ருத்ரமா தேவி படத்துக்காக ரூ 5 கோடி செலவில் செய்யப்பட்ட பண்டைய பாணியிலான தங்க நகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநர் குணசேகரன் உருவாக்கி வரும் சரித்திரப் படம் ருத்ரமா தேவி. தெலுங்கு சினிமா உலகம் பார்த்திராத பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது.
அனுஷ்கா
ராணி ருத்ரமா தேவியாக இதில் நடித்துள்ளார் அனுஷ்கா. அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், சுமன், விஜயகுமார், ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரேசா, ஹம்சா நந்தினி, அதிதி செங்கப்பா என முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
பிரமாண்ட செட்கள்
ஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்படத்திற்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான துணை நடிகர்கள் பங்குகொள்ள பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். அரண்மனை, தர்பார், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடைவீதி, குளம் என 16-க்கும் மேலான அரங்கங்களை தோட்டாதரணி அமைத்து கொடுத்துள்ளார்.
3டி
முழுக்க முழுக்க ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டோடு 3 டி வேலைகள் நடைபெறுகிறது. இதில் 110-க்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பலகோடிகள் செலவு செய்துள்ளனர்.
சென்னையில் தயாரான தங்க நகைகள்
இந்த படத்திற்காக சென்னையில் உள்ள என்.ஏ.சி. நகைக் கடையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் ருத்ரமாதேவிக்காக தங்க ஆபரணங்கள், அன்றைய கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன.