ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன் ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.
நாகேஸ்வரராவ்: என் மனுதாரர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ்கார்டன் வீட்டில் 1996-ல் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை செய்து தங்க, வைர ஆபரணங்களைக் கைப்பற்றினர். அப்போது என் மனுதாரர் வீட்டில் இல்லை.
நீதிபதி குமாரசாமி: (பவானிசிங்கைப் பார்த்து) ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடந்தபோது அவர் இருந்தாரா?
பவானிசிங்: இல்லை
நீதிபதி: ஒரு குற்றவாளி சிறையில் இருக்கும்போது அவரது வீட்டை எப்படி சோதனை செய்தீர்கள்? முறையாக நீதிமன்றத்தில் அனுமதிபெற்று அவரை அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை?
பவானிசிங்: (தயக்கத்தோடு அன்பழகன் வழக்கறிஞர் குமரேசனைப் பார்த்தார்)
குமரேசன்: முறையாக சென்னை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் பர்மிஷன் வாங்கி அரருடைய பிரதிநிதியாக பாஸ்கரனை நியமித்தார். அதன்படி பாஸ்கரனை அழைத்து போய் அவருடைய கண்ணெதிரேதான் சோதனை செய்யப்பட்டது.
நீதிபதி: ஜெயலலிதா கையெழுத்து போட்டு கொடுத்த பர்மிஷன் கடிதம் இருக்கிறதா?
குமரேசன்: இருக்கிறது.
நீதிபதி: அந்தக் கடிதத்தைக் காட்டுங்கள்.
குமரேசன்: (அந்தக் கடிதத்தை நீண்ட நேரம் துலாவிக்கொண்டிருந்தார்.)
நீதிபதி: இந்திய நடைமுறைச் சட்டத்தில் குற்றவாளி சிறையில் இருக்கும்போது அவருடைய கையெழுத்தை வாங்கி அவருடைய வீட்டை பரிசோதனை செய்யலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கிறதா? அது மிகவும் தவறுதானே?
தங்க, வைர ஆபரணங்கள்:
நாகேஸ்வரராவ்: என் மனுதாரர் ஜெயலலிதா, வழக்கு காலகட்டத்துக்கு முன்பே அதாவது 1986-ல் 7,040 கிராம் தங்கம் வைத்திருந்தார்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்த்து 1991 மார்ச் மாதத்தில் மொத்தம் 21 கிலோ 280 கிராம் தங்க, வைர ஆபரணங்கள் வைத்திருந்தார். அதே காலகட்டத்தில் சசிகலா 1 கிலோ 902 கிராம் நகைகள் வைத்திருந்தார். அந்த நகைகளும் ஜெயலலிதா வீட்டிலேயே வைத்திருந்தார்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அந்தக் கட்சித் தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் 3,365 கிராம் மதிப்புள்ள நகைகள் கொடுத்தார்கள்.
அந்த நகைகளும் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்தது. ஆக மொத்தம் 26 கிலோ 547 கிராம் இருந்தது. அதை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கைப்பற்றி 26 கிலோ 902 என மதிப்பீடு செய்துள்ளார்கள்.
தராசு வேறுபாடு இருப்பதால், 400 கிராம் வேறுபாடு இருந்தது. இந்த தங்க, வைர ஆபரணங்களுக்கு உரிய சொத்து வரி, வருமான வரி ஆகியவற்றைக் கட்டி இருக்கிறோம்.
bavani singh
நீதிபதி: வருமானவரித் துறை நகைகளின் தரத்தை மட்டும்தான் பார்க்கும். ஆனால், கிரிமினல் கோர்ட் அந்த நகைகள் எந்த வழியில் சம்பாதிக்கப்பட்டது என்பதைப் பார்க்கும். அதனால், வருமானவரித் துறை பற்றியெல்லாம் பேச வேண்டாம்.
நாகேஸ்வரராவ்: இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
என் மனுதாரர் ஜெயலலிதா 1991 மார்ச் 31 வரை வைத்திருந்த 26 கிலோ 902 கிராமை எடுத்துக்கொள்ளாமல், 1986-ல் வைத்திருந்த 7,040 கிராம் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறது.
இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பைக் குறைத்து காண்பித்து இருக்கிறார். ஆனால், வழக்கு காலகட்டமான 91-96 காலகட்டத்தில் எந்த விதமான நகைகளும் வாங்கவில்லை.
தமிழர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்!
ஜெயலலிதா 88-91 வரை எம்.எல்.ஏ.வாகவும் எம்.பி.யாகவும் இருந்தார். அதன் பிறகு 91-96 வரையில் தமிழகத்தில் முதல்வராக இருந்தார்.
அவர் 91-96 காலகட்டத்தில் முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 18.9.96ல் முதலாவது எஃப்.ஐ.ஆர். போட்டார்கள்.
அதையடுத்து 88-91 எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் இருந்த காலகட்டத்திலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகச் சொல்லி மீண்டும் இரண்டாவது முறையாக 15.2.97-ல் ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டார்கள்.
பிறகு இரண்டாவதாக போடப்பட்ட எஃப்.ஐ.ஆரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.
ஜெயலலிதா 1991-ல் முதல் முறையாக முதல்வரானார். தன்னுடைய 44-வது பிறந்த நாளான 1992 பிப்ரவரி 24-ம் தேதி வந்தது.
அப்போது கட்சித் தொண்டர்கள் பரிசு பொருட்களாக தங்க, வெள்ளிப் பொருட்கள் கொடுத்ததோடு, காசோலையாகவும் ஒன்றரை கோடி கொடுத்தார்கள்.
அதன் பிறகு ஜெயலலிதா தன் பிறந்த நாளுக்கு பரிசுகள் கொடுக்கக் கூடாது; நலத்திட்ட உதவிகளையும், ஏழை, எளிய அநாதைக் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிவித்ததை அடுத்து, நலத்திட்ட உதவிகள் செய்தார்கள். என் கட்சிக்காரருக்குக் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களைக்கூட வருமானத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
மராடி (அரசு வழக்கறிஞர்): (குறுக்கிட்டு) பொது ஊழியர்களாக இருப்பவர்கள் பதவியில் இருக்கும்போது கிடைக்கும் பரிசு பொருட்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது.
அதை அரசு கருவூலத்தில்தான் வைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களைத் தனிபட்ட முறையில் பயன்படுத்தியதால்தான் வருமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நீதிபதி: அரசியல்வாதிகளுக்கு ஏன் பரிசு பொருட்கள் கொடுக்கிறார்கள்?
நாகேஸ்வரராவ்: தென்னிந்தியாவில் தமிழர்கள் வேறுபட்ட குணம் உடையவர்கள். மிகுந்த உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். தான் விரும்பும் தலைவர்களை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
உதாரணத்துக்கு ரஜினிகாந்த் பிறந்தநாளின்போதும், அவருடைய சினிமா வெளியீட்டின்போதும் பல்லாயிரம் பேர் சேர்ந்து விழா எடுத்து பாராட்டுவதைப் பார்க்கலாம். அதேபோல இந்த வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரையே மாய்த்துக்கொண்டார்கள்.
நீதிபதி: தி.மு.க. அரசியல்வாதிகள் மீது வழக்கு எதுவும் இல்லையா?
நவநீதகிருஷ்ணன்: தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது சர்காரியா கமிஷன் இருந்தது.
பவானிசிங்: இதற்கு கர்நாடகாவே பரவாயில்லை.
திராவிடத் தலைவர்களுக்கு புகழாரம்!
நாகேஸ்வரராவ்: ஜெயலலிதா வீட்டில் 1,116 கிலோ வெள்ளியை கைப்பற்றியதாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் தெரிவித்திருந்தனர். அதன் மதிப்பு ரூ.48,80,000. ஆனால், ஜெயலலிதா வீட்டில் 1,250 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்து. அதன் மதிப்பு ரூ.83,07,000. இந்த வெள்ளி பொருட்களைக் குறைத்து மதிப்பீடு செய்தனர்.
இது அனைத்தும் வழக்கு காலகட்டமான 1991-96 முன்பே வாங்கப்பட்டதால், நீதிமன்றத்தில் கணக்கு காட்ட வேண்டியதில்லை. இந்த வெள்ளிப் பொருட்களில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் பரிசாகக் கொடுத்த வெள்ளி கிரீடம், வெள்ளி செங்கோல் போன்ற பொருட்களும் அடங்கும்.
நீதிபதி: எம்.ஜி.ஆர் பிரபலமான நடிகர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் பிரபலமான தலைவர்களும்கூட. அண்ணாதுரை திராவிட கட்சியின் நிறுவனர். எம்.ஜி.ஆர். யு.எஸ்.ஸில் மருத்துவமனையில் இருந்துக் கொண்டு தேர்தலை சந்தித்தவர். என்பதையெல்லாம் படித்திருக்கிறேன். அது திராவிட வரலாறு. எம்.ஜி.ஆர். எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
குமார்: 10 வருடங்கள் முதல்வராக இருந்தார்.
நீதிபதி: அதன் பிறகுதான் ஜெயலலிதா முதல்வர் ஆனாரா?
குமார், அசோகன்: இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தது.
நீதிபதி: ஏன் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா முதல்வராக முடியவில்லை? எம்.ஜி.ஆர் இறந்ததும், அந்த அனுதாப அலையில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கலாமே?
குமார், அசோகன்: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு வந்த தேர்தலில் அ.தி.மு.க அணி இரண்டாகப் பிரிந்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் நின்றதால் வெற்றிபெற முடியவில்லை.
விவசாய நிலத்தில் வந்த வருமானம்!
நாகேஸ்வரராவ்: அவர்களைப் பின்பற்றி வந்தவர்தான் ஜெயலலிதா. ஹைதராபாத் ரங்காரெட்டி பஷீராபாத்தில் 15 ஏக்கர் விவசாய நிலம் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பெயரில் இருந்தது. அது 1964-ல் ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது.
1972-லேயே அந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்ததன் மூலம் 1 லட்சம் வருமானம் வந்தது. அதன் பிறகு 1987-93 வரை வருடத்துக்கு ஏழரை லட்சம், எட்டரை லட்சம் என வருமானம் வந்துகொண்டிருந்தது.
வழக்கு காலகட்டமான 1991-96-ல் அந்த நிலத்தில் திராட்சை, வாழை, கத்தரி, தேங்காய் மற்றும் சில காய்கறிகளை விளைவித்ததன் மூலம் 52,50,000 வருமானம் வந்தது. அதை வருமானவரித் துறை அதிகாரிகள் நேரில் பார்த்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு காலகட்டத்தில் இந்த விவசாய நிலத்தின் மூலம் வருடம் 1 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் 5 லட்சம்தான் கிடைத்தது என்று சொல்லி வருமானவரி தீர்பாயத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டது என்று கீழமை நீதிமன்றத்தில் சொன்னோம்.
ஆனால், கீழமை நீதிமன்ற நீதிபதி, அந்த நிலத்தின் மூலம் வழக்கு காலகட்டத்தில் ஒரு வருடத்திற்கு 2 லட்சம் வீதம் 5 வருடத்துக்கு 10 லட்சம் என்று கூறியிருக்கிறார்.
1972-ல் ஒரு கிளர்க் சம்பளம் 130 ரூபாய்தான். அந்த காலகட்டத்திலேயே 15 ஏக்கர் விவசாய நிலத்தில் 1 லட்சம் வருமானம் வந்தது என்றால், 20 வருடம் கழித்து 2 லட்சம்தான் வருமானம் கிடைத்து இருக்குமா என்பதை நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்களுடைய விவசாய நிலத்தின் மூலம் வந்த 52,50,000 ரூபாய் வருமானத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாட்ச், வாகனம் ஜெ. சொத்து பட்டியலில் சேர்க்கக் கூடாது!
ஜெயலலிதாவுக்கு வழக்கு காலகட்டத்துக்கு முன்பே தங்க, வைர கற்கள் பதித்த காஸ்ட்லி வாட்ச் 7 இருந்தது. அதன் மதிப்பு 9,03,000 ரூபாய். அது தவிர சாதாரண வாட்ச் 91 இருந்தது.
அதன் மதிப்பு 6,87,350 ரூபாய். இதன் விலைகளை எப்படி கணக்கீட்டீர்கள் என்றால், வாட்ச் பழுதுபார்க்கும் கடைகள் மூலம் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
இதன் மதிப்பீட்டில் குளறுபடி இருக்கிறது. அதேவேளையில் தனி நபர் அணியும் பொருட்களுக்கு வருமானவரித் துறை விதிவிலக்கு அளித்திருக்கிறது என்பதால், சொத்துப் பட்டியலில் சேர்க்கக் கூடாது. இதேபோல பல பொருட்கள் விதிகளுக்குப் புறம்பாக சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நீதிபதி: இது வருமானவரித் துறை வழக்கல்ல. ஊழல் தடுப்பு போலீஸார் பதிவு செய்த வழக்கு.
நாகேஸ்வரராவ்: தனிநபர் அணியும் பொருட்களுக்கு வருமானவரித் துறை விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதனால் வருமானவரித் துறைதான் இதைச் சொத்துப் பட்டியலில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும். ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்பதால், அவருடைய பெயரில் பல வாகனங்கள் வாங்கப்பட்டது. அதையும் இவருடைய சொத்துப் பட்டியலில் சேர்த்தது தவறு.
60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை பகுதி-3,4)
அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம் (ஜெ. வழக்கு விசாரணை – 6)
ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை – 5)