கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு கோவில் கட்டப்போவதாக கேகாலை தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அந்த தொழிலதிபர் கூறுகையில், ”எனது மூத்த மகன் இலங்கை ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எதிரிகளின் தாக்குதலில் உயிரிழந்தான்.

தற்போது எனது இரண்டாவது மகன் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். இலங்கையில் யுத்தத்தை ராஜபக்சே முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் எனது இரண்டாவது மகனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

வரலாற்றில் நாட்டிற்காக பல சேவைகளை செய்த அரசர்களுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கும் எனது சொந்த செலவில் கோவில் கட்ட முடிவு செய்திருக்கிறேன்.

இதற்கான இடத்தை கண்டி மற்றும் கொழும்புவில் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மேலும், உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வகையில் தீவிரவாதத்தை தோற்றகடித்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த வீரக் கதையையும் அந்த கோவிலில் கல்வெட்டாக பதிக்க இருக்கிறேன்.

ராஜபக்சேவை நாட்டை காப்பாற்றிய தலைவராக எப்போதும் இலங்கை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Share.
Leave A Reply