“வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவர் ஒரு பொய்யர் நான் தன்னை சந்திக்கவில்லை என யாழ்ப்பாணத்திற்கு சென்று கூறியுள்ளார்.” – இவ்வாறு இந்தியாவின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மாகாண முதலமைச்சரை முழுக்க முழுக்க சாடி அவர் அளித்த நேர்காணலின் அந்தப் பகுதிகள் மட்டும் முழுமையாக வருமாறு:-

தந்தி:- வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் பற்றி கேட்டே ஆக வேண்டும். தொடர்ச்சியாக இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்ற தீர்மானம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ரணில்:- முதல்வரின் இந்த பேச்சு மிக மிக பொறுப்பற்றது. நான் இதை ஏற்கவில்லை. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது.

இந்தியாவில் ஒரு மாநிலம், இந்திய அரசு இன அழிப்பு நடத்துகிறது என்று தீர்மானம் நிறைவேற்றினால் இதே போன்ற சிக்கல் தான் அங்கும் உருவாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சம்பந்தன் போன்றவர்களுடன் இதுபற்றி பேசி வருகிறேன்.

போர் நடந்த போது அனைத்து தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும், சிங்கள மக்களும் கூட கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர் என்பதை மறக்க கூடாது. யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைமை முழுவதையும் புலிகள் கொன்றழித்தனர்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மற்றும் இதர குழுவினர் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டனர். தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இலங்கை படையினரால் கொல்லப்படவில்லை. யாழ்ப்பாண தலைவர்கள் பலரும் புலிகளால் கொல்லப்பட்டனர். மக்களிடம் கேட்டு பாருங்கள்.

வடக்கு மாகாணத்தில் இராணுவம் நீடிப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். தேர்தல் அரசியலுக்காக நீங்கள் இதை செய்வதாக குற்றம்சாட்டுகிறார் மறுக்கிறீர்களா?

ரணில்:– இலங்கை முழுவதுமே இராணுவம் இருக்கிறது. எந்த மாகாணத்தில் இருந்தும் அதை அகற்றுவதற்கான அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் தலைமை இடங்கள் உள்ளன. இந்திய இராணுவத்தைப் போன்ற கட்டமைப்புத்தான் அங்கும் உள்ளது.

ஆனால் வடக்கில் இராணுவத்தின் விகிதம் மிக அதிகம்…?

ரணில்:- நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாத வரை எந்த இடத்தில் இருந்தும் இராணுவத்தை அகற்றும் திட்டம் எங்களுக்கு இல்லை.

அதேசமயம் நாட்டின் பல இடங்களில் நிலங்கள் மீண்டும் மக்களிடம் அளிக்கப்பட வேண்டும் முதலில் ஆயிரம் ஏக்கர் கொடுத்துள்ளோம்.

மேலும் 2 ஆயிரம் ஏக்கரை ஒப்படைக்க நீதிமன்ற அனுமதி உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அப்படியானால் அதையும் கொடுக்கலாம். மன்னார் மற்றும் கிளிநொச்சி பற்றி ஆராய்ந்து வருகிறோம். பல இடங்களில் நிலங்கள் வேறு விடயங்களுக்கு உபயோகமாகின்றன.

சம்பூரில் மீளகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கியஸ்தர்களுக்கான வீடுகள் கட்ட எடுக்கப்பட்ட சிங்கள விவசாயிகளின் நிலங்களை திருப்பிக் கொடுத்துள்ளோம் ஆனால் இதை ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது.

ஆனால் பணிகள் மெதுவாக நடப்பதாக விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டுகிறாரே?

ரணில்:- நான் அவர் கருத்தை ஏற்கவில்லை. அவர் பொறுப்பில்லாமல் பேசுகிறார். தமிழ் மக்களுக்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். இன்று பல தமிழர்களே அவரை விமர்சிக்கின்றனர்.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். வேகமாக நடக்கவில்லை என்றால் அவர்கள் ஏன் வாராவாரம் என்னை சந்திக்க வேண்டும்?

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை மட்டும் இல்லையே… ஐ.நா. சபையும் இதைக் கோருகின்றது. சர்வதேச சமூகமும் கேட்கிறது. நான் (மனித உரிமைகள் கவுன்ஸில்) ஆணையாளரை இங்கே வருமாறு அழைத்துள்ளேன்.

படிப்படியாகத்தான் இதைச் செய்ய முடியும் முதலில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிறகு நாட்டின் மற்றப் பகுதிகளில் உள்ள நிலைமையைப் பார்க்க வேண்டும். 100 நாள் திட்டத்தில் இதை நாங்கள் குறிப்பிடவில்லை. இராணுவத்தைப் பின்வாங்குவது பாதுகாப்பு முடிவு. ஆனால் மக்களின் நிலங்களை மீட்டுத் தருவது எல்லா பகுதிகளிலும் செய்ய வேண்டியுள்ளது.

அதை செய்வதற்கு எது உங்களைத் தடுக்கிறது?

ரணில்:- எதுவும் தடுக்கவில்லை தேவையில்லாத நிலங்கள் அனைத்தும் திருப்பியளிக்கப்படும்.

ஆனால் இராணுவம் – மக்கள் விகிதம் மற்ற இடங்களைப் போல வடக்கில் இல்லையே

ரணில்:- அது காலப்போக்கில் சரி செய்யப்படும் அது அப்படியேதான் இருக்கும் என்று யாரும் சொல்லவில்லை. இதை வைத்து விக்னேஸ்வரன் அரசியல் செய்யவில்லையா? ஒரு முதல்வருக்கு இது பொறுப்பற்ற பேச்சு.

அவர் ஜனாதிபதி சிறிசேனவை அவ்வப்போது புகழந்து பேசுகிறார் உங்களை மட்டும் ஏன் குற்றம் சாட்டுகிறார்?

ரணில்:- அவர் என்னிடம் பேசியதே இல்லை. இன்று அவரை சொல்லச் சொல்லுங்கள் நான் விரைவில் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறேன்.

நீங்கள் வடக்கில் இருந்து இராணுவத்தை நீக்க மாட்டேன் என பௌத்த பிக்குகளுக்கு வாக்களித்ததாக அவரிடம் சொன்னீரகள் என்கிறார்….

ரணில்:- நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவர் என்னிடம் பேசியதே இல்லை.

அவர் மிக விவரமாக சொல்லியிருக்கிறார். நீங்கள் சிரித்தீர்கள் பின்னர் இதை சொன்னீர்கள் என்கிறார்…

ரணில்:- ஒரே ஒரு முறை நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது அவர் வந்தார். நான் அவரிடம் பேசவே இல்லை. எனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவர் பொய் சொல்கிறார்.

நீங்கள் அவரை சமீபத்தில் சந்திக்கவே இல்லையா?

ரணில்:– அவர் எனக்குக் கடிதம் எழுதினார்.

ஆனால் அவர் பேசியது…

ரணில்:- விக்னேஸ்வரனிடம் பேசியதில்லை. அவரிடம் யாழ்ப்பாணம் பற்றி விவாதிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன்தான் பேசுகின்றேன்.

நீங்கள் சிரிக்கவில்லையா?

ரணில்:- அவரைப் பார்த்துச் சிரித்திருக்கலாம். அவர் ராஜபக்‌ஷவுடன் பேசினார். அவருடன் ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்தார். நான் அவருடன் பேசியதில்லை. எனக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை.

ஒரு முதலமைச்சர் ஜனாதிபதியுடன் பேசித்தானே ஆக வேண்டும்…

ரணில்:- அவர் முதல்வராக அடிக்கடி இங்கு வருவதில்லை. நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னுடன் பேசவில்லை. அப்படி அவர் சொல்லியிருந்தால் அது பொய். நான் மார்ச் மாதம் யாழ்ப்பாணம் செல்வேன். அப்போது அவரை சந்திக்க மாட்டேன்.

அவரை சந்திக்க மாட்டீர்களா?

ரணில்:- சந்திக்க மாட்டேன். அவர் சொன்னதை திரும்பப் பெறாத வரை சந்திக்க மாடடேன்.

இராணுவம் குறித்து மகாநாயக்கர்களுக்கு வாக்களித்ததாக அவரிடம் சொல்லவில்லையா?

ரணில்:- முதலில் நான் அனைத்து மகாநாயக்கர்களிடமும் பேசவே இல்லை. யாழ்ப்பாணம் குறித்து இருவருடன்தான் பேசியுள்ளேன். மல்வத்தரும் இப்போது இருக்கும் ராமன்யரும். ராமான்ய மகா நாயக்கர்தான் மத கூட்டமைப்பின் தலைவர்.

அவர் பாதுகாப்பை உறுதி செய்து நிலங்களை மீட்டுக் கொடுப்பது பற்றிப் பேசினார். மல்வத்தரும் நிலங்கள் திருப்பியளிக்கப்பட வேண்டும். அதேசமயத் பாதுகாப்புக்குப் பங்கம் வரக்கூடாது என்றார். ஆனால் நான் விக்னேஸ்வரனிடம் பேசவே இல்லை.

அவரிடம் நீங்கள் பேச மறுத்தால் மேலும் நிலைமை சிக்கல் ஆகாதா?

ரணில்:– எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அவருக்குத்தான் சிக்கல்.

மக்களுக்கு?

ரணில்:- நான் மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுகிறேன்.

விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் பிரதிநிதி இல்லையா?

ரணில்:- அவர் மாகாண சபையின் முதல்வர். நான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்தான் பேசுவேன். கண்டி தொடர்பான பிரச்சினை என்றால் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் கேட்பேன். முதல்வரை அல்ல.

தந்தி:- மாகாண சபையிடம் பேசமாட்டீர்களா?

ரணில்:- அவர்கள் விரும்பினால் பேசலாம். பதுளையில் எங்களுக்கு ஒரு முதல்வர் இருக்கிறார். ஆனால் நான் அவரிடம் பேசுவதில்லை. இந்த விடயத்தைப் பொறுத்த வரை விக்னேஸ்வரனின் கருத்துக்களால் அவரிடம் பேசக் கூடாது என்ற தெளிவான முடிவில் இருக்கிறேன்.

அவர் கருத்துக்களால்தானா?

ரணில்:- ஆம், அவர் பொய் சொல்லியிருக்கிறார். என்னால் யாழ்ப்பாண மக்களிடம் நேரடியாகப் பேச முடியும். அங்கு செல்வதற்கு எனக்கு விக்னேஸ்வரன் தேவையில்லை.

சுயாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்தை செயற்படுத்துவது போன்றவற்றை எப்படி அணுகுவீர்கள்?

ரணில்:- செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது எப்படி செயற்படும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். பொலிஸ் செயற்பாடு அரசியலாக்கப்படுமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர்.

சுதந்திர பொலிஸ் ஆணைக்குழு இருந்தால் மட்டும் போதுமா அல்லது வேறு நடவடிக்கைகள் தேவையா என்று பார்க்க வேண்டும். முதல்வர்களின் தனிப்பட்ட இராணுவமாக பொலிஸ் மாறிவிடக் கூடாது இந்தியா போன்ற நிலைமை அங்கு இல்லை. மத்தியில் பொலஸ் துறையை ராஜபக்‌ஷ அரசியலாக்கியது இந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் சரியாக செயற்படுகிறதே…

ரணில்:- இந்தியாவில் சரியாக இருக்கிறது. ஆனால் அங்கு அப்படிப்பட்ட முறை இருந்த போது அது சரியாக இயங்கவில்லை. நல்ல வேளையாக தேர்தலை சட்டபூர்வமாக நடத்துவேன் என்று பொலிஸ்மா அதிபர் ஒப்புக் கொண்டார்.

அதனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரை அழைத்து பொது ஒழுங்கு துறை செயலாளர் ஆக்கினார். பொலிஸ் பிரிவு அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எமது நாடு தெளிவாக இருக்கிறது.

அதை எப்படி சாத்தியமாக்குவது என்பது பற்றி விவாதிக்க வேண்டும் அதை செய்யவில்லை என்றால் ஒவ்வொரு முதல்வரின் கீழும் ஒரு படை இயங்கும்.

2001 இல் சுதந்திர பொலிஸ் ஆணைக்குழுவை கொண்டு வந்த போது நிலைமை அப்படி இல்லை. இது பற்றி அனைத்துக் கட்சிகளும் பேசி முடிவெடுக்க வேண்டும் அரசாங்க தலைவருக்கும் பொலிசுக்குமான உறவு. இவற்றை வரையறுக்க முடியாது. தற்போது உள்ள நிலை தொர முடியாது.

இப் பேட்டி குறித்து தந்தி தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியின் தொகுப்பு…

Share.
Leave A Reply