அதுவொரு சுவரொட்டி விளம்பரம். பெரும்பாலும் வெளிநாட்டவரின் நடமாட்டம் அதிகமான இடங்களில் காணலாம். வெண்ணிறத் தோலுடன் அழகான பெண். அவள் மேடிட்ட வயிற்றுடன் புன்னகைத்துக் கொண்டிருப்பாள்.
உங்கள் பிள்ளையை நாம் சுமக்கிறோம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும் உங்களுக்கு உன்னதமான பரிசை அளிப்பதில் எமக்கு மகிழ்ச்சி என்ற கவர்ச்சிகரமான வசனங்களையும் காணலாம்.
அது வேறொன்றும் அல்ல. பிள்ளைகள் இல்லாத தம்பதியரின் கருவை வேறொரு பெண்ணின் கருவில் சுமக்கச் செய்யும் ‘வாடகைத் தாய் சேவை’ பற்றிய விளம்பரம்.
இத்தகைய விளம்பரங்களை தாய்லாந்தில் காணலாம். இந்தியாவின் சில பாகங்களிலும் காணக்கூடியதாக இருக்கும். குஜராத் மாநிலம் சிறந்த உதாரணம்.
இங்கு வாடகைத் தாய் சேவையை நடத்தும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. பிள்ளைப்பேறு நாடும் தம்பதியினர் நிறுவனங்களைத் தொடர்பு கொள்வார்கள். அவர்களின் கருவை சுமக்க பெண்ணொருவர் முன்வருவார்.
பத்துமாதம் கருவைச் சுமந்து, சிசுவை ஈன்றெடுத்ததும் அவரது பணி முடிவடைந்து விடும். பிள்ளைப்பேறு நாடிய பெற்றோரிடம் சிசுவை ஒப்படைப்பார்.
அதற்காக அவருக்கு காசு கிடைக்கும். அதன் பின்னர், அவருக்கும், அவரது வயிற்றில் வளர்ந்த பிள்ளைக்கும் தொடர்பில்லை.
இந்த வாடகைத் தாய் சேவை பற்றி மீண்டும் உலக மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. இதற்கு காரணம், கடந்த வாரம் தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.
இதன் பிரகாரம், வெளிநாட்டவர்களும், சேர்ந்து வாழும் ஒருபாலினத்தவரும் வாடகைத் தாய் சேவையை நாட முடியாது. அது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆண் -பெண் தம்பதியர் மாத்திரமே வாடகைத் தாய் மூலம் பிள்ளைப் பேற்றை நாடலாம். அவர்களில் ஒருவரேனும் தாய்லாந்து பிரஜையாக இருப்பது கட்டாயமானது. இது தவிர, வாடகைத் தாய் சேவையில் எவரும் பணம் சம்பாதிக்க முடியாது.
காசு கொடுத்து கருப்பையை வாடகைக்குப் பெறுதல் என்பது இன்றோ, நேற்றோ ஆரம்பமான விடயம் அல்ல. பல்லாண்டு காலமாக தொடர்வதாகும்.
இதனை அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் காணலாம். பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தம்பதியர் குஜராத்திற்கும், தாய்லாந்திற்கும் படையெடுக்கிறார்கள் என்றால், அதற்கு மலிவாகக் கிடைக்கும் வாடகைக் கருப்பைகள் முக்கியமான காரணம்.
இந்தப் பின்புலத்தில் இந்தியாவிலும், தாய்லாந்திலும் கருப்பைகளை வாடகைக்கு விடுதல் என்பது சேவை என்ற நிலையைத் தாண்டி, பெரும் வர்த்தகமாக மாறியிருக்கிறது.
ஒருபுறத்தில் காசுக்காக அலையும் தரகர்கள், பசிக்கொடுமையின் பிடியில் இருந்து விடுபடுவதற்காக எதனையும் செய்யத் தயாராக இருக்கும் பெண்கள். மறுபுறத்தில், பிள்ளைப் பேற்றிற்காக பணத்தை வாரியிறைக்கத் தயாராக இருக்கும் வெளிநாட்டவர்கள்.
இருசாராரையும் ஒரே புள்ளியில் சந்திக்கச் செய்யக்கூடிய வசதிகள். குறிப்பாக, காளான்களாக முளைத்திருக்கும் வைத்தியசாலைகள் இருக்கும்போது, வாடகைத் தாய் சேவை பெரும் வணிகமாக மாறியதில் வியப்பேதும் இருக்க முடியாது.
வயிறு மேடிட்ட அழகான பெண்ணின் சுவரொட்டியில் தென்படும் கவர்ச்சி, கருப்பையை வாடகைக்கு விடும் வணிகத்தின் உண்மையான முகம் என்று எவரும் நம்பிவிடலாம்.
அது அப்படியில்லை என்பதை அம்பலப்படுத்துவதற்கு எத்தனையோ கதைகள் உள்ளன. அவற்றில், கெமி என்றழைக்கப்படும் சிறுவனின் கதை முக்கியமானது.
தாய்லாந்தில் ஐந்து வருடங்களாக விவாதிக்கப்படும் சட்டம் ஒரு வருடத்திற்குள் அமுலுக்கு வந்துள்ளது என்றால், அதற்கு கெமியின் கதையால் விளைந்த அழுத்தம் தான் பிரதான காரணம் எனலாம்.
இந்தக் கதையின் பிரதான கதாபாத்திரம், பட்டாராமன் சன்புவா என்ற தாய்லாந்து பெண். இரு குழந்தைகளின் தாய். வறுமையில் இருந்து மீள்வதற்காக அவுஸ்திரேலிய தம்பதியின் கருவை வயிற்றில் சுமக்க சம்மதித்தாள்.
அந்தத் தம்பதியின் பெயர் விபரங்கள் அவளுக்குத் தெரியாது. அதனை அறிந்து கொள்வது அவளின் வேலை அல்ல. தரகர்கள் மற்றும் வாடகைத்தாய் சேவையை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனங்களின் வேலை.
சன்புவாவின் வயிற்றில் அவுஸ்திரேலிய தம்பதியின் கரு வளர்ந்தது. மருத்துவர்கள் ஸ்கேன் செய்தபோது, இரட்டைக் குழந்தைகள் கருக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் இன்னொரு கசப்பான உண்மையையும் சொன்னார்கள்.
கருவிலுள்ள ஒரு குழந்தை ஆரோக்கியமானதாக இருந்தாலும், மற்றதைப் பற்றி உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்கள். அவுஸ்திரேலிய தம்பதி கருவை சிதைத்து விடுமாறு கோரியது. சன்புவா மறுத்தாள்.
அவளது தாய்மை உணர்வும், பௌத்த கோட்பாடுகளில் அவள் கொண்ட தீவிர ஈடுபாடும் கருச்சிதைவு கோரிக்கையை புறந்தள்ளச் செய்தன.
சன்புவா சிசுக்களைப் பெற்றெடுத்தாள். மருத்துவர்களின் கருத்து பலித்தது. இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை ஆரோக்கியமானதாக இருந்தது.
The case of baby Gammy, allegedly abandoned by his Australian parents, shocked Thailand http://www.bbc.com/news/world-asia-30243707
ஆண் குழந்தைக்கு டோன் சின்ட்ரொம் (Down’s Syndrome) என்ற நோய். அந்தக் குழந்தை தான் கெமி (Gammy). பெண் குழந்தைக்கு சன்புவா இட்ட பெயர் பெய்பரீ. அவுஸ்திரேலிய தம்பதி கெமியை நிராகரித்தது.
கீழைத்தேய மதக் கோட்பாடுகளில் கட்டியெழுப்பப்பட்ட சமுதாயத்தின் ஏழ்மைக்கும், சுயநலத்தை முதன்மைப்படுத்தும் மேலைத்தேய செருக்கிற்கும் போராட்டத்தின் சின்னமாக கெமி மாறினான்.
ஈற்றில் ஏழ்மையின் பாசம் வென்றது. அவுஸ்திரேலிய தம்பதி பெய்பரீயுடன் சொந்த நாட்டுக்கு பறந்தபோது, கெமியை மூன்றாவது பிள்ளையாக வளர்ப்பதென சன்புவா தீர்மானித்தாள்.
கெமியின் இருதயத்தில் துவாரம் ஏற்பட்டு, அவனைக் காப்பாற்றுவது கடினம் என்ற நிலை வருகிறது. அவனுக்கு உதவி தேடுவதற்காக சன்புவா வாயைத் திறந்தபோது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
David and Wendy Farnell, pictured here with Gammy’s twin sister, deny abandoning him
கெமியின் உண்மையான பெற்றோர் யார் என்பதை ஊடக நிறுவனங்கள் சரியாக தேடிக் கண்டுபிடித்தன. மேற்கு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் ஃபார்னெல், வென்டி ஃபார்னெல் தம்பதியின் பின்புலம் தெரியவந்தது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய டேவிட் ஃபார்னெல், 22 தடவைகள் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பதையும், இதற்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதையும் ஊடகங்கள் கண்டுபிடித்தன.
இதைக் கேள்விப்பட்ட சன்புவா, தாம் வயிற்றில் சுமந்த பெண்பிள்ளையை ஃபார்னெல் தம்பதியிடம் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இவரது உணர்வுபூர்வமான, உருக்கமான கோரிக்கைக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன. அதன் எதிரொலியாக, தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் வாடகைத் தாய் சேவையை நாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கருப்பையை வாடகைக்கு விடும் வணிகம் என்பது உணர்வுபூர்மானது மாத்திரல்ல. அது மிகவும் சிக்கலான விடயமாகவும் காணப்படுகிறது.
இதில் பல வகைகள் உள்ளன. பிள்ளைப் பேறில்லா தம்பதியை எடுத்துக் கொள்ளலாம். தாயின் கருப்பை பலவீனமானதாக இருக்கும் பட்சத்தில், தந்தையின் விந்தணுவையும், தாயின் கருமுட்டையையும் எடுத்து ஆய்வுகூடத்தில் கருத்தரிக்கச் செய்து வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்துவது ஒருமுறை.
தந்தையின் விந்தணுவையும், மற்றொரு பெண் வழங்கிய கருமுட்டையையும் சேர்த்து கருத்தரிக்கச் செய்து வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தும் முறையும் உள்ளது.
தாயின் கருமுட்டையுடன் மற்றொரு ஆணின் விந்தணுவை சேர்த்தல், தந்தையின் விந்தணுவையும் வாடகைத் தாயின் விந்தணுவையும் சேர்த்தல் என்ற வகைகளும் உண்டு.
இத்தகைய சகல சந்தர்ப்பங்களிலும் பிள்ளையின் உயிரியல் ரீதியான தாய் தந்தை யார் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி எழும். சன்புவா விவகாரத்தை உதாரணமாகக் கொள்ளலாம்.
தமது வயிற்றில் பிறந்த பெண்பிள்ளை சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளியின் பராமரிப்பில் வளர்கிறதென்ற சிந்தனை அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அந்தப் பிள்ளையின் மரபணு ரீதியான தாய் அவரல்ல. அவரால் பிள்ளையை மீளப்பெற முடியாது.
அடுத்து, சேர்ந்து வாழும் ஒருபாலினத்தவர்கள் பற்றிய பிரச்சினை. இன்று மேற்குலகில் ஆணும்- ஆணும், பெண்ணும்-பெண்ணும் சேர்ந்து வாழும் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.
இந்தத் ‘தம்பதியர்’ இயற்கையான முறையில் பிள்ளை பெற முடியாது. இதன் காரணமாக, இவர்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதலாக படையெடுக்கிறார்கள்.
தீவிர வறுமையால் வாடும் சில இந்திய பெண்களைப் பொறுத்தவரையில், காசுத்தேவை எழுகையில் தமது வயிற்றில் வளரும் பிள்ளையின் பெற்றோர் யார் என்ற கேள்வி எழுவதில்லை.
எனினும், தாம் பெற்றெடுத்த குழந்தையை இரு ஆண்கள் தான் தாய்- தந்தையராக வளர்க்கப் போகிறார்கள் என்ற உண்மை தெரியவருகையில், உணர்ச்சிப் போராட்டங்கள் தலைதூக்குகின்றன.
*குடும்பப் பிணைப்புக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இந்திய கலாசாரப் பின்னணியில் வளர்ந்த பெண்களுக்கு, ஒருபாலினத் தம்பதியினர் எத்தனை காலம் ஒன்றாக வாழப் போகிறார்கள் என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.
இந்தத் தம்பதி பிரிந்து சென்றால், தமது வயிற்றில் சுமந்த பிள்ளைக்கு என்னவாகும் என்ற கேள்வியால் எழும் மனச்சிக்கல் மிகவும் பாரதூரமானது.
இந்த வாடகைத் தாய் வணிகத்தின் சிக்கலான தன்மை காரணமாக, அதனைப் பல நாடுகள் தடை செய்திருக்கின்றன. அவற்றில் அவுஸ்திரேலியா மாத்திரமன்றி பல ஐரோப்பிய நாடுகளும் அடங்கும். அந்நாடுகளின் பட்டியலில் தாய்லாந்தும் இணைந்திருக்கிறது.
ஒருபாலினத் தம்பதியினர் வாடகைத் தாய்களின் மூலம் பிள்ளைப் பெறுவதைத் தடை செய்யக்கூடிய விதிமுறைகளை இந்தியாவும் அமுலாக்கியிருக்கிறது.
ஆனால், இத்தகைய தடைகள் மூலம் வாடகைத் தாய் வணிகத்தை முற்றுமுழுதாக ஒழித்து விட முடியுமா என்று கேட்டால் இல்லை என்றே பதில் அளிக்க வேண்டும்.
ஒருவர் தாமாக முன்வந்து காசு பணத்தை எதிர்ப்பார்க்காமல் மற்றைய தம்பதியின் பிள்ளையை தமது வயிற்றில் சுமக்க விரும்புவாராயின் அதனைத் தடுக்கக்கூடிய ஏற்பாடுகள் பல நாடுகளில் கிடையாது.
இதனை தீயசக்திகள் துஷ்பிரயோகம் செய்யலாம். கீழைத்தேய நாடுகளில் பணவெறி பிடித்து அலையும் தரகர்கள் மாத்திரமன்றி, தமது மனைவியை காசு சம்பாதிக்கும் இயந்திரங்களாகப் பயன்படுத்தும் கணவன்மாரின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் இலகுவாக சட்டத்தை ஏமாற்றி விடுவார்கள்.
வாடகைத் தாய் வணிகத்தை சீராக்குதல் என்பது, ஒரு நாட்டில் நிறைவேற்றப்படும் சட்டத்தின் மூலம் சாத்தியப்பட மாட்டாது.
வணிக பேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களோ, அந்த நாடுகளுக்கு இடையிலான பொதுவான ஏற்பாடு இருப்பது அவசியம்.
கெமியின் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். இன்று டேவிட் ஃபார்னெல்லிடம் வளர்ந்து வரும் தனது குழந்தை பாதுகாப்பானதாக இல்லை என சன்புவா கருதும் பட்சத்தில், அந்தக் குழந்தையை மீண்டும் சன்புவாவிடம் ஒப்படைக்கக்கூடிய ஏற்பாடுகள் அவசியம்.
அதனை சாத்தியப்படுத்த வேண்டுமானால், வாடகைத் தாய் வணிகம் பற்றிய சர்வதேச ரீதியான கருத்தாடலை ஏற்படுத்துவது அவசியமாகிறது.
அத்தகைய கருத்தாடல் மூலம் வாடகைத் தாய் வணிகத்தின் சட்டச் சிக்கல்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்து நாடுகளுக்கும் பொது வான சட்டத்தை வகுக்கலாம்.
சிறுவர் தாபரிப்பு தொடர்பான ஹேக் சமவாயம் போன்றதொரு சர்வதேச உடன்படிக்கையின் மூலம் இது சாத்தியப்படக்கூடும்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-