தனது திறமை காரணமாகத் தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.
புத்திசாலித்தனம், நுனி நாக்கு ஆங்கிலம், குழந்தைத்தனம், தைரியம், துணிச்சல், எதையும் திறமையாகவும் , லாவகமாகவும் கையாளும் பண்பு என்று ஜெயின் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
முதல் படத்திலேயே கதாநாயகியாகி புகழ் பெற்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் நடித்தார்.
சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.
தமிழக முதலமைச்சர்கள், தந்தை பெரியார் , பெருந்தலைவர் காமராஜர் என்று பலரின் அறிமுகம் கிட்டியது.
ஜெயலலிதாவின் 100 ஆவது படத்தைப் பாராட்டிய அப்போதைய முதல்வர் கருணாநிதி `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டி பேசியது சரித்திரம்.
பின்னாளில் அவரே இவரைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் முதனிலை வகிப்பவர்.
ஆசிய விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில், எம்.ஜி.ஆர் விளையாட்டுக்களைப் பார்வையிட்டதை விமர்சித்த கலைஞர் கருணாநிதி, “மேடையில் முதல்வர் (எம்.ஜி.ஆர்) , வலது பக்கம் சம்சாரம் (ஜானகி), இடது பக்கத்தில் மின்சாரம் (பண்ருட்டி ராமச்சந்திரன் ), அதற்குப் பக்கத்தில் சமாச்சாரம் (ஜெயலலிதா)” என்று கிண்டலடித்தார்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ஆம் ஆண்டு காலமானார். இது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
இதிலிருந்து மீண்டு வர பல காலம் எடுத்தது.சந்தியாவின் இயற்பெயர் `வேதா’. அவர் நினைவாக வீடு ஒன்றைக் கட்டி அதற்கு “வேதா நிலையம்” என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா. போயஸ் தோட்டத்தில் தற்போது ஜெ வசிக்கும் வீடு இது தான்.
சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். எம்.ஜி.ராமச்சந்திரனுடன் மட்டும் ஜெயலலிதா இருபத்தி ஐந்து படங்களுக்கும் மேலாகக் கதாநாயகியாக நடித்தார்.
ஜெயலலிதாவின் 100 ஆவது படமான “திருமாங்கல்யம்” 1977 இல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்.
பின் 1980 இல் வெளிவந்த “நதியைத்தேடி வந்த கடல்” என்ற சினிமாவுடன் திரை வாழ்க்கையை நிறுத்திக் கொண்டார்.
இவருக்குத் தெலுங்கு சினிமா நடிகர் சோபன் பாபுவுடன் காதல் , அவருடன் திருமணம் நடக்க இருந்து தடைப்பட்டது , அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது , மனக்கவலை காரணமாகத் தற்கொலை முயற்சி என்றெல்லாம் பலவித வம்புப் பேச்சுக்களில் ஜெயலலிதாவின் பெயர் அடிபட்டது.
ஜெயலலிதாவின் இருண்ட காலம் இதுவாகும். குமுதம் வார இதழில் இவர் எழுதி வந்த தொடர் ஒன்று அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது.
ஆம் ஜெயலலிதா நல்ல எழுத்தாளரும் கூட. வாசிப்பவர்கள் எல்லோரும் நல்ல எழுத்தாளர்களாக இருப்பார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். ஜெயலலிதா நிறைய வாசிப்பவர்.
நாவல் எழுதியவர். சிறுகதைகள் எழுதியவர். துக்ளக் பத்திரிகையில் ஜெயலலிதா கட்டுரைகளையும், புத்தக விமர்சனங்களையும் எழுதியவர்.
ஆங்கிலத்தில் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அதீத நினைவாற்றலும் கொண்டவர். அதற்காகவே எம்.ஜி.ஆரால் தனது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்.
மிகச் சாதாரண நிலையில் , பதினைந்தாவது வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு மாநிலத்தையே ஆளும் ஆளுமையாக நிமிர்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே.
பிரித்தானியாவுக்கு எப்படி ஒரு மார்க்ரட் தட்சரோ , இந்தியாவுக்கு எப்படி ஒரு இந்திரா காந்தியோ அதுபோல தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா தான். அதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆளுமை உள்ள பெண்களை ஆண்களுக்கும் பிடிப்பதில்லை. ஆளுமை உள்ள பெண்கள் ஆண்களின் அடக்குமுறைக்குக் கட்டுப்படுவதும் இல்லை.
ஆளுமைக் குணம் உயர்ந்து நிற்கும் போது அது தனக்கென ஒரு பாதையில் பயணிக்கும் என்பது உலகம் கண்ட உண்மை.
சென்னையில் ஒரு முறை அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒன்றில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த போது ஜெயலலிதா பேசிய பேச்சில், “யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை.
எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் தன்னிச்சை இயல்பு குறித்து விமரிசித்து பலர், குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த, ஆர்.எம். வீரப்பன், பாக்யராஜ், காலஞ்சென்ற பத்திரிகையாளர் சோலை , வலம்புரி ஜான், போன்றவர்கள் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இவை எவையுமே அவரது போக்கை எந்தக் காலத்திலும் மாற்றியது இல்லை. விமர்சனங்களுக்குப் பயப்படுபவர் பொது வாழ்வில் வெற்றி பெறுவது இல்லை.
ஜெயலலிதாவிடம் கருத்து வேறுபாடு உள்ளவர்கள்கூட அவரது துணிச்சல், தளராத முயற்சி, தொடர்ச்சியான போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் மறுக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் வெற்றியின் ரகசியம் இதுதான்.
தமிழக அரசியலில் மட்டுமல்ல , தமிழ் சமூகத்திலேயே, பெண் ஒருவர் ஆளுமையுடன் வரும் போது முதலில் செய்யப்படுவது ”ஒழுக்கக் கொலை” (character assassination )
திராவிட அரசியல் பண்பாளர்களின் கட்சிகளின் மேடைகளில் இந்திராகாந்தி முண்டச்சி ஆனார். கருணாநிதி ’படத்தில் பார்க்காததையா நான் ஜெயலலிதாவிடம் இனிமேல் பார்க்கப் போகிறேன்’ எனப் பேசினார்.
பின் அவர் ஜெயலலிதாவிடம் என்னைக் கேட்காதே ’ சோபன் பாபுவிடம் சென்று உனது கேள்விகளைக் கேள்’ என்றார்.
திராவிட சிங்கங்கள் ’பாப்பாத்தி’ என்றும் ”நடிகை” என்றும் பல சின்னத் தனங்கள் பேசின. ஆண் வக்கிரங்கள் சட்ட சபையில் ஆடை களைந்து அவரை அவமானப்படுத்திய அசிங்கம் நிறைவேறியது.பாக்யராஜ் ஜெயலலிதா ஒரு எல்.கே.ஜி. என்றார்.
சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயின் வாழ்வில் 1980 களில் , மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடக்கும் தருவாயில் தற்செயலாக ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
அப்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனின் தயவால், காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் சந்தித்தார்.
ஜெயின் திறமையில் ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆருக்கு அப்போது பல காரணங்களுக்காக ஜெயின் சகல பண்புகளுடனும் கூடிய ஒருவர் அப்போது தேவைப்பட்டார்.
அப்போது தொடங்கியது ஜெயின் இரண்டாவது சுற்று. எம்.ஜி. ஆருடன் சினிமா இணைத்த அரசியல் வாழ்க்கை அண்ணி என்ற பிணைப்பை பொது வாழ்க்கையில் வெளிப்படுத்தியது.
1982 இல் எம்.ஜி.ஆரின் கையால் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார் ஜெயலலிதா.
அதன் பின் நடந்ததெல்லாம் சரித்திரம். எம்.ஜி.ஆரின் கை பிடித்து தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.
அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.
ஜெயலலிதாவை, 1984 இல் ராஜ்யசபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார்.
ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை அனைவரையும் கவர்ந்தது.
ஜெயலலிதா முழு நேரமாக அரசியலைத் தேர்ந்தெடுத்தார். இதற்கு அவரது வாசிப்பும், நினைவாற்றலும், ஆங்கிலமும், பேச்சு திறமையும் , ஆளுமைப் பண்புகளும் உதவின.
தமிழக முதலமைச்சராக ஆனார்.. காலம் காலமாக அரசியல் நடத்தி, அதையே மூச்சாக எண்ணி வாழ்ந்து, ஆட்சியே தமது கனவாகவும் , அதை தம் வாரிசுகளுக்கு மட்டுமே சுகமாக அரச குல வழக்கப்படி தாரை வார்த்துக் கொடுக்கவும் காத்துக் கொண்டிருந்த அரசியல் சாக்கடையில், ’ஜெ’யின் வருகை , அதுவும் ஒரு பெண் அரசியல் வாதியின் வருகை வித்தியாசம் காட்டியது.
ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர் மாதிரி எதிர்பாராத ஒரு வரலாற்று நிகழ்வு என்று எண்ணும் படியாகவே அடுத்தடுத்து நிகழ்ந்தவை நிரூபித்தன.
அரசியலில் நடந்த அவலம் என்ன?
வழக்குரைஞர் சந்தரிகா சுப்ரமண்யன்
ஆயிரத்தில் ஒருவருடன் (எம்.ஜி.ஆர்) தொடர்பு ‘ஜெ’ வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-2)
சினிமாவில் தொடங்கி ஸ்ரீரங்கத்து தேவதையான கதை: ஜெ’ வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-1)