சூளகிரி: சூளகிரி அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மருமகள், கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஓசூர் தாலுகா சூளகிரி அருகே அட்ரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசப்பா (60). இவரது மனைவி ஜெகதாம்மா.
இவர்களுக்கு ஸ்ரீதர் (36), சதீஷ்குமார் (30) என்ற மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். ஸ்ரீதரை தவிர மற்ற அனைவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.
ஸ்ரீதர், அவரின் மனைவி சரஸ்வதி (29), இவர்களின் 2 மகன்கள் ஆகியோர் வெங்கடேசப்பாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு வந்த 2 வாலிபர்கள், வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசப்பா மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்து தப்பிச்சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சூளகிரி போலீசார், உடலை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். வீட்டின் கிரில் கேட்டின் பூட்டு திறக்கப்பட்டிருந்ததால் வீட்டில் உள்ளவர்களின் ஒருவர் தான் கேட்டை திறந்து விட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து வெங்கடேசப்பாவின் மனைவி, மகன், மருமகளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் மருமகள் சரஸ்வதியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசுவராஜ் மகன் யுவராஜ் (26). இவர், வெங்கடேசப்பாவுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பசுமைக்குடில் அமைத்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீதர் மனைவி சரஸ்வதிக்கும், யுவராஜூக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை வெங்கடேசப்பா கண்டித்து வந்துள்ளார்.
இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை, தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதை தொடர்ந்து, நேற்றிரவு திட்டமிட்டபடி பூட்டிய கிரில் கேட்டின் சாவியை, வீட்டிற்கு வெளியே சரஸ்வதி வைத்து விட்டு சென்றார்.
அதிகாலையில் வீட்டிற்கு வந்த யுவராஜ், அவரது நண்பர் சந்திரன் ஆகியோர் கிரில் கேட்டின் பூட்டை திறந்து, வெங்கடேசப்பாவை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து, சரஸ்வதி மற்றும் அவரின் கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் அவரது நண்பர் சந்திரன் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நடந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். பின்னர் அவர்களை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சரஸ்வதியை சேலம் பெண்கள் சிறையிலும் மற்ற 2 பேரையும் மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சூளகிரி போலீசாரை, எஸ்பி பாராட்டினார்.