அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு-12ம் பிரிவு, கறடித் தோட்டத்தில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
காரைதீவு, கறடித்தோட்டம் பூபாலரெத்னம் நிஹிதரன் (வயது 24) என்பவரே இவ்வாறு சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டவராவார்.
இவரது சடலம் காரைதீவு, கறடித்தோட்டத்திலுள்ள அவரது சொந்த வீட்டுக் கூரையில் தொங்கிய நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் அயலவர்களினாலும், சம்மாந்துறைப் பொலிசாரினாலும் மீட்கப்பட்டது.
இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது:- ‘ காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பூபாலரெத்னம் நிஹிதரன் திருக்கோயில் தம்பிலுவிலைச் சேர்ந்த பெண் ஒருவரை காதல் கொண்டு திருமணஞ் செய்துள்ளார். இருவருக்கும் 3 வயது ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
கணவன், மனைவி இருவருக்கிடையிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் சில காலங்களாக கணவனும், குழந்தையும் காரைதீவிலும், மனைவி தம்பிலுவிலிலும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
தாய்க்கு ஒரே ஒரு மகனான நிஹிதரன் தூக்கில் தொங்குவதற்கு முன்னர் தனது மனைவியுடன் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது அவருக்கும், மனைவியிற்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே நிஹிதரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளக் காரணம்’ என நிஹிதரனின் தாய் மாரிமுத்து அழுது, புலம்பினார்.
இதேவேளை இஸ்தலத்திற்கு வருகைதந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நஸீல் பிரேத பரிசோதனைக்கும், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சம்மாந்துறைப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை சட்டவைத்திய அதிகாரி ஏ.எம்.அபுல்ஹுதா மேற்கொண்டு வருகின்றார். இச்செய்தி பதியப்படும்வரை(30.03.2015மு.ப.11 மணிவரை) முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை.
தீர்ப்பு வெளியானவுடன் அறியத்தருகின்றேன்.மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலீஸ் உப பரிசோதகர் எஸ்.பேரின்பராஜா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.