பென்சில்வேனியா: அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்க நிலை பள்ளி ஆசிரியை ஒருவர், 11 வயது சிறுமிக்கு ஆயிரக்கணக்கில் காதல் எஸ்.எம்.எஸ்களை அனுப்பி கைதாகியுள்ளார்.
அந்த 11 வயது சிறுமிக்கு இந்த ஆசிரியை ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் குவித்து விட்டாராம். அத்தனையிலும், தான் அந்த சிறுமியை ஆழமாக நேசிப்பதாக காதல் வார்த்தைகளைக் கொட்டியுள்ளாராம்.
இதுதொடர்பாக போலீஸாருக்குப் புகார் வந்தது. இதையடுத்து 28 வயதான ஜெரால்டின் ஆல்கார்ன் என்ற அந்த ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர். அவர் மொத்தம் 2400 எஸ்.எம்.எஸ்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிறுமியை நான் உன்னை உருகி உருகி காதலிக்கிறேன். நாம் இருவரும் எங்காவது ஓடிப் போய் விடலாம் என்றெல்லாம் பேசியுள்ளாராம் அந்த ஆசிரியை.
இருவரும் சேர்ந்து தங்களது உறவை மிகவும் ரகசியமாக வேறு வைத்திருந்தனர். பள்ளி வளாகத்திலேயே இருவரும் அடிக்கடி சந்தி்த்துக் கொள்வார்களாம்.
அந்த சிறுமியின் தாயார்தான் முதலில் இந்த விவகாரம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தாராம். தனது மகளின் ஐபாடைப் பார்த்த அவர் இதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
மேலும் கையால் எழுதப்பட்ட காதல் கடிதங்களும் கூட கிடைத்ததாம். தற்போது ஆசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.