சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது.
அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார்.
மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு மீனவர் தான் வழக்கமாக மீன் பிடிக்கும் உத்தா ஆற்றில் கார் ஒன்று பாதி மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூழ்கியிருந்த காரை மீட்புப் படையினரைக் கொண்டு வெளியே எடுத்தனர்.
காரின் பின் சீட்டில் பெண் குழந்தை ஒன்று சுயநினைவின்றிக் கிடந்தது. முன் சீட்டில் இருந்த அதன் தாய் நீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் இருந்தார்.
மீட்புப்பணி முடிந்த பிறகு அங்கு பணியில் ஈடுபட்ட நான்கு போலீசாரில் ஒருவரான பெட்டோஸ் “இறந்து போன தாய் என்னோடு பேசியதைப் போல் இருந்தது நான் அவரின் குரலைக் கேட்டேன்” என்றார்.
உடனே மற்ற மூன்று போலீசார் “ஆமாம் நானும் கேட்டேன்” என்று ஒரே நேரத்தில் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அப்போதுதான் நான்கு பேருக்கும் காப்பாற்றுங்கள்… நாங்கள் இங்கு இருக்கிறோம்.. காரைத் திருப்ப உதவுங்கள்” என்று அந்த தாயின் குரல் எல்லோருக்கும் ஒன்றுபோல் கேட்டுள்ளது தெரிய வந்தது.
விசாரணையின் போது அவர் பெயர் லின் ஜெனிபர் க்ரோஸ்பெக் என்பதும் 25 வயதான அவர் தனது 18 மாதக்குழந்தை லில்லி க்ரோஸ்பெக்குடன் ஸ்ப்ரிங்வில்லியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் உடல் நிலை நன்கு முன்னேறியுள்ளது.
தற்போது அவள் ’டோரா’ என்ற டிவி நிகழ்ச்சியைப் பார்ப்பதாகவும், அவளது தாத்தாவுடன் சேர்ந்து ரைம்ஸ் பாடுவதாகவும் க்ரோஸ்பெக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் போலீசாரின் பயம்தான் இன்னும் குறைந்த பாடில்லை.