டெல்லி மாணவி ஓடும் பேருந்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட `இந்தியாவின் மகள்` என்ற ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்து…,
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகும் பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்காததும், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படாததுமே இந்த நிலைக்கு காரணம் என்று ஆவேச குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.
`நிர்பயா` (ஊடகங்கள் சூட்டிய பெயர்) என்றழைக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பிஸியோதெரபி மருத்துவ மாணவி, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒன்றில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட்டார்.
தனது ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிர்பயாவை போதையிலிருந்த கும்பல், அந்த இளம்பெண்ணுடன் வந்த நண்பரையும் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி, அவரையும் அடித்து உதைத்து ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக சிதைத்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த இந்த கொடூர பாலியல் வக்கிரம் உலக நாடுகளில் பெரிய தலைக்குனிவை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது.
இந்தியப் பெண்கள் மட்டுமல்லாமல் வெளி நாட்டுப் பெண்களும் தனியாக செல்லவோ, சுற்றுலா செல்லவோ பாதுகாப்பு இல்லாத மாநகரம் என்று டெல்லியை குறிப்பிடும் நிலை ஏற்பட்டது.
மருத்துவ மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எழுந்த போராட்டங்கள் டெல்லியைக் குலுங்க வைத்தது.
கல்லூரி மாணவ மாணவிகள்,சமூக ஆர்வலர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் ஒன்று திரண்டு பலவீனமான காவல்துறையைக் கண்டித்தும், அரசு அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் எழுப்பிய குரல்கள், நடத்திய போராட்டங்கள் உலகின் கவனத்தை திருப்பியது.
டிசம்பர் 20 ஆம் தேதி முதல் நடந்த இந்த போராட்ட தீ, இந்தியாவின் பிற நகரங்களுக்கும் பரவியது. மகளிர் அமைப்புகள், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றும், தூக்கில் இடவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பின.
டெல்லியில், குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மாணவ- மாணவிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
டிசம்பர் 21 ஆம் தேதி, மாணவியை சீரழித்த 5 ஆவது குற்றவாளி அக்ஷய் தாக்குர் உத்தரபிரதேச மாநிலத்தில் பிடிபட்டான். 6 ஆவது குற்றவாளியும் கைதானான். அவன் மைனர் என்பதால், பெயரை போலீசார் வெளியிடவில்லை.
இதற்கிடையே சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவி மயக்கம் தெளிந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் விலக்கப்பட்டது. அவரிடம் டெல்லி மாஜிஸ்திரேட் மரண வாக்குமூலம் வாங்கினார்.
அப்போது அந்த மருத்துவ மாணவி, ” நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். குற்றவாளிகளைத் தப்பவிட்டு விடாதீர்கள்” என்றார்.
இதனால் கொந்தளித்த இளைய தலைமுறை டெல்லியில் விடிய, விடிய போராட்டம் நடத்தியது. இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் தர்ணாவைத் தீவிரப்படுத்தினார்கள்.
போரட்டக்காரர்கள் திரளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அவர்களிடம் பேசிய சோனியா காந்தியும், ராகுலும், ” குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம். உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம்” என்றனர்.
எத்தனை நாட்களுக்குள் தண்டனை பெற்று கொடுப்பீர்கள்? என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். அதற்கு சோனியா பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தனர்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டெல்லி இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதனால் போலீசார் திணறினார்கள்.
இதையடுத்து இந்தியா கேட் பகுதியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் கலைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீண்டும் இந்தியா கேட் பகுதியில் திரள முடியாதபடி அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டும், கொடூரத் தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த இளம் மருத்துவ மாணவி, சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
புத்தி சாதுர்யம் மற்றும் தைரியம் மிக்க அந்த இளம் மருத்துவ மாணவி கொடூர குணம் படைத்த ஆண்களின் இச்சைக்குப் பலியானது எவருக்கும் கண்ணீரை வரவழைக்கும்.
இந்த அவலமான நிகழ்வு நடந்து, மனப் பிறழ்வு கொண்ட ஆண்களை அடையாளம் காட்டி,நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறி 3 ஆண்டு ஆகிறது.ஆனால் இன்னமும் வழக்கு நடக்கிறது…நடக்கிறது…
இந்நிலையில்தான் ‘நிர்பயா’ வுக்கு நிகழ்ந்த பாலியல் வன் கொடுமையை அடிப்படையாக வைத்து, லெஸ்லி உட்வின் என்ற பிரிட்டிஷ் பெண்மணி, `இந்தியாவின் மகள்` என்ற ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
அதில், பாலியல் வன்கொடுமை நடத்தப் பயன்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநராக இருந்த முகேஷ் சிங் பேட்டியும் இடம் பெற்றுள்ளது.
மேலும் வன்கொடுமைக்கு உள்ளான மருத்துவ மாணவியின் பெற்றோர் உள்ளிட்டவர்களின் நேரடி பேட்டிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
முகேஷ் சிங் அளித்துள்ள பேட்டியில், ” நாங்கள் பாலியல் பலாத்கார கும்பலாக மாறுவதற்கு இரவு நேரத்தில் வெளியே வந்த பெண்தான் காரணம். இதற்கு அந்தப் பெண் தன்னையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும்.
அந்தப் பெண்ணும், அவரது நண்பரும் திருப்பி தாக்காமல் இருந்தால் நாங்கள் அவர்களைத் தாக்கி இருக்க மாட்டோம். இது ஒரு விபத்து.
நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்தபோது அமைதியாக அனுமதி அளித்து இருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்” என்று திமிர்த்தனத்தில் பேசியிருக்கிறான்.
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்திற்கு தடை விதித்தது கடுமையான விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர், ‘முறையான அனுமதியோடுதான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது அதனால் தடை விதிக்க கூடாது!’ என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், பி.பி.சி. தொலைக்காட்சி ஆவணப்படத்தை ஒளிபரப்பும் செய்துவிட்டது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அளித்த விளக்கத்தில், குற்றவாளியின் பேட்டி மாணவியை அவமானப்படுத்துவது போல் உள்ளது.
இதை அரசு கண்டிக்கிறது. அரசு அனுமதியின்றி ஆவணப் பட காட்சிகள் வெளியிடப் பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டே ஆவணப் பட வீடியோவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கொடுத்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தியும், விதியை மீறியும் முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே குற்றவாளியின் பேட்டி ஒளிபரப்பாகாது.
இதுபோன்ற சம்பவங்களை எந்த அமைப்போ அல்லது யாரும் வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கு அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது.
இந்தப் பேட்டி எடுக்க அனுமதி அளித்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” தெரிவித்துள்ளார்.
ஆனால் 2014 ஆம் ஆண்டே ஆவணப் பட வீடியோவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக தற்போது கூறும் மத்திய உள்துறை அமைச்சகம், அதன்பின்னர் அந்த விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் காட்டிய அலட்சியமே, தற்போது ஏற்பட்டுள்ள இத்தனை விவகாரங்களுக்கும் அடித்தளமாக அமைந்துவிட்டது.
மேலும் 3 ஆண்டுகாலம் நடந்து கொண்டு இருக்கும், நாட்டின் மன சாட்சியை உலுக்கிய கொடூர சம்பவ வழக்கு இன்னமும் தீர்ப்பை எட்டாமல் இருப்பது மோசமான முன்னுதாரணம். குற்றவாளியில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.
மீதமுள்ள குற்றவாளிகளை தண்டிக்க ஏன் காலம் தாமதம் செய்யப்படுகிறது என்பது நீதி தேவதைக்கே பொறுக்காது. இந்தச் சூழ்நிலையில் உண்மை நிலவரத்தைப் பொய்ப் புனைவுகள் இன்றி தொடர்பு உடையவர்களிடம் நேரடி பேட்டிகள் பதிவு செய்து `இந்தியாவின் மகள் `தயாரிக்கப் பட்டிருக்கிறது.
சம்பவம் உண்டாக்கிய தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், குற்றத்தின் உண்மைத் தன்மையை வெளி உலகிற்கு காட்டும் ஒன்றுதான் என்றும், பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் முயற்சிதான் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆவண படத்தை தடை செய்யக் கூடாது என வாதிடுபவர்கள், ” இந்த படம் முகேஷ் சிங் போன்று இந்தியாவில் இருக்கும் ஏராளமான ஆண்கள், பெண்கள் மீது எத்தகைய மதிப்பீடுகளை கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் முகேஷ் சிங்குகளிடம் புரையோடிபோய் இருக்கும் பெண்கள் மீதான இத்தகைய எண்ணங்களை அகற்றுவதற்கான உரிய சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்கின்றனர்.
இந்நிலையில் இனிமேலாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதான வழக்குகள், மற்ற வழக்குகளை போன்று இழுத்தடிக்கப்படாதவாறு சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் துரிதப்படுத்திட வேண்டும்.
அப்போதுதான் நிர்பயாவின் ஆன்மா அமைதி அடையும்; முகேஷ் சிங்குகளும் முளைக்கமாட்டார்கள்!
– தேவராஜன்
Delhi Nirbhaya Full Documentary BBC Storyville India’s Daughter