி புரண்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். ஆனால் அருகில் இருந்தவர்களோ சண்டையை விலக்கி விடாமல் தங்களது மொபைலில் படம் பிடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் தன் மகளை தாக்கியதை பார்த்து ஆத்திரமடைந்த விரியண்டா, தனது கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து விக்டோரியாவின் தலையை நோக்கி குறிவைத்துள்ளார்.
அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விரியண்டாவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, என் மகளை தாக்கிய பெண்ணை அச்சம் கொள்ள செய்ய தான் துப்பாக்கியை நீட்டினேன் என்றும் அந்த துப்பாக்கியில் குண்டுகள் இல்லை என்றம் விரியண்டா கூறியுள்ளார்.
எனினும் இவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 35,000 டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திடுமாறு உத்தரவிட்டார்.
இந்த சண்டை குறித்து விசாரணை செய்ததில், ஒரு இளைஞனுக்காக அவர்கள் இருவரும் சண்டையிட்டது தெரியவந்தது.
மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் சண்டையிட்டதால், அந்த இரண்டு மாணவிகளையும் பள்ளி நிர்வாகம் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நீக்கியுள்ளது.