சீகிரியா சுவரோவியம் மீது தனது பெயரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதிக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, சித்தாண்டியை சேர்ந்த 28 வயதுடைய இந்த யுவதி மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் கைத்தொழில் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தவர்.

வார விடுமுறையின் போது சக ஊழியர்களுடன் தம்புள்ள மற்றும் சீகிரியா பிரதேசங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த வேளை இந்த சமபவம் இடம்பெற்றிருந்தது.

தனது தலைமுடி கிளிப்பை பயன்படுத்தி தன் பெயரை சுவரோவியம் மீது எழுதிக் கொண்டிருக்கையில் அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த யுவதி சட்ட நடவடிக்கையின் நிமித்தம் தம்புள்ள நீதவான் உதய சஞ்சீவ குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் குறிப்பிட்ட யுவதிக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் கல்விச் சுற்றுலா சென்றிருந்த கல்முனை பிரதேச முஸ்லிம் பாடசாலையொன்றின் மாணவியொருத்தியும் இது போன்ற குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply