jaya Standingஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.

அதையடுத்து ஜெ. தரப்பு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கியதோடு, ‘டிசம்பர் 18ம் தேதிக்குள் மேல்முறையீட்டு ஆவணங்கள் அனைத்தையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்’ உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கியது.

அதனால் ஜெ தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 17 ஆம் தேதியே அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது. அதையடுத்து உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு மாதத்துக்கு ஜாமீனை நீட்டித்தது.

உயர்நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் அமைத்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றது. இதையடுத்து யார் இந்த வழக்கில் நீதிபதியாக வருவார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தனி பெஞ்ச் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமியை அறிவித்தார்.

kumarasamyயார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி?

சி.ஆர்.குமாரசாமியின் முழுபெயர் சிக்க ராசப்பா குமாரசாமி. இவரது தந்தை பெயர் ராசய்யா. கர்நாடக அரசின் நிர்வாகப் பணியில் இருந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

குமாரசாமி 25.8.1953 ல் பெங்களூரில் பிறந்தார். பிறவியிலேயே சற்று கால் ஊனமுற்றவர். பெங்களூரு நேஷனல் காலேஜில் பி.எஸ்ஸி-யும், பெங்களூரு ஸ்ரீரேணுகாசாரியா சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி-யும் முடித்தார்.

குமாரசாமியின் மனைவி பெயர் நாகரத்தினம்மா. இவர்களுக்கு மாயசந்திரா, நயனா என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

1983 ல் பெங்களூரு பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு, கெஸ்வி கம்பெனியில் பணியாற்றியதோடு, மாவட்ட வழக்கறிஞர்களுக்கான சட்ட உதவி குழுவிலும், கர்நாடக ஸ்டேட் சுற்றுலா துறை மேம்பாட்டு கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

பெங்களூரு விவேகானந்தா சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு காப்பீடு சட்டம் வகுப்பையும் எடுத்தோடு, தொழிலாளர்களின் சிவில் கேஸ், கிரிமினல் கேஸ்களையும் வழக்கறிஞராக இருந்து நடத்தி உள்ளார்.

பிறகு 1995 ஆம் ஆண்டு மாவட்ட சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். மைசூர், சிக்மங்களூர், ஹாசன், மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்தார்.

2005 ல் கர்நாடக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2007 ல் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணி செய்து வருவதோடு, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இவர் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பணி ஓய்வும் பெற இருக்கிறார்.

குமாரசாமி கையாண்ட வழக்குகள்!

1. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், சிந்தாமணி தாலுக்கா கமாலப்பள்ளியில் 2000 ல் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ராமப்பா என்பவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்தார்.

அதையடுத்து அந்தப் பகுதியில் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் குடிசைக்கு தீ வைத்ததில் ஏழு பேர் தீயில் கருகி இறந்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளாக கர்நாடக காவல்துறை 32 பேரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 32 பேரையும் விடுதலை செய்தது.

அதை எதிர்த்து கர்நாடக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை குமாரசாமிதான் விசாரித்தார். 2013 ல் கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே கொடுத்து, 32 பேரையும் விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

2. 2005 ல் நித்தியானந்தா ஆசிரமத்தில் கோபிகா என்ற பெண் சீடர் காணாமல் போன வழக்கில், நித்தியானந்தா கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், நித்தியானந்தாவை விடுதலை செய்தது.

இந்த மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோது அதை குமாரசாமிதான் விசாரித்தார். கீழ்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே கொடுத்து, நித்தியானந்தாவை விடுதலை செய்தார்.

3. இந்திய பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்த 30 ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் ஈடுபட்ட அப்துல் கரீமுக்கு சிறை தண்டனை வழங்கியவர்.

நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது ‘‘நேர்மையான அமைதியான மனிதர். இதுவரை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். மிகுந்த பரபரப்பாக செயல்படாதவராக இருந்தாலும், ஆவணங்களையும், சாட்சிகளையும் அடிப்படையாக வைத்தே இவருடைய தீர்ப்பு இருக்கும்’’ என்றார்கள்.

தொடங்கியது விசாரணை…

ஜனவரி ஐந்து… இந்த வழக்கில் ஜெ தரப்புக்கு எதிராக வாதிட கறுப்புப் பூனைப் படையோடு சுப்ரமணியசாமி கோர்ட்டுக்கு வந்ததால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெ தரப்பில் நவநீதகிருஷ்ணன், குமார், மணிசங்கர் செந்தில், பன்னீர்செல்வம், அன்புகரசு, செல்வகுமார், கருப்பையா ஆகியோரும், தி.மு.க. சார்பாக குமரேசன், தாமரைச்செல்வன், சரவணன், பாலாஜி, நடேசன், ராமசாமி ஆகியோரும், அரசு தரப்பில் பவானிசிங், மராடி ஆகியோரும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம் ஆகியோரும் வந்திருந்தார்கள்.

நீதிபதி குமாரசாமி சரியாக 11:00 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்தார். சுப்பிரமணியன் சுவாமி எழுந்தார்…

சு.சாமி: இந்த வழக்கில் என்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?

சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்க செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட்ட உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நீதிபதி: உச்சநீதிமன்ற ஆணையின் நகலை கொடுங்கள்.

சு.சாமி: அதை நான் கொண்டுவரவில்லை.

நீதிபதி: சரி! எதன் அடிப்படையில் வாதிட அனுமதி கேட்கிறீர்கள்?

சு.சாமி: ஜே.கே., பிராப்பர்டீஸ் வழக்கின் மூலமாக.

நீதிபதி: அந்த நகலைக் கொடுங்கள்.

சு.சாமி: அதை கொண்டுவரவில்லை.

நீதிபதி: இந்த இரண்டு ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள். பிறகு பரிசீலித்து உங்களை வாதிட அனுமதிக்கலாம்.

அதனை அடுத்து சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை விட்டு கிளம்பினார்.

அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2)

jaya 2abசுப்ரமணியசாமியை அடுத்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் எழுந்தார்…

குமரேசன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தைப்போல இந்த வழக்கில் எங்களை 3 ம் தர வாதியாக சேர்த்துக்கொண்டு எங்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தை பதிவுசெய்ய வேண்டும்.

நீதிபதி: இந்த வழக்குக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
குமரேசன்: 2004 -ல் சென்னையில் இருந்து இந்த வழக்கு பெங்களுக்கு மாற்ற என் மனுதாரர் அன்பழகன்தான் காரணம்.

நீதிபதி: யார் அந்த அன்பழகன்?
குமரேசன்: திமுக பொதுச்செயலாளர். உச்சநீதிமன்றம் எங்களையும் 3 ம் தர வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

நீதிபதி: நீதிமன்றத்துக்குள் அரசியலைக் கொண்டுவராதீர்கள். அரசியல் பேச பாராளுமன்றம் இருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி, பிரதிவாதி இருக்கிறார்.

உங்களைப்போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும், அதை மறுப்பதும்தான் வேலை. 3 ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை.

குமரேசன்: இதுபற்றி விரிவாக பேச எங்கள் சீனியர் வழக்கறிஞர் ராகேஷ் நாளை வருவார்.
நீதிபதி: “அவர் வருவதற்காக காத்திருக்க முடியாது. அவர் உள்ளூரைச் சேர்ந்தவர்தானே? உடனே வரவழைக்க முடியாதா? இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வந்து விவரிக்கட்டும் பார்க்கலாம்’’ என்றவர், பவானிசிங்கைப் பார்த்து, ‘‘என்ன இது? பலரும் உங்களுக்குப் பதிலாக வாதிட கேட்கிறார்கள். ஆட்சேபணை தெரிவிக்கவில்லையா?’’ என்றார்.

பவானிசிங், ‘‘அவர்கள் கேட்கிறார்கள். நான் அனுமதிக்க கூடாது என்று எழுத்துபூர்வமாக மனு கொடுத்திருக்கிறேன்’’ என்றார்.

மதியத்துக்கு மேல் அன்பழகனின் தரப்பு மனுவை வாங்கிக்கொண்டு அரசு தரப்பையும், ஜெ தரப்பையும் ஆட்சேபணை மனு தாக்கல் செய்ய சொன்னார்.

bhavani singஒழுங்கீனமாக செயல்பட கூடாது

நீதிமன்றத்துக்குள் நீதிபதி குமாரசாமி தலைமையில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, நீதிமன்றத்துக்குள் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்து கடுப்பான நீதிபதி குமாரசாமி, ‘‘நீதிமன்றத்துக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. இப்படி ஒழுங்கீனமாக கும்பல் கும்பலாக நிற்கக் கூடாது. இருக்கைகள் இருக்கிறது. அதில் அமர்ந்து அமைதி காக்க வேண்டும்’’ என்றார்.

கம்பெனி வழக்கு ஏற்கப்பட்டது

‘‘ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மெடோ அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் பிராப்பர்டீஸ், சைனோரா பைனாஸ்ஸ் உட்பட ஆறு கம்பெனிகள் குற்றவாளிகளுக்குச் சொந்தமானதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் குற்றவாளிகளுக்கும் இந்த கம்பெனிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆக, கம்பெனிகளின் சொத்துகள் குற்றவாளிகளுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும்.

கம்பெனிகள் சார்பாக நாங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை இந்தச் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையோடு சேர்த்து விசாரிக்க வேண்டும்’’ என்று கம்பெனிகள் சார்பாக ஆஜரான உதயஹொள்ளா வாதிட்டார்.

அதைக் கேட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘இந்த மனுவை ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் நேரம் கொடுக்கும்போது உங்கள் தரப்பு வாதத்தை வைக்கலாம்’’ என்றார்.

முதல் வார்த்தையே வாய்தா

சிறப்பு நீதிமன்றம் ஜெ தரப்பு மீது முக்கியமாக வைத்த குற்றச்சாட்டு… ‘நீதிமன்றத்தை நடத்தவிடாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள்’ என்பதுதான். மேல்முறையீட்டு விசாரணையிலும் ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், மணிசங்கரின் முதல் வார்த்தையே வாய்தா வேண்டும் என்பதுதான்.

ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார்: 12 ஆம் தேதி வரை எங்களுக்கு வாய்தா வேண்டும்.
நீதிபதி: எதற்கு வாய்தா?

குமார்: டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதிட வர இருப்பதால் 12 ஆம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும்.

நீதிபதி:
இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. அதனால் 1 மணி நேரம்கூட தர முடியாது. நீங்களே மூத்த வழக்கறிஞர்தானே? நீங்களே வாதிடலாம்.

குமார்: மூன்று மாதங்களுக்குள் முடித்துவிடலாம்.

நீதிபதி: வாயால் சொல்வதற்கு நன்றாக இருக்கும், மூன்று மாதங்களில் முடிப்பது கஷ்டம். அதனால் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.

இதை கேட்டு குமார் தயங்க… நீதிபதி குமாரசாமி, ‘‘சரி… அவர்கள் வருவதற்குள் வழக்கு பற்றிய வரலாற்றையும், எஃப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை, சொத்து விவர அட்டவணைகளை வாசியுங்கள்’’ என்றார்.

அதையடுத்து குமார் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் வாசித்தார். இடையிடையே சந்தேகத்தைக் கேட்டு அறிந்துகொண்டார் நீதிபதி. மாலை நிறைவு செய்யும்போது குமார், ‘‘2 நாட்களாவது வாய்தா கொடுங்கள்’’ என்றார்.

நீதிபதி: “இவ்வழக்கு நாள்தோறும் நடைபெறும். நீங்களே நாளைக்கு வரவில்லை என்றால், மற்றவர்கள் வாதிடுவார்கள். எக்காரணம் கொண்டும் வழக்கை தாமதிக்க முடியாது’’ என்றார்.

கன்னடம் தெரியுமா?

kumarகுமார்: ஆரம்பத்தில் குற்றப்பத்திரிகையில் பதிவுசெய்த குற்றச்சாட்டுகள், அதற்கான பதில்கள் ஆகியவற்றை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததில் பிழைகள் இருக்கின்றன. மீண்டும் தெளிவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.

நீதிபதி: (பவானிசிங்கிடம்) மொழிபெயர்ப்பு எங்கு செய்யப்பட்டது?

பவானிசிங்: தமிழ்நாட்டிலேயே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்தது.
குமார்: இல்லை. கர்நாடகத்தில்தான் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

நீதிபதி: (குமாரிடம்) உங்களுக்கு கன்னடம் தெரியுமா?
குமார். எனக்குத் தெரியாது. என் அம்மாவுக்கும், சகோதரிக்கும் கன்னடம் தெரியும். எனக்கு ஒரு விஷயம் தெரியக்கூடாது என்றால் என் முன்பே கன்னடத்தில் பேசிக்கொள்ளுவார்கள் என்றார்.

அதனைக் கேட்டு நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பு.

அதையடுத்து, இந்த ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்து வரும் 13 ஆம் தேதி கொடுக்க கர்நாடக மொழியாக்கல் துறைக்கு ஆணையிட்டார்.

அறுபதிகளில் கதாநாயகியின் சம்பளம் எவ்வளவு? – நீதிபதி கேட்ட குபீர் கேள்வி பற்றிய விவரம் நாளை…

– வீ.கே.ரமேஷ்

Share.
Leave A Reply