கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரக்கு விமானம், அதற்கான கொடுப்பனவுகளை செலுத்தவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன தெரிவித்துள்ளன.

குறித்த விமானத்திற்கும்  பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கும் இடையிலான தொடர்பு இதுவரையில்  உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த நிறுவனத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் விமான நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், குறித்த விமானமானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த போயிங் – 727 ரக விமானமானது கடந்த ஒரு வருட காலமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விமானம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அரஜூன ரணதுங்கவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

கேள்வி : இந்த விமானம் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டது? அதன் உண்மையான உரிமையாளர் யார்?

அர்ஜூன ரணதுங்க : விமானத்தை எவ்வாறு கொள்வனவு செய்துள்ளார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம். அது எனக்குத் தெரியாது.

விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் இதுபற்றித் தெரிவித்ததாவது;

அது ஏரோ லங்கா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானமாகும். அந்த விமானம் ஒரு வருடகாலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிக்கு சொந்தமான விமானமல்ல.  அது பொருட்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் போயின் – 727 ரக விமானமாகும். பழைய விமானமாகும்.

அதற்கான கட்டணம் ஒரு வருடகாலமாக செலுத்தப்படவில்லை. அது ஏரோ லங்கா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமானது என பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைகளை முன்னெடுக்கின்றோம்.  எனவே, தற்போதைக்கு எதுவும் கூறமுடியாது.

அர்ஜூன ரணதுங்க தெரிவிக்கையில்,

கட்டணம் செலுத்தப்படாவிட்டால் அது பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும்.  ஏனெனில், பாரிய தொகை செலுத்தப்பட வேண்டும். ஆகவே, அவ்வாறான பாரிய தொகையை செலுத்துவதாயின் அவர்களுக்கு அது பெறுமதியானதாக இருக்குமா என்று தெரியவில்லை.  என்றார்.

ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக குறித்த விமானம் ஏரோ லங்கா  நிறுவனத்திற்கு சொந்தமானதாக தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இந்த நிறுவனத்திற்கும்  சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமான விமான நிறுவனத்திற்கும் தொடர்புகள் உள்ளமை இணையத்தளத்தில் உறுதிப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான  விமான நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறித்த விமானம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து சார்க் வலய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,  முதலீட்டு சபையின் திட்டமாக நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட  ஏரோ லங்கா நிறுவனத்தின் இரண்டு உயர் மட்ட அதிகாரிகள் 2006 ஆம் ஆண்டில் காணாமற்போயுள்ளனர்.

எமக்குக் கிடைத்த தகலுக்கு அமைவாகவும் பத்திரிகை செய்தியின் பிரகாரமும் அந்த நிறுவனத்தின்  நிதிப்பணிப்பாளர்  லோகேந்திர ராஜா கோமதி  என்பவர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

அதேபோன்று, அந்த நிறுவனத்தில் ​சேவையாற்றிய  லால் பிரேமரத்தன மற்றும் அவரது மனைவி ஆகியோரும் காணாமற்போயிருந்தனர்.

இதேவேளை, புளோரிடாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும்  எஸ்.எஸ். நாதன்  என்ற நபர்  ஏரோ லங்கா நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளதாக இந்த பத்திரிக்கை செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

கேள்வி : சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமான கொஸ்மொஸ் நிறுவனம் தொடர்பான விசாரணைகளின் நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது. ?

அரஜூன ரணதுங்க தெரிவித்ததாவது;

கொஸ்மொஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் சஜின் வாஸ் தற்போது இல்லை.  ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக இந்த நிறுவனம் விமானத் தரிப்பு பகுதிக்கு நிதி செலுத்தியுள்ளது. இந்த அரசாங்கம் வந்ததன் பின்னர் விரைவாக அவர்கள் நிதி செலுத்தினார்கள்.

வங்கியில் வைப்பிலிட்டு நிதியைப் பெற்றுக்கொள்வதா, என்பது பற்றித் தீர்மானித்தோம். அதனை நாம் பெற்றுக்கொண்டோம். ஏனெனில், அது அரசாங்கத்திற்குரிய நிதியாகும். 24 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனை செலுத்தாது இருந்த கொஸ்மொஸ் நிறுவனம்  இந்த அரசாங்கம் வந்தவுடனேயே செலுத்தியுள்ளது.

Share.
Leave A Reply