கல்யாண சந்தையில் டாக்டர் போன்ற உயர் பட்டம்பெற்ற மாப்பிள்ளைகளுக்கு கொழுத்த சீதனத்துடன் வரன்கள் வரும். அப்படியானவர்களை மாப்பிள்ளையாக்கி விடவேண்டும் என்ற தீராத வேட்கையோடு ஊருக்குள் சில காசுக்காரர்கள் காத்திருப்பார்கள்.
ஒரு இடத்தில் இருந்துவரும் சீதனத்தை வாங்கி மாப்பிள்ளை தனக்கிருக்கின்ற காசுத் தேவையை எல்லாம் நிறைவேற்றிய பிற்பாடு அதைவிட கொழுத்த சொத்து செல்வங்களோடு இன்னுமொரு சம்பந்தம் வீடுதேடி வரும்.
அப்போது புதிதாக மாப்பிள்ளை கேட்டுவந்த இடத்திலிருந்து அதிக பணத்தை வாங்கி முன்னர் வாக்களித்த சம்பந்தக்காரர்களது சீதனத்தை திருப்பிக் கொடுத்து விடும் மாப்பிள்ளைகள் நிறையப்பேரை கண்டிருக்கின்றோம்.
முதலாவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட பெண் வீட்டாருக்கு கவலையும் வெட்கமும் பிடுங்கித் தின்னும். ஊரில் காண்கின்ற எல்லோரிடமும் அந்த மாப்பிள்ளை தம்மை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டதாக சொல்லித் திரிவார்கள்.
சிலபேர் மண்ணள்ளி வீசி சாபம் விட்டுவிட்டுப் போவார்கள்.
ஆனால், இன்னுமொரு வகை இருக்கின்றது. இவ்வாறான ஒரு மாப்பிள்ளை ஏதோ ஒரு காரணத்திற்காக தமக்கு வந்த ஒரு வரனை ஆரம்பத்திலேயே நிராகரித்திருப்பார். அவர்களுக்குள் எந்தவித கொடுக்கல் வாங்கலும் இடம்பெற்றிருக்காது.
ஆனால், ஊருக்குள் அந்த டாக்டர் மாப்பிள்ளைக்கு கல்யாணமாம் இன்னார் சம்பந்தி ஆகுகின்றார்களாம் என்று பரவலாக பேசப்படும் நேரம் வரும்போது, நிராகரிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் அவன் எங்கள் வீட்டில் கல்யாணம் முடிப்பதற்கு முடிவு தந்திருந்தான்.
கொடுக்கல் வாங்கலும் இடம்பெற்றது. இப்போது ஏமாற்றி விட்டான். அவனும் அவன்ட குடும்பமும் சரியில்லை என்று வசைபாடித் திரிவார்கள், அந்த மாப்பிள்ளை குடும்பத்துடனான சம்பந்தம் கைகூடவில்லையே என்ற வேக்காடு அவர்களது பேச்சில் தொனிக்கும்.
இவ்வாறு நடந்து கொள்பவர்களால் புதிய சம்பந்திகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பாதிப்புகள் ஏற்பட்டு விடுவதில்லை.
கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சர் நியமனத்திற்கும் ஆட்சியமைப்பிற்கும் முன்பின்னாக இடம்பெற்ற நிகழ்வுகளை ஒரு கோர்வையாக நோக்குகின்ற போது மேலே சொன்ன சம்பந்தம் பேசுதல் பற்றிய கதைகள் நினைவுக்கு வருவதை தடுக்கமுடியவில்லை.
ஆட்சிக்கான பிரளயம்
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை மீள நிலைநிறுத்துவதில் ஒரு பிரளயமே ஏற்பட்டுப் போயிற்று.
தேசிய அரசியலில் மஹிந்த ராஜபக் ஷவை பதவியிறக்கி மைத்திரிபால சிறிசேனவை அரியாசனம் ஏற்றும்போது மக்களிடையே ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும் கிழக்கின் ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்துவதிலும் காணப்பட்டது.
இம் மாகாணத்தின் ஆட்சி என்பது கிட்டத்தட்ட சிறுபான்மை சமூகத்திடமே கையளிக்கப்பட்டு விட்டாலும் கூட, இரு சிறுபான்மை இனங்களும் தமக்கிடையே அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்து நுகர்வது என்பதில் நீண்டதொரு இழுபறி நிலை இருந்தது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ பெற்றிருக்கவில்லை.
ஐ.ம.சு.மு. அரசாங்கத்திடம் மு.கா. முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கில் முதலமைச்சரை சுழற்சி அடிப்படையில் மாற்றியமைப்பது மட்டுமே தேவையாக இருந்தது.
மு.கா.வுக்கு முதலமைச்சை கொடுத்துவிட்டு மீதமிருக்கின்ற எல்லா பதவிகளையும் முன்னர் இருந்தது போலவே வைத்துக் கொள்ளலாம் என்று ஐ.ம,சு.மு. உறுப்பினர்கள் எண்ணினர்.
ஆனால் தேசிய அரசியலில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம் பிராந்திய ஆட்சியதிகாரத்திலும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றமொன்றை மறைமுகமாக ஏற்படுத்தியிருக்கின்றது.
இம்முறை கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான முக்கிய பேசுபொருளாகவும் பேரப் பொருளாகவும் முதலைமைச்சர் பதவியே இருந்தது.
கடந்த முறை இம் மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்காக முன்வந்த த.தே.கூட்டமைப்பின் கரங்களை உதறித்தள்ளிய மு.கா.இம்முறை அக்கட்சியின் ஆதரவை கோரி நின்றது.
ஆனால் நியாயபூர்வமாக தமக்கே முதலமைச்சு கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் மு.கா. உறுதியாக இருந்தது. இதனால் த.தே. கூட்டமைப்புடனான பேச்சுக்கள் ஆரம்பத்தில் வெற்றியடையவில்லை.
இந்நிலையில், ஏற்கனவே கிழக்கில் ஆட்சியதிகாரத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தொடர்ந்தும் ஆட்சியில் தமது இடத்தை தக்க வைத்துக் கொள்வது அவசியமாக இருந்தது.
அதுதவிர மு.கா.வுக்கு சுழற்சி முறையில் முதலமைச்சை தருவதற்கு ஏற்கனவே உடன்பட்ட கட்சியும் அதுதான் என்பதால் மு.கா.வுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் முன்வந்தனர்.
அக்கட்சியின் மேல்மட்டத்தினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் இது தொடர்பான சந்திப்புக்கள் இடம்பெற்றன. இதன்படி கிழக்கில் மு.கா.வுக்கு முதலமைச்சரை வழங்குவதற்கும் இணைந்து ஆட்சியமைப்பதற்கும் 14 உறுப்பினர்கள் சத்தியக்கடதாசி ஊடாக இணக்கம் தெரிவித்தனர்.
இந்த ஆதரவின் பக்க பலத்தோடுதான் முதலமைச்சராக நஸீர் அகமட் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி பல மாதங்களாக நிறைவேற்றப்படாதிருந்த வரவுசெலவுத் திட்டமும் நிறைவேற்றப்பட்டது.
தவிர, முதலமைச்சரை நியமிப்பதற்கு த.தே.கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்கவும் இல்லை . ஆதரவு வழங்கவும் இல்லை. ஆனால் நஸீர் அகமட் முதலமைச்சரான பின்னர் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு புதிய யோசனை உதித்தது.
அதாவது கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கம் அல்லது ஐக்கிய மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெ ளியிட்டு எல்லாக் கட்சிகளின் ஆதரவையும் கோரினார்.
இதன்மூலம் அவர் பிரதானமாக இலக்கு வைத்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையாகும். ஆனால் தேசிய அரசாங்கத்தில் பங்காளியாவது என்றால் த.தே.கூ. உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுக்கும் பதவிகள் தேவைப்பட்டது.
இதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
ஒருவாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2 அமைச்சுப் பதவிகளையும் பிரதித் தவிசாளர் பதவியையும் பெற்றுக் கொண்டு கிழக்கின் தேசிய அரசாங்கத்தில் பங்காளியாவதற்கு முன்வந்தது.
முதலமைச்சரை தருமாறு கேட்டுக் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்பு தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து அமைச்சுக்களை பெற தீர்மானித்தாலும், ஐ.ம.சு.முன்னணி மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து வேறொரு சிக்கலை மு.கா. எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சுக்கள் பிரித்து கொடுக்கப்படுமாயின் தமது கட்சிக்கு வழங்கப்படும் அமைச்சுக்களின் எண்ணிக்கை குறைவடையும் என்பதால் இந்த நகர்வை அவர்கள் விரும்பவில்லை.
ஐ.ம.சு.மு.க்கு ஏமாற்றம்
இவ்வாறான நிலையில், த.தே.கூ.உறுப்பினர்கள் இருவர் அமைச்சர்களாக பதவியேற்றதால் ஐ.ம.சு.மு.உறுப்பினர்களின் சந்தேகம் உறுதியானது.
தமது கட்சிக்கு ஒரேயொரு மாகாண அமைச்சே கிடைக்கும் என்பதும் முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்துக் கொண்டிருந்த விமலவீர திசாநாயக்க மற்றும் உதுமாலெப்பை ஆகிய இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே அமைச்சு கிடைக்காது என்பதும் நிரூபணமாகியது.
இதனால் ஆத்திரமுற்ற மேற்படி இருவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் முஸ்லிம் காங்கிரஸ் தமக்களித்த வாக்குறுதியை மீறுவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.
தமது கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் முதலமைச்சு பதவியை மு.கா.வுக்கு வழங்கவே தீர்மானிக்கப்பட்டது என்றும் 2 அமைச்சுக்களை தமது கட்சிக்கு தொடர்ந்து வழங்க மு.கா. உடன்பட்டதாகவும் மீதமிருக்கும் அமைச்சுக்களை பகிர்வது தொடர்பில் கலந்து பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் ஐ.ம.சு.மு.வின் மேற்படி மாகாண உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான ஒரு உடன்பாடு இருக்கத்தக்கதாக த.தே.கூட்டமைப்புக்கு இரு அமைச்சுக்களை வழங்க முன்வந்தமை ஒப்பந்தத்தை மீறும் நயவஞ்சகத்தனம் என அவர்கள் விமர்சித்தனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, மு.கா. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான உறவை ஆட்சேபித்திருந்தார்.
ஆனால், அவ்வாறு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் முதலமைச்சை மு.கா.வுக்கு தருவது தொடர்பில் மட்டுமே பேசப்பட்டதாகவும் மு.கா. செயலாளர் நாயகம் மிக உறுதியாக தெரிவித்தார்.
இதுவெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆரியவதி கலப்பதியும் தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த இருவரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் ஆறுபேர் மு.கா. ஆட்சியமைப்பதற்கு தாம் வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
அதன் பின்னர் சி. சந்திரகாந்தன் உள்ளிட்ட மேலும் இருவரும் வாபஸ் பெற்றோர் பட்டியலில் இணைந்து கொண்டனர். அதுபோதாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர்.
எல்லோரும் சென்று இரா. சம்பந்தனை சந்தித்து இதற்கான விருப்பத்தை வெ ளியிட்டனர்.
ஆனால் ஐ.ம.சு. முன்னணியின் 6 உறுப்பினர்களும் தமிழ் கூட்டமைப்பும், மு.கா. உறுப்பினர்களும் தம்பக்கம் இருக்கின்றார்கள் என்ற தைரியத்தில், எவ்வித பதற்றமோ சலனமோ இல்லாமல் மு.கா. கிழக்கில் கூட்டாட்சியை அமைத்தது.
ஆட்சியமைப்பதை தடுப்பதற்கு கடைசிக் கட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் அதிருப்தி அணியினர் மேற்கொண்ட தந்திரோபாயங்கள் எதுவும் பலிக்காமல் போவதே விதியென்றாகிற்று. அதற்கு பல காரணங்கள் இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
பிழையான நகர்வுகள்
கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான அணுகு முறையும் தந்திரோபாய நடைமுறைகளும் கவனிப்பிற்குரியன. முதலாவதாக முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒப்பந்தமொன்றை செய்து அதன்படி ஐ.ம.சு.மு.வுக்கு 2 அமைச்சுக்கள் தருவதாக உறுதியளித்திருந்தால் அதனை மீறியிருக்கக் கூடாது என்பதை மறுப்பதற்கு இல்லை.
அவ்வாறு ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றால், இருதரப்பு சந்திப்புக்களில் பேசப்பட்ட விடயங்களுக்கு தாமாக ஒரு அர்த்தத்தை நினைத்துக் கொண்டு அதனையே ஒப்பந்தம் என்று கூறித்திரியக் கூடாது. வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே இதனை வெளியுலகம் கருதும்.
இவ்வாறு இருதரப்பினரும் ஒப்பந்தம் தொடர்பில் முரண்பட்ட கருத்தை வெளிப்படுத்தியமைக்கு முழுமுதற் காரணம் அந்த ஒப்பந்தம் மக்கள் மயப்படுத்தப்படாமை ஆகும்.
பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அல்லது ஒப்பந்தத்தை எழுத்து வடிவில் வைத்திருந்திருந்தால் இப் பிரச்சினையை சட்ட ரீதியாக அணுகியிருக்க முடியும்.
அவ்வாறின்றி பகிரங்கமாக வெ ளிட்டிருந்தால் மக்கள் ஒரு சாட்சியாக இருந்து பாதிக்கப்பட்ட தரப்பிற்காக குரல் கொடுத்திருப்பார்கள். ஆனால் இவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாமல் போனதாலேயே அதிருப்தி அணியினரின் நகர்வுகள் வெற்றியளிக்கவில்லை.
ஐ.ம.சு.மு. அதிருப்தி அணியினர் தமது ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னரும் அதனை மு.கா. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இது அதிருப்தியாளர்களுக்கு பெரும் தன்மானப் பிரச்சினையாகப் போயிருக்க வேண்டும். எனவே இதற்கு முன்னர் ஒருபோதும் சிந்தித்திராத ஒரு கோணத்தில் சிந்தித்தனர்.
அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தேனும் ஆட்சியமைப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸிற்கு பாடம் புகட்ட அவர்கள் எண்ணினர். கடைசி முயற்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து ஆட்சியமைப்பது குறித்து பேசினர்.
அப்போது மாகாண அமைச்சர்களாக இருந்த இருவரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரக்காந்தன் உள்ளிட்ட பலர் இக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்களின் முகத்தெதிரே மறுப்புத் தெரிவிக்க முடியாது என்பதாலோ என்னவோ, கலந்து பேசிவிட்டு சொல்வதாக சம்பந்தன் எம்.பி. சொல்லியனுப்பினார்.
அவர்கள் வீடுவந்து சேரும் முன்னரே மாகாண சபைக்கு தமது கட்சி சார்பில் நியமிக்கப்படும் அமைச்சர்களின் பெயரை அறிவித்து த.தே.கூட்டமைப்பு தமது ஆதரவை மீள உறுதிப்படுத்தியமை அக் குழுவினருக்கு ஒருவேளை அதிர்ச்சி வைத்தியாக அமைந்திருக்கலாம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்தி அணியினர் சம்பந்தனை சந்திக்கச் செல்லும் முன்னர் சில விடயங்களை யோசித்திருக்க வேண்டும்.
அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்காது. அப்படி ஆட்சியமைத்தாலும் முதலமைச்சுப் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க சிங்கள ஆட்சிச் சூழல் விரும்பாது.
ஐ.ம.சு.மு.வுடன் சேர்ந்தாலும் 2 அமைச்சுக்கள் தான் தமிழ் த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும்.
எனவே, ஐ.ம.சு.மு.வுடன் சேர்ந்து மு.கா. கடந்த முறை ஆட்சியமைத்ததை இப்போதும் விமர்சித்து வருகின்ற த.தே.கூட்டமைப்பு மு.கா.வுடன் முரண்பட்டுக் கொண்டு ஐ.ம.சு.மு.வுடன் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவே விரும்பாது. அதற்கான நிகழ்தகவுகளும் இல்லவே இல்லை.
அதேபோல் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் ஏனைய 6 உறுப்பினர்களினதும் செயற்பாடுகளையும் குறிப்பாக பரிசீலித்திருக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர்களான விமலவீரதிசாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை போறோர் ஐ.ம.சு.மு.விற்கு இன்னுமொரு அமைச்சு தரவேண்டும் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்க மறுபுறத்தில், ஆரியவதி கலப்பதி எந்தவித தாமதமும் இன்றி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு கடமைகளையும் பொறுப்பேற்றார்.
ஐ.ம.சு.மு. மாகாண சபை உறுப்பினர்கள் எல்லோரும் தமது பக்கத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ள இது போதுமானது.
ஆரியவதிக்கு கிடைத்த அமைச்சிற்கு மேலதிகமாக இன்னுமொரு அமைச்சு ஐ.ம.சு.முன்னணிக்கு கிடைக்கின்றது என்றால் அந்த அமைச்சு எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு வழங்குவதற்கான சாத்தியங்களே அதிகமிருந்தன.
சிங்களவர் ஒருவர் ஏற்கனவே அமைச்சராகிவிட்டார். இந்நிலையில் உதுமாலெப்பைக்கு ஒரு அமைச்சை பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்காக அதிருப்தி அணிக்கு ஆதரவளிப்பதற்கும் ஐ.ம.சு.முன்னணியிலுள்ள சிங்கள மேலாதிக்க எண்ணமுள்ளோர் விரும்பியிருக்க மாட்டார்கள் என்ற சந்தேகம் ஒன்று உள்ளது.
மாற்றாந்தாய் மனப்பாங்குடன் ஐ.ம.சு,மு. சிங்கள அரசியல்வாதிகள் இவ்விடயத்தை கையாளவில்லை என்று யாராவது வக்காளத்து வாங்கக்கூடும்.
அப்படியென்றால் உண்மையில் 2 அமைச்சுக்கள் தருவதாக மு.கா. உடன்பட்டு பின்னர் அதனை மீறியிருந்தால், ஒன்றில் எல்லா உறுப்பினர்களும் தமது சத்தியக் கடதாசியை வாபஸ் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது வாபஸ் பெற்ற உறுப்பினர்கள் மு.கா. 2 அமைச்சுக்கு உடன்பட்டதாக கூறுவது பொய்யாக இருக்க வேண்டும். இவ்விரண்டு அணுகுமுறைகளும் கையாளப்படாமை மேற்கூறிய சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.
தேசிய அரசாங்கம்?
குறிப்பாக கட்சி மாறுதல், முடிவுகளை திடுதிடுப்பென மாற்றுதல், ஒரு கட்சியிடம் இருந்த ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக எதிரணிக்கு மாறப்போவதாக அறிக்கை விடுதல் போன்ற நகர்வுகளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே பிரபலமானது.
சாணக்கியம், வியூகம் என்ற அடைமொழிகளோடு இவ்வாறு பல அதிரடிகளை மு.கா. செய்திருக்கின்றது. அவற்றில் பல பிழையாகவும் அமைந்தமை வேறுகதை.
இந்நிலையில், இவ்விடயத்தில் முன்னனுபவம் இல்லாத மேற்படி ஐ.ம.சு.மு. மாகாண சபை உறுப்பினர்கள் மு.கா.வுக்கு எதிராக இவ்வாறான காய்நகர்த்தலை மேற்கொண்டமை என்னவென்று வரையறுக்க முடியாதுள்ளது.
ஆக மொத்தத்தில், கள நிலைமைகளின் போக்குகளையும் சாத்தியவளம் பற்றியும் சரியாக சீர்தூக்கிப் பார்க்காது இவர்கள் தமது பலத்தை மிகை மதிப்பீடு செய்திருப்பதாகக் கூட குறிப்பிட முடியும்.
இதுவே மு.கா.வுக்கும் கிழக்கின் ஆட்சியில் பங்கெடுத்திருக்கும் ஏனைய கட்சிகளுக்கும் மறுபுறத்தில் நன்மை பயப்பதாக அமைந்து விட்டதெனலாம்.
எது எவ்வாறிருந்த போதும் முஸ்லிம் காங்கிரஸ் தமது முதலமைச்சரை நியமித்து விட்டாலும் தாம் விரும்பியோருக்கு அமைச்சுக்களை பிரித்துக் கொடுத்துவிட்டாலும் கிழக்கின் ஆட்சி மிகக் குளிர்மையானதாக இருக்கப் போவதில்லை.
குறிப்பாக தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நினைத்ததாலேயே எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது ஐ.ம.சு.மு.வின் ஒரு சில உறுப்பினர்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எதிர்தரப்பு ஆசனங்களில் அமர்வார்களா என்பது ஒருபுறமிருக்க, இந்நிலைமை மு.கா. தலைவரின் கனவான தேசிய அரசாங்கம் என்ற நோக்கத்திற்கு கணிசமான சவாலாக அமையக் கூடும்.
அதிருப்தியாளர்கள் எட்டுப்பேரும் சிதறாமல் ஓரணியில் தொடர்ந்தும் நிற்பதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி ஆசனத்திலும் அமர்ந்தால் நிலைமைகள் மோசமாவதுடன் ஐக்கிய மாகாண கனவும் சிதறுண்டு போகும் அபாயமிருக்கின்றது.
நல்ல சம்பந்தம் பார்த்து மேலிடத்துக் கல்யாணம் மேள தாளங்கள் முழங்க நடந்தேறி விட்டது. சீதனமும் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது.
ஆனால் முன்னமே மாப்பிள்ளை கேட்டு மனமுடைந்து போன, சம்பந்தி கனவை காவு கொடுத்த பெண் வீட்டுக்காரருக்கு இன்னும் வஞ்சம் தீரவில்லை.
அவர்கள், பாலும் தேனும் போல இருக்கும் புதிய சம்பந்திகளுக்கு இடையில் மந்திர தந்திரங்களைச் செய்து மனக்கசப்பை ஏற்படுத்தி விடுவார்களோ அதனால் வாழ்க்கை பிரிந்து விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கவே செய்கின்றது.
தந்திரங்கள் பலித்தால் இந்த சம்பந்தத்திற்கு கண்பட்டு விடும்!
– ஏ.எல்.நிப்றாஸ்