விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத- சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தினால், ஐ.நா ஒழுங்குவதிகளின் கீழ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 424 தனிநபர்களும், 16 புலம் பெயர் அமைப்புகளும், தீவிரவாத நிதியளிப்புடன் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் மீள இணைவது தொடர்பான ஒரு உளநோய் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய பல புலம் பெயர் தமிழ் அமைப்புகளுக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இவ்வாறு பட்டியலிடப்பட்ட பெரும்பாலான அமைப்புகள், வெறுமனே தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவையாக இருக்கக்கூடும்.
அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சிலர், சிலகாலங்களுக்கு முன்னரே மரணமாகி விட்டனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கச் செயல்முறைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்தக் கட்டத்தில், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்கள் அவர்கள் சிங்களவர்களாக, தமிழர்களாக, முஸ்லிம்களாக- யாராக இருந்தாலும், அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள்.
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி, நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் அவர்களின் பங்களிப்பு அவசியம்.
சிலர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களாக இருக்கின்றனர். மேலும் பலர், விஞ்ஞானிகளாக, சட்டவாளர்களாக, ஏனைய துறைசார் நிபுணர்களாக இருக்கின்றனர்.
இவர்களையிட்டு எமது நாடு பெருமை கொள்ள முடியும்.
பல்லின, பல கலாசார, பல மொழி பேசும் ஜனநாயகம் நோக்கிய சிறிலங்காவின் பயணத்தில் இவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.