கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து…
திமுக அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், நீதிபதி குமாரசாமியிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் விதிமுறைகள் 1973 என்ற புத்தகத்தைக் கொடுத்தார்.
குமரேசன்: அரசுப் பணியில் பதவி வகிப்பவர்கள் அசையும் மற்றும் அசையா சொத்துகளை எவ்வளவு வாங்க முடியும் என்பதும், அவர்களின் பணி காலத்தில் வரும் நன்கொடை, பரிசு பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்ற விவரங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
நீதிபதி குமாரசாமி: மந்திரிகள், முதல்வர்களுக்கு உட்பட்டதா?
குமரேசன்: இந்தப் புத்தகத்தில் அரசு ஊழியர் யார் என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.
அவர்களுக்குப் பொருந்தாது என்றால், மற்றவர்களுக்குப் பொருந்தும். முதல்வருக்குப் பொருந்தும். அதுமட்டுமல்லாமல் அனைத்து அரசாங்க ஊழியர்களும் தாங்கள் பணியில் இருக்கும்போதும் சொத்துகளைக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
அரசியலும் ஒரு தொழில்தான்…
நாகேஸ்வரராவ் (ஜெயலலிதா வழக்கறிஞர்): 1991-ல் முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 1992&ல் அவருடைய 44-வது பிறந்த நாள் தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு டிட-யாக 2.15 கோடி பரிசாகக் கொடுத்தார்கள்.
அதை 1992-93 வருமானவரித் துறையில் காட்டி, ‘பரிசு பொருளாக வந்ததால், வரி கட்ட வேண்டியதில்லை’ என்றதற்கு, வருமானவரித் துறை அதை வருமானமாகக் காட்டி வரி போட்டார்கள். அதை எதிர்த்து நாங்கள் வருமானவரித் துறையில் மேல்முறையீடு சென்றோம்.
அப்போது எங்கள் தரப்பு வழக்கறிஞராக பல்கிவாலா வாதிட்டார். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அரசியலும் தொழில்தான் என்று கூறி, வருமானவரிச் சட்டம் 28-ன் படி தொழில் நிறுவனத்தைப்போல வரி கட்டியாக வேண்டும் என்றது.
அதையடுத்து மீண்டும் வருமானவரித் துறை தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு சென்றபோது என் மனுதாரருக்கு டிடி&யாக அனுப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கீழ் நீதிமன்றத்திலேயே விசாரிக்க சொன்னதையடுத்து, கீழ் நீதிமன்றம் விசாரித்து, சட்டப்படி பரிசு பொருட்கள் வருமானம்தான் என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து, நாங்கள் வருமானத் வரித்துறையில் வரிகள் கட்டினோம்.
நீதிபதி: (குறுக்கீடு) வருமானவரித் துறையின் நோக்கம் ஒருவரின் வருமானத்துக்கு ஏற்ப வரி வசூலிப்பது மட்டும்தான். ஆனால், கிரிமினல் கோர்ட் அந்த வரி செலுத்துவோருக்கு எங்கிருந்து வருமானம் வந்தது, எப்படி வந்தது என்பதையெல்லாம் விசாரிக்கும். அதனால், வருமானவரித் துறையில் வரி கட்டியதாக அடிக்கடி சொல்ல வேண்டாம்.
kumarasamy karnataka
கருணாநிதிக்கு 92 வயதாகிறதா?
நீதிபதி: (குமரேசனைப் பார்த்து) உங்கள் தலைவருக்கும் கிஃப்ட் தருவார்களா?
குமரேசன்: எங்கள் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் தினத்தில் நாங்கள் புத்தகம் கொடுப்போம். பணமெல்லாம் கொடுக்க மாட்டோம்.
(ஜெ தரப்பு வழக்கறிஞர்கள் கோரஸாக கருணாநிதி தன் தொண்டர்களிடம் உண்டி வைத்து வசூலிக்கிறார் என்றார்கள்.)
நீதிபதி: முதல் முறையாக முதலவர் ஆனதும், அனுபவம் இல்லாமல் கொண்டாடி இருக்கிறார்.
நாகேஸ்வரராவ்: இவர்களும் கிஃப்ட் வாங்குவார்கள்.
குமரேசன்: எங்க தலைவர் கருணாநிதி தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கு 92 வயதாகிறது. நாங்கள் கிஃப்ட் வாங்க மாட்டோம்.
நீதிபதி: கருணாநிதிக்கு 92 வயதாகிறதா? (கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமானார்.)
நீதிபதி: முதலில் திமுக தான் தொடங்கப்பட்டதா?
குமரேசன்: இல்லை. டி.கே.தான்.
நீதிபதி: டி.கே விளக்கம்…
குமரேசன்: திராவிடர் கழகம். பிறகு தி.மு.க உருவாகியது. அதில் இருந்து எம்.ஜி.ஆர் 1972-ல் விலகி அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
பெரியாரிடம் கற்றுக்கொண்டோம்
நாகேஸ்வரராவ்: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஏ1 ஜெயலலிதாவும், ஏ2 சசிகலாவும் பங்குதாரர்கள்.
இந்த நிறுவனத்துக்கு நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் சந்தாதாரர்கள் மூலமும், விவசாய நிலத்தின் மூலமும், பிரின்டிங் மூலமும், வாடகையின் மூலமும் வருமானம் வந்தது. இந்த வழிகளில் மொத்தம் ஜெயா பப்ளிகேஷனுக்கு 15.1 கோடி வருமானம் வந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ஸ்கீம் டெபாசிட் முறையில் புதிய சந்தாதாரர்களைச் சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 9,000 பேருக்கு மேல் சேர்த்தோம்.
இங்கு 5,500 சந்தாதாரர்கள் விண்ணப்பப் படிவங்கள் இருக்கிறது. இப்படி சேர்க்கப்பட்ட சந்தாதாரர்களிடம் இருந்து வருடம் 18 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்களுக்கு தினமும் 7 பத்திரிகையும், 15 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்களுக்கு தினமும் 6 பத்திரிகையும், 12 ஆயிரம் டிபாசிட் செலுத்தியவர்களுக்கு தினமும் 5 பத்திரிகையும் அனுப்பி வைக்கப்பட்டது.
நீதிபதி: இந்த நமது எம்.ஜி.ஆர் நியூஸ் பேப்பர் ஆரம்பிக்க யார் மூளையாக இருந்தது?
குமரேசன்: எங்கள் தலைவர் கருணாநிதி ‘முரசொலி’ என்ற திமுக கட்சி இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த்துதான் அதிமுக&வும் தங்கள் கட்சிக்கு ஒரு இதழ் வேண்டும் என்று ‘நமது எம்.ஜி.ஆர்’ இதழை ஆரம்பித்தார்கள்.
நீதிபதி: இதற்கும் நீங்கள்தான் காரணமா? (சிரித்தார்.)
குமரேசன்: இதை நாங்கள் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.
நாகேஸ்வராவ்: இப்படி சந்தாதாரர்களிடம் இருந்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் நிறுவனத்துக்கு வந்த மொத்தத் தொகை 14,25,00,000 ரூபாய்.
இதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து அதற்கான வரியையும் செலுத்தி இருக்கிறோம். ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இந்த 14,25,00,000 தொகையை என் கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமான லிஸ்டில் சேர்க்கவில்லை என்று கீழமை நீதிமன்றத்தில் சொன்னோம்.
ஆனால், கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா, வருமானவரித் துறை ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நிராகரித்துவிட்டார். எனவே, இந்த வருமானத்தை என் மனுதாரர் வருமானத்தில் சேர்க்க வேண்டும்.
சொத்துக்குவிப்பு சதவீதம் எவ்வளவு?
நாகேஸ்வரராவ்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் பெறப்பட்ட ஸ்கீம் டெபாசிட் தொகைகளை 1998-க்குப் பிறகு ரீ-பேமண்ட் கொடுத்தும் இருக்கிறோம். இது சம்பந்தமாக 31 பேர் சாட்சியமும் அளித்திருக்கிறார்கள்.
நீதிபதி: (குறுக்கீடு) இப்படி வளவளவென்று பேச வேண்டாம். உங்கள் மனுதாரருடைய சொத்துகள் மதிப்பு எவ்வளவு? அவை பற்றிய விவரமும், ஊழல் தடுப்பு போலீஸார் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள் மதிப்பு குறித்த விவரங்களையும் சுருக்கமாக பட்டியல் போட்டுக் கொடுங்கள். எப்போது கொடுப்பீர்கள்?
குமார்: நாளை கொடுக்கிறோம்.
நீதிபதி: இவ்வளவு நாள் ரெடி செய்யாமல் எப்படி இந்த வழக்கை நடத்தினீர்கள்? (பவானிசிங்கைப் பார்த்து) சொத்துக்குவிப்பு சதவீதம் எவ்வளவு?
பவானிசிங்: (மௌனம்)
குமரேசன்: 700 சதவிகிதம்
நீதிபதி: எப்படி கணக்கீடு செய்தீர்கள்?
குமரேசன்: (விரிவாக எடுத்துரைத்தார்…)
நீதிபதி: அப்படியானால் அவர்களுக்கு 1964&ல் இருந்தே வருவாய் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு உங்களிடம் கணக்கு இருக்கிறதா? நீங்கள் என்ன அரசு வழக்கறிஞராக உக்கார வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?
குமரேசன்: நான் இங்கு அரசு வழக்கறிஞர் ஆவதற்கு சட்டத்தில் இடமில்லை.
நீதிபதி: அப்புறம் எதற்காக இங்கு உக்கார்ந்து இருக்கிறீர்கள்?
குமரேசன்: அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்கிறேன்.
நீதிபதி: அவருக்கு 30 வருட அனுபவம் இருக்கிறது. அவருக்கு உதவியாளரும் இருக்கிறார். (பவானிசிங்கைப் பார்த்து) இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து எப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பவானிசிங்: ஒன்பது மாதத்தில்.
நீதிபதி: இங்கு இதுபோன்ற வழக்குக்கு எவ்வளவு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள்?
பவானிசிங்: மூன்று, நான்கு வருடங்கள் ஆகும்.
நீதிபதி: அப்படியென்றால் இவ்வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருப்பார்கள்?
நாகேஸ்வரராவ்: 150 போலீஸார் இதற்காக இரவும் பகலும் வேலை பார்த்தார்கள். என்னுடைய வாதத்தின் அடிப்படியில் எங்கள் தரப்பு விவரங்களையும், ஊழல் தடுப்பு போலீஸார் கொடுத்திருக்கும் விவரங்களையும் சுருக்கமாகப் பட்டியல் போட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் 66,44,73,573.00 கோடிக்கு கணக்குகள் காண்பிக்கப்பட்டு, என் மனுதாரர் ஜெயலலிதாவின் சேமிப்பில் 95 லட்சம் கூடுதலாக இருக்கிறது. (அந்தப் பட்டியலை நீதிபதி குமாரசாமியிடம் கொடுத்தார்.)
நீதிபதி குமாரசாமி: இதை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தீர்களா?
நாகேஸ்வரராவ்: செய்தோம்.
நீதிபதி: இந்தப் பட்டியலில் உங்கள் தரப்பு விவரங்களுக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை கொடுங்கள்.
(ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் துலாவிக் கொண்டிருந்தார்கள்.)
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து ) உங்களிடம் பட்டியல் இருக்கிறதா?
பவானிசிங்: அவர்களிடம் சார்ட்டட் அக்கவுண்டன்ட் இருக்கிறார்கள். அதனால், உடனே பட்டியல் போட்டு கொடுத்துவிட்டார்கள். என் வாதத்தின்போது பட்டியல் கொடுத்து வாதிடுவேன். அவர்கள் கொடுத்திருக்கும் சொத்துப் பட்டியல் தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து சொத்துகளும் ஏ1 உடையதுதான். மற்ற யாரிடமும் சொத்துகள் இல்லை.
bavani singh
மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்
நீதிபதி: 66 கோடி சொத்துக்குவிப்பு எப்படி வந்தது? புலன்விசாரணை அதிகாரி யார்? (இந்த வழக்கின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகும் டி.எஸ்.பி சம்பந்தத்தைக் கூப்பிட்ட பவானிசிங் நீதிபதியிடம், ‘இவர்தான்’ என்று சொல்லி, ‘66 கோடி எப்படி வந்தது’ என்று அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.)
நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சரவணன்: கீழ் நீதிமன்றத்தில் நாங்கள் கொடுத்த எழுத்துபூர்வமான வாதத்தில், பட்டியல் கொடுத்திருக்கிறோம். இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. இவர்களெல்லாம் அவருக்குப் பிறகு வந்தவர்கள்.
பவானிசிங்: நான் சம்பந்த்திடம் கேட்டுக்கொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? ஓய்வுபெற்ற நல்லமநாயுடுவிடம் விசாரிக்க முடியுமா? எப்போதும் ஏன் நீங்கள் எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? (கன்னடத்தில் திட்டுகிறார்)
சரவணன்: நீதிபதி கேட்டும் தகவலுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எதற்குத் தேவையில்லாமல் நீங்கள் என்னிடம் கோபப்படுகிறீர்கள்?
பவானிசிங்: (கோபத்தில் கன்னடத்தில் திட்டிக்கொண்டிருந்தார்)
நீதிபதி: நீங்கள் அவர் மீது தொடர்ந்து குற்றம் சொல்வதால்தான் கோபப்படுகிறார்.
சரவணன்: இல்லை. கனம் நீதிபதி அவர்களே. இவர் மீது கீழ் நீதிமன்றத்திலேயே பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. தொடர்ந்து குற்றவாளி தரப்புக்கே ஆதரவாகச் செயல்படுகிறார்.
நீதிபதி: சரி… உங்கள் மனுதாரர் அன்பழகன் எங்கே?
சரவணன்: அவர் வரத் தேவையில்லை. அவருடைய வழக்கறிஞராகதான் நான் இருக்கிறேன்.
-வீ.கே.ரமேஷ்
படங்கள்: வி.சதீஸ்குமார்
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் ஏன் முதல்வராக முடியவில்லை? (ஜெ. வழக்கு விசாரணை-7)
அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம் (ஜெ. வழக்கு விசாரணை – 6)