கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் இடம்பெற்று வந்த பல்வேறு ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து விட்டன.
அந்த வரிசையில் முதன் முதலில் வெளியான ரகசியங்களின் பட்டிய லில் இரு ஆயுத களஞ்சியசாலைகள் தொடர்பிலான விபரங்கள் பிரதானமானவையாகும்.
ஒன்று காலி துறை முகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் இருந்த எவன் கார்ட் என்ற மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை மற்றையது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப அறையொன் றில் இருந்த ரக்ன லங்கா தனியார் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான தகவல்களாகும்.
இந்த இரு ஆயுத களஞ்சியங்கள் தொடர்பிலும் பல்வேறு கதைகள் உலாவரும் நிலையில் அது தொடர்பில் விசார ணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள் ளன.
கடந்த ஜனவரி மாதம் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.எஸ்.கே. டி. குணவர்த்தனவை தொலைபேசியில் அழை த்த நபர் ஒருவர் மிதக்கும் ஆயுத களஞ் சியம் தொடர்பிலான முதன்மைத் தகவலை வழங்கியிருந்தார்.
இதனையடுத்தே பிரதிப் பொலிஸ் மா அதிபர் குணவர்த்தன வின் கீழான விசேட குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
அந்த குழுவானது குறித்த கப்பலில் இருந்து 12 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த 3000 இற்கும் அதிகமான ஆயுதங்களை கண்டறிந்த நிலையில் விசாரணைகளைத் தொடர்ந்தது.
இந்நிலையில் தான் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயங்கி வந்த ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுத களஞ்சியசாலையும் சோதனைக்கு உள்ளானது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கோட்டே மாநகர சபையின் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் லியன கமகே தயாரத்ன செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த ஆயுத களஞ்சியசாலை நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் ஆரம்பத்தில் சீல் வைக்கப்பட்டதுடன் பின்னர் திறந்து சோதனையிடப்பட்டது.
கொழும்பு தெற்குக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தெல்கஹபிட்டிய ஆகியோரின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பமாகின.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் 2 ஆவது தொகுதி அறையின் இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றிலேயே இந்த ஆயுத களஞ்சியசாலை இருந்த நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் சிஹான் பலப்பிட்டியவிடமும் அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளர்களில் ஒருவரான சமன் திஸாநாயக்காவின் முன்னிலையிலேயே சோதனை க்கு உட்படுத்தப்பட்ட இந்த ரக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலையில் இருந்து விசாரணை குழுவினால் 6 ரகங்களை சேர்ந்த 151 ஆயுதங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.
இதில் ரீ 56 ரக துப்பாக்கிகள் 44, 84 எஸ் ரக துப்பாக்கிகள் 35, எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கி, எம்.பீ.எம்.ஜி. ரக துப்பாக்கிகள் 12 துளை ரிபீட்டர் துப்பாக்கி கள் 29, கைத்துப்பாக்கிகள் 10 ஆகியனவே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் அந்த களஞ்சிய சாலையின் ஆவணங்களை பரிசோதித்த பொலிஸார் அங்கு 8 ரகங்களை சேர்ந்த 3473 ஆயுதங் கள் இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தனர்.
இதில் ரீ 56 ரக துப்பாக்கிகள் 2300, 84 எஸ் ரக துப்பாக்கிகள் 670, எல்.எம்.ஜி. துப்பாக்கிகள் 385, எம்.பீ.எம்.ஜீ ரக துப்பாக்கிகள் 10, எஸ்.எல். ஆர். ரக துப்பாக்கிகள் 11, பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 8, 12 துளை ரிபீட்டர் ரக துப்பாக்கிகள் 79, ஷொட்கன்கள் 10 ஆகியவற்றை அங்கு வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் வித்தியாசப்படும் ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தான் ரக்ன லங்கா நிறுவனத்துக்கும் காலியில் சிக்கிய எவன் கார்ட்டுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து வென்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை மற்றும் ரக்ன லங்கா களஞ்சியசாலை ஆகியவை தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்னவின் மேற்பார்வையின் கீழான விசேட குழுவொன்றிடம் கையளிக்கப்பட்டது.
அது முதல் விசாரணைகளை நடத்தி வரும் அந்த விசேட பொலிஸ் குழு நேற்று வரை இது தொடர்பிலான விசாரணைகளில் பெரும் பகுதியை நிறைவு செய்திருந்தது.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் ஒரு உபாயமாக சமுத்திர பாதுகாப்பு தொடர்பிலான நிறுவனங்களை உருவாக்கின.
இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திர சட்டங்களுக்கு அமைவாக கடற்பாதுகாப்பின் பொருட்டு உருவாக்கப்பட்ட நிறுவனமாக எவன்கார்ட் நிறுவனம் அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்த நிறுவனம் இந்து சமுத்திரத்தின் ஆழ் கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.
எனினும் இவ்வாறு கடமை ஒன்றை முன் னெடுக்கும் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையொன்றை கொண்ட கப்பல் எரிபொருள் உணவுத்தேவையை தவிர்த்து வேறு எந்தவொரு தேவைக்காகவும் துறைமுகத்துக்கு வரமுடியாது என்பது சட்டமாகும்.
இந்நிலையில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை கொண்ட கப்பல் காலி துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிடப்பட்டிருந்த போது பொலிஸாரிடம் சிக்கியது எனலாம்.
இந்த எவன்கார்ட் நிறுவனம் அதை அரச பங்குள்ள நிறுவனமான ரக்ன லங்கா நிறுவனத்தின் ஊடாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளது.
எவன்கார்ட் நிறுவனத்தை பொறுத்த வரையிலோ அல்லது ரக்ன லங்கா நிறுவனத்தைப் பொறுத்த வரையோ அதன் நியாயாதிக்க நிலைமை குறித்தே பிரச்சினையுள்ளது.
ஏனெனில் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழு முன்னெ டுத்த ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ரக்ன லங்கா நிறுவனத்தின் அதிகாரிகளும் எவன் கார்ட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்டோரும் தாம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக குறிப்பிட்டனர்.
எவன்கார்ட் நிறுவனத்தை கடற்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரலை ஒத்த எந்த ஒரு படிமுறையும் இடம்பெற்றிருக்கவில்லை.
இப்பணியில் ஈடுபடத்தக்க பல தனியார் நிறுவன ங்கள் இருக்கும் போது ஏக உரிமை எவ்வித முறையான படிமுறைகளும் இன்றி எவன் கார்ட்டுக்கு வழங்கப்பட்டமை சிக்கலுக்கு குரியதே.
இதனை விட இந்த நடவடிக்கையானது பல கோடி ரூபா வருமானத்தை ஈட்டத்தக்க செயற்பாடாகும். அப்படியானால் அந்த வருமானத்துக்கு என்ன நடந்தது?
எவ்வளவு வருமானம் ஈட்டப்பட்டது போன்ற அனைத்தும் சிக்கலை தோற்றுவிக்கும் வினாக்களே. எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் இப்படி இருக்க ரக்ன லங்கா நிறுவனத்தின் கதையும் இடியப்பச் சிக்கல் நிறைந்தது தான்.
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனம் வங்கி, விமான நிலையம் துறைமுகம் போன்ற முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு சேவையை வழங்கும் ஒரு சாதாரண நிறுவனமாகவே அறியப்பட்டது.
எனினும் அந் நிறுவனத்தின் ஆயுத களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த ஆயுதங்களும் யுத்த களங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களுக்கு சமாந்தரமானவை.
ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு இத்தகைய பாரிய ஆயுதங்களை பயன்படுத்த முடியுமா என்பது மிகப் பெரும் கேள்வியே.
இதனை விட இந்த ஆயுதங்கள் அனைத்தும் அரச படைகளுக்கு சொந்தமானவை. வாடகை அடிப்படையிலேயே அந்த ஆயுதங்கள் பெறப்பட்டுள்ளன. அப்படியானால் அந்த ஆயுதங்களுக்குரிய வாடகைப் பணம் முற்றாக செலுத்தப்பட்டுள்ளதா? அவ்வாறு செலுத்தப்பட்டிருப்பின் அந்த வருமானம் அரசாங்க வருமானத்தில் காட்டப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் ரக்ன லங்கா ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொறுப்புக் கூறத்தக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கோத்தபாய ராஜபக் ஷவை விசாரணைக்கு உட்படுத்த முன்னர் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் பொறுப்புக் கூறத்தக்க மேலும் பல அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கோத்தபாய ராஜபக் ஷ தமக்கு வழங்கிய நேரடி ஆலோசனை வேண்டுகோளு க்கு அமையவே அவ்விரு நிறுவன நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே கோத்தாவிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணைகளில் எவன் கார்ட் ரக்ன லங்கா ஆகிய இரு பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கும் தானே அனுமதி வழங்கியதை கோத்தபாய ராஜபக் ஷ ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பிரதானமாக ஒரு விடயத்தை கருத்திற் கொண்டுள்ளனர்.
அதாவது அமைச்சரவை அனுமதியின்றி அல்லது பாராளுமன்றத்துக்கு தெரியாமல் இவ்வாறான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு செயலாளருக்கு அனுமதி வழங்க முடியுமா என்ற சட்ட நியாயாதிக்க தன்மை குறித்தே பிரதான விசாரணை அமைந்துள்ளது. ஏனை ய விடயங்கள் தொடர்பில் சட்ட பூர்வத்தன்மைக்கு பின்னரே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு ஆயுத விற்பனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இணை ய ஊடகங்கள் ஊடாக பரவலாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இயங்கும் தீவிரவாத கிளர்ச்சிக் குழுக்களு க்கு இதனூடாக ஆயுதம் விற்பனை செய்யப்பட்டு பெருமளவு பணம் பெறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் ஊடாக குறிப்பிடப்படுகின்றன.
ஐ.எஸ். ஐ.எஸ். ,போகோ ஹராம் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கும் சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் இவ்வாறு ஆயுத விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் பொருட்டு சிலர் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கும் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் பயங்கர ஆயுதங்கள் காணப்படும் போது அல்லது அதன் பாவ னைக்கு களஞ்சியப்படுத்தலுக்கு அனு மதி வழங்கப்படும் போது இவ்வாறான சந்தேகங்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் யதார் த்தமானவையே.
எனவே அது தொடர்பில் விசாரணைகளில் மிகுந்த அவதானம் தேவை. ஏனெனில் அப்படி இடம்பெற்றிருப்பின் அது உலகின் முதன்மை குற்றமாக கருதப்படும். பாரிய பயங்கரவாத செயற்பாடாகவே கொள்ளப்படும்.
எவன்கார்ட் மற்றும் ரக்ன லங்கா விவ கார விசாரணைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக் கப்படும் என்றார்.
அப்படியாயின் இந்த விவகாரங்கள் தொட ர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட பொறுப் புக் கூறத்தக்கவர்களை கைது செய்வதா? இல்லையா? அவர்களுக்கு எதிராக எவ் வாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சட்ட மா அதிபர் வழங்கும் ஆலோசனையிலேயே இவ்விவகாரம் தற் போது தங்கியுள்ளது.
-எம்.எப்.எம். பஸீர்-