இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை பயனாளிகளுக்குக் கையளித்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான தூதுவர் ஹின்ஸ் வோக்கர், சுவிஸ் வெளிவிவகார திணைக்களததின் ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகத்தின் தலைவரும், அந்த நாட்டின் இராஜாங்க செயலாளருமாகிய ஜோஹனஸ் மெட்டியாசி மற்றும் முக்கியஸ்தர்களும் சுவிஸ் வெளியுறவு அமைச்சருடன் வருகை தந்திருந்தனர்.
கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அக்கரை கிராமத்தில் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 35 வீடுகளை அங்கு மீள்குடியேறியுள்ள மக்களிடம் அவர் கையளித்தார்.
ஒரு சனசமூக நிலையம், பாலர் பாடசாலை ஆகியனவும் அங்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
ஓன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இந்தக் கிராமத்து மக்களின் வளமான எதிர்காலத்திற்குரிய அணுகுமுறைகளையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பதிய வீடுகள் அடையாளமாக அமைந்திருப்பதாக இந்த வீடுகள் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டபோது அவர் தெரிவித்துள்ளார்.
வடஇலங்கையில் 5500 வீடுகளையும் கிராமிய கட்டமைப்புக்களையும் நிர்மாணிப்பதற்க சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் முன்னுரிமை அளித்திருப்பதாகவும், 2009 ஆம் ஆண்டில் இருந்து 35 பாலர் பாடசாலைகள், 5 பாடசாலைகள், 77 பொதுக்கிணறுகள் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 10 குளங்கள் புனரமைக்கப்பட்டிருப்பதாகவும் சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஆட்சி மாற்றத்தையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், வாழ்க்கைச் சூழல்கள், சூழ்நிலைகள் என்பன பற்றி வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பின்போது சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது வடமாகாண சபையின் அதிகாரிகள் பணியாளர்களின் திறமைகனை வளர்த்துக் கொள்வதற்கு சுவிஸ் நாடு மேலும் உதவ வேண்டும், என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குழுவினரிடம் வடமாகாண சபையும் தமிழ் மக்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.