ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தொடர் சதமடித்து குமார் சங்கக்கார சாதனை படைக்க இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் ஹோபர்டில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “ஏ” யில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன் படி களமிறங்கிய இலங்கை அணி ஸ்கொட்லாந்து பந்து வீச்சுக்களை துவம்சம் செய்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திரிமன்னே 4 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து ஆட்டமிழக்க, டில்ஷான் – சங்கக்கார ஜோடி எளிதாக ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தது.
இதில் டில்ஷான் 97 பந்துகளிலும், சங்கக்கார 86 பந்துகளிலும் தங்களது சதத்தை எட்டினர்.
இதேவேளை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சதமடித்திருந்த சங்கக்கார, ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் சதம் எடுத்து, உலகக் கிண்ண போட்டியில் தொடர்ந்து 4 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
சதமடித்த அடுத்த ஓவரிலேயே டில்ஷான் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மஹேல ஜெயவர்தனவும் 2 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
இதேவேளை மஹேல ஆட்டமிழந்தத அடுத்த பந்தில் குமார் சங்கக்கார 95 பந்துகளில் 124 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்த உலகக்கிண்ணத்தொடரில் சங்காவின் 4 ஆவது சதம், டில்ஷானின் 2 ஆவது சதம் ஆகும்.
இதேவேளை அணித் தலைவர் மெத்தியூஸ் இந்த உலகக்கிண்ணத்தில் இரண்டாவது அதிவேகமான அரைச்சதத்தை பெற்றார். அவர் 20 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக டேவி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு 364 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று 148 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக கொல்மன் 70 ஓட்டங்களையும் மொம்ஸன் 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர மற்றும் சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்கார இரு பிடியெடுப்புக்களை எடுத்ததன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் அதிக ஆட்டமிழப்புக்களை ( 53 ஆட்டமிழப்பு )மேற்கொண்ட விக்கெட் காப்பாளராக இடம்பிடித்துள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புக்கள் செய்திருந்த அவுஸ்திரேலியாவின் அடம் கில்க்ரிஸ்ட்டின் ( 52 ஆட்டமிழப்பு ) சாதனையை இன்று முறியடித்தார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களையும் சங்கா பூர்த்தி செய்துள்ளார்.
148 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றதையடுத்து காலிறுதிக்கான சுற்றில் குழு “ஏ” யில் நியுசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் இலங்கை அணியும் இடம்பிடித்தது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சாதனை வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.