தேன்கனிக்கோட்டை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்.
இவரது மகன் சந்தோஷ் (24), பிஇ முடித்து விட்டு, சொந்தமாக பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த போது, உடன் படித்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சரவணன் மகள் ஜெய்அனுசுயா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
பள்ளி படிப்பு முடித்த பின்னர், பிஇ படிப்பதற்காக சந்தோஷ், சென்னைக்கு சென்று விட்டார். அதே போல், ஜெய்அனுசுயாவும் கோவையில் பிஇ படிக்கச்சென்றார்.
இதையடுத்து இருவரும் செல்போன் மூலமும், அவ்வப்போது நேரிலும் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.
பிஇ படித்த பின், குரூப்- 4 தேர்வெழுதி வெற்றி பெற்ற ஜெய்அனுசுயா, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இங்கு கடந்த 8 மாதங்களாக அவர் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு, ஜெய்அனுசுயாவின் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார்.
ஆனால், அனு சுயாவின் தந்தை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சந்தோசுடன் பேசுவதை ஜெய்அனுசுயா தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, ஜெய்அனுசுயாவை சந்திப்பதற்காக, சந்தோஷ் பாலக் கோட்டிற்கு வந்தார். அங்கிருந்து இரு வரும் கெலமங்கலத்திற்கு பஸ்சில் வந்தனர்.
பின்னர் இருவரும் கெலமங்கலம் கூட்ரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, திருமணம் தொடர்பாக வாக்குவாதம் செய்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.
இதை கண்ட அப்பகுதி மக்கள், விசாரித்த போது, நாங்கள் இருவரும் காதலர்கள் என சந்தோஷ் பதிலளித்துள்ளார்.
சுல்தான்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, 2 லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்த சந்தோஷ், திடீரென நடுரோட்டிலேயே ஜெய்அனுசுயா மீது பெட்ரோலை ஊற்றி விட்டு, தன் மீதும் ஊற்றி கொண்டார்.
அதிர்ச்சியடைந்த ஜெய்அனுசுயா சுதாரிப்பதற்குள், அவரை கட்டிப்பிடித்துக் கொண்ட சந்தோஷ், சிகரெட் லைட்டர் மூலம் தீயை பற்ற வைத்தார்.
இதனால் இருவர் உடலிலும் தீ குபீரென பற்றி எரிய ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து ஓடி வந்த மக்கள், உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
ஜெய்அனுசுயா லேசான காயத்துடன் தப்பியதால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். சந்தோசுக்கு காயத்தின் அளவு சற்று அதிகமாக இருந்ததால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.