பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி அறையில் ஒரு விமானி மட்டுமே இருந்துள்ளார். ஸ்பெயினில் இருந்து 150 பேருடன் ஜெர்மனிக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர்.
விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் விமானி அறையில் நடந்த பேச்சுவார்த்தை பதிவாகியுள்ளது. அதன்படி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி ஒருவர் விமானியின் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளியே சென்ற விமானி மீண்டும் அறைக்குள் நுழைய கதவை லேசாக தட்டியுள்ளார். ஆனால் பதில் இல்லை. பின்னர் கதவை வேகமாக தட்டியுள்ளார். அப்போதும் பதில் இல்லை.
அறைக்குள் இருந்த விமானி பதிலே அளிக்கவில்லை. அதில் இருந்து விமானம் விழுந்து நொறுங்கியது வரை வேறு எந்த சப்தமும் பதிவாகவில்லை. அறைக்குள் இருந்த விமானி ஏன் கதவை திறந்துவிடவில்லை என்பது குழப்பமாக உள்ளது.
விமானி எதற்காக அறையை விட்டு வெளியே சென்றார் என்றும் தெரியவில்லை என்றார். இருப்பினும் இந்த விமான விபத்திற்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் கேப்டன் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்ப்ஸ் விமான விபத்து: தொடரும் தேடல்கள்
பிரான்ஸின் ஆல்பஸ் மலைப் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை ஜெர்மானிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்த பகுதியில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
அந்த மலைப் பகுதியிலுள்ள செய்ன்-லெசால்ப்ஸ் கிராமத்துக்கு அருகில் விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் பயணித்த 150பேரும் உயிரிழந்தனர்.
மிட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மூன்று நாட்டுத் தலைவர்களும் நன்றி கூறினர்.
பனிப்பொழிவு மற்றும் மழைக்கு நடுவிலும் உடல்கள் மற்றும் ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சிதிலங்களைத் தேடும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது.
மேலுறை மட்டும் கண்டுபிடிப்பு
இதனிடையே விபத்துக்குள்ள விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியின் மேலுறை மட்டும் கிடைத்துள்ளது. அதற்குள்ளிருந்த பதிவுக்கருவி இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
ஒரு ‘கருப்புப் பெட்டியின்’ சிதிலங்கள்
எனினும் விபத்துக்குள்ளான விமானத்தின் ஓட்டுநர் அறையில் இடம்பெறும் உரையாடல்களை பதிவுசெய்யும் மற்றொரு கருப்புப்பெட்டியின் ஒலிப்பதிவு கருவி சேதமான நிலையில் செவ்வாய்கிழமையே கண்டெடுக்கப்பட்டாலும், அதிலிருந்து சில தகவல்களைப் பெறமுடியும் என்று பிரெஞ்சு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒலாந் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அந்த ஒலிக் குறிப்புகளில் இருந்து விமான விபத்து தொடர்பிலான தகவல்கள் கிடைக்கக் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை பிரான்ஸில் விமானப் பயணங்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துக்கள் குறித்த ஆய்வுகளுக்கு பொறுப்பான அமைப்பினர் பாரிஸில் கூட்டிய செய்தியாளர்கள் சந்திப்பில், பயன்படுத்தக் கூடிய வகையிலான ஒலிப்பதிவுகள் செவ்வாய்கிழமை மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியிலிருந்து கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஒலிப்பதிவில் என்ன தகவல்கள் உள்ளன என்பது பற்றிய தகவல்களை விரைவில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.