செம்பாறை மலையின் மிகக் குறுகலான வளைவுக்குள் சின்ன சைக்கிளுடன் ஒருவர் நுழைகிறார். வளைவு முடியும் இடம் வந்ததும் அப்படியே செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து ஏதோ குழந்தைகள் சர்க்கஸ் விளையாடுவதைப் போல அப்படியே தனது சைக்கிளுடன் சருக்குகிறார்.
புவி ஈர்ப்பு விசை அவரை ஒன்றுமே செய்வதில்லை. கொஞ்ச தூரம் அப்படியே சருக்கி ஒரு ’யு-டர்ன்’ போட்டு மீண்டும் அடுத்த குறுகலான வளைவுக்குள் நுழைகிறார்.
ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்குத்தான் பயமாக இருக்கிறது. ஆனால் இந்த வீடியோவில் தன் உயிரையே பணயம் வைத்து சாகசம் புரியும் மைக்கேல் கோல்பேர்க்கோ இதெல்லாம் ஒரு மேட்டரா? என்று குட்டி சந்துக்குள் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டும் குழந்தைகளைப் போல் அசால்ட்டாக ஓட்டிச் செல்கிறார்.
உலகப் புகழ்பெற்ற சைக்கிள் சாகச வீரர்களுக்கு, என்றுமே சிம்ம சொப்பனமாக இருப்பது செங்குத்தான மலைகள் தான்.
அதுவும் ’மரண மலை’ என்றழைக்கப்படும் அமெரிக்காவின் செடோனா நகரில்(அரிசோனா மாகாணம்) உள்ள செம் பாறைகளால் ஆன மலையில் தான் தனது சாகசத்தை நிகழ்த்தியுள்ளார் 30 வயதான மைக்கேல்.
இதை ஆளில்லா விமானம் மூலமாக மார்ஷெல் முல்லன் என்ற ஒளிப்பதிவாளர் அற்புதமாக வீடியோ எடுத்துள்ளார்.
இந்த சாகசம் குறித்து மைக்கேல் கூறுகையில் “எனக்கு இது போன்ற திகிலான அனுபவங்கள் மிகவும் பிடிக்கும். எல்லோரும் இவ்வளவு பெரிய சாகசத்தை அதுவும் கேமரா முன்னாடி எப்படி செய்தீர்கள்? என்று கேட்கின்றனர்.
கேமரா இல்லையென்றாலும் நான் இப்படிதான் செய்திருப்பேன். நான் செய்த முதல் வேலை ஆபத்து குறித்த சிந்தனைகளை தவிர்த்து விட்டு பாதையில் மட்டுமே கவனம் செலுத்தியதுதான்.
எனக்கு என் திறமை மீது எப்போதுமே நம்பிக்கை உண்டு. அதேநேரம் அனுபவம் இல்லாத யாரும் இதை முயற்சிக்க வேண்டாம்” என்று எச்சரிக்கிறார் இந்த சாகச நாயகன்.