ஈரானின் அணு உற்பத்தி இஸ்ரேலுக்கு மட்டுமன்றி முழு உலகுக்கும் ஆபத்து என அண்மையில் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க மக்கள் பிரதி நிதிகள் சபையில் கூறியிருந்தார்.
எனினும் இஸ்ரேலுக்குள்ளேயே அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கருத்துக்கு மாற்றமாக அல்லது விருப்புக்கு முரணாக அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் பேச முடியாது.
அத்தகைய பேச்சு இரு நாட்டு உறவையும் பாதிக்கும் என மொசாட் ஷின்பெத் மற்றும் ஏனைய சிரேஷ்ட பாதுகாப்பு உளவுத்துறைகளின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மாதம் முதலாம் திகதி டெல் அவில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே இந்த 180 உயரதிகாரிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரான் அணு குண்டு தயாரிக்கிறது என பென்ஜமின் நெதன்யாகு கூறியிருப்பதில் உரிய சாட்சி எதுவுமில்லை. அதற்கான தொழில் நுட்பத்துக்கும் மூலப் பொருட்களை சேகரிக்கவும் பல வருடங்கள் தேவைப்படும். எனினும் பென்ஜமின் நெதன்யாகு ஐ.நா.வுக்குத் தவறான தகவலையே வழங்கியுள்ளார்.
உண்மையில் பாதுகாப்பு சபையின் நிரந்தர ஐந்து நாடுகளும் ஜேர்மனியும் ஈரானும் தமக்குள் உடன்பாடு காணுவதைத்தடுக்கா விட்டால் அமெரிக்க – இஸ்ரேலிய உறவு பாதிப்புறும் எனக் கூறுவதற்கில்லை.
இஸ்ரேலை எப்படியும் அமெரிக்கா காப்பாற்றியே தீரும். இம்முறை ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எடுத்த நடவடிக்கையிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.
இஸ்ரேல் கைப்பற்றிய பகுதிகளில் அது புரிந்த மனித உரிமை மீறல்களை ஆட்சேபிக்காத அவர், உக்ரைன் மற்றும் வடகொரியாவின் மனித உரிமை மீறல்களை எதிர்க்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். அத்தோடு வடகொரியர்கள் அடிமைகளாக வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா எப்போதும் ஐ.நா. வின் பிடியிலிருந்து இஸ்ரேலைக் காப்பற்றவே முயற்சித்திருக்கிறது. மனித உரிமை மீறல்களில் இஸ்ரேலுக்கு மட்டும் அமெரிக்கா காப்பீட்டுச் சுதந்திரம் வழங்கியிருக்கிறது.
மனித உரிமைப் பேரவை, சர்வதேச நீதிமன்றம், பாதுகாப்புச்சபை மற்றும் 75 சர்வதேச அமைப்புக்களின் பிடிகளிலிருந்து அமெரிக்கா இஸ்ரேலை 100 தடவைகளுக்கும் மேல் தப்ப வைத்திருக்கிறது.
கடந்த வருடம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் காஸாவில் 2000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது பற்றி பலஸ்தீனம் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
எனினும் அந்த முறைப்பாடு கிடப்பில் போடப்பட்டதால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அமெரிக்கா அதற்கு முக்கியத்துவம் வழங்காததால் வெறும் முறைப்பாடாகவே அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். காரியத்தில் நிறைவேறாது.
அமெரிக்கா இப்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டதால் அந்த முறைப்பாடு விசாரணைக்கு வரப்போவதில்லை.
இதிலொரு கேள்வி என்னவென்றால், ஈரானின் அணு உற்பத்தித் திட்டங்களை ஆட்சேபிக்கும் இஸ்ரேல், அது தனது பாதுகாப்புக்கு ஆபத்து எனக் கூறும் இஸ்ரேல் தனது அணுத்திட்டங்களைக் கைவிடவோ தனது அணு உலைகளை சர்வதேச பரிசோதனைக்கு உட்படுத்தவோ மறுப்பது ஏன் என்பதேயாகும்.
அது அமெரிக்க உதவியோடு 400 அணுகுண்டுகளைத் தயாரித்திருப்பது சுய பாதுகாப்புக்கு மட்டுமே எனக் கூறமுடியாது.
மத்திய கிழக்கில் வேறு எந்த நாட்டிலும் அணுவாயுதம் இல்லாத நிலையில் இத்தனை அணுகுண்டுகள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எதற்கு? ஏனெனில் அதற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமாயின் அமெரிக்கா விரைந்து வந்து காப்பாற்றி விடும். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இதைக்காண முடிகிறது.
அண்மையில் நியூயோர்க்கில் அமெரிக்க – இஸ்ரேல் மக்கள் நடவடிக்கைக் குழு (AIPAC) கூட்டிய வருடாந்த கூட்டத்தில் நிகழ்ந்ததென்ன?
அதில் உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசான் ரைஸ் பேச்சுவார்த்தை நிகழ்ந்தாலும் ஒப்பந்தம் செய்தாலும், இல்லா விட்டாலும் பேசா விட்டாலும் அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியே தீரும் என சூளுரைத்துள்ளார்.
எனினும் ஈரோனோ, தனது அணு உற்பத்தி யுத்தமற்ற வேறு பயன்பாடுகளுக்காகவே எனக் கூறுவதோடு ஐ.நாவின் அணுப்பரவல் தடை ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டிருக்கிறது.
அதனால் அதன் அணுச் செயற்பாடுகள் சர்வதேச பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. எனினும் இஸ்ரேல் அத்தகைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் பரிசீலனைக்கு உட்படவும் இணங்காதிருக்கிறது.
அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஒரே நோக்கம் அணுசக்தி தம்வசம் மட்டுமே இருக்க வேண்டும். தமது எதிரிகளிடம் இருக்கக்கூடாது என்பதேயாகும்.
ஈரானின் அணு வளர்ச்சியை அடியோடு அழித்தொழிக்க அமெரிக்கா விரும்பா விட்டால் தடையை மேலும் அதிகமாக வலுப்படுத்த வேண்டும் என்றே இஸ்ரேல் வலியுறுத்துகிறது.
எனினும் அதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றே ராஜதந்திரிகள் கூறுகின்றனர். இதற்கு மாற்றீடு யுத்தம் புரிவதேயாகும். அதில் பயன்கிடைக்கும் என்பதிலும் உறுதியில்லை.
ஈராக், சிரியா, யேமன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா சிக்கிக் கொண்ட நிலை போன்ற ஈரானிலும் ஏற்படும். வேண்டுமானால் அதிக அழிவை ஏற்படுத்த மட்டுமே முடியும். அதனால் தான் அமெரிக்கா இப்போது இஸ்ரேலுடன் முரண்படும் நிலை தோன்றியுள்ளது எனலாம்.
வெகுவிரைவில் ஐ.நா. சபை ஈரானின் அணு உற்பத்தியைப் பரிசீலித்து அனுமதிக்கப் போகிறது என்பதை அறிந்து கொண்டதும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அதை பலமாக எதிர்க்கிறார்.
இதனால் அவர் அமெரிக்காவின் சுய விருப்பையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க மக்கள் பிரதிநிதித்துவ சபையிலேயே பேசியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியை அவர் எதிர்க்கக்காரணம், ஜெனீவாவில் விரைவில் அமெரிக்காவும் ஈரானும் இணக்கப்பேச்சு நடத்தப் போவதைத் தடுப்பதற்காகவேயாகும். மத்திய கிழக்கில் அணுசக்தியைக் கொண்ட நாடு இஸ்ரேல் மட்டும் தான்.
எனினும் தீர்மானிக்கப்படாத இவ்விடயத்தில் அது அலட்டிக்கொள்வது ஏன்? அமெரிக்கா ஈரானுடன் உடன்பாடு கண்டால் இதுவரை ஈரானுக்கு ஐ.நா. விதித்த தடைகள் யாவும் அகன்று அறிவு, தொழில் நுட்பம், மூலப்பொருட்கள் ஆகியவற்றை ஈரான் எளிதாக சேகரித்து விடும் என்னும் இஸ்ரேலின் அச்சமே இதற்கு காரணமாகும்.
எனவே, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை ஈரானின் அணு உற்பத்தி முயற்சியைத் தடுத்து விட வேண்டும். இன்றேல் இஸ்ரேல் ஈரானின் அணு உலைகளைத் தாக்கியழித்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஈரான் மீது விமானத்தாக்குதல் நடத்த இஸ்ரேல் முயன்ற போது, ஒபாமா அதைத் தடுத்ததாக ஓர் இஸ்ரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
2007ஆம் ஆண்டும் சிரியாவில் இஸ்ரேல் சந்தேகப்பட்ட இடத்தை தாக்கியிருந்தது. அதற்கு முன் 1981ஆம் ஆண்டும் ஈராக்கில் சந்தேகப்பட்ட இடமொன்றை தாக்கியிருந்தது. அவற்றின் தொடராகவே ஈரானை தாக்க கடந்த வருடமும் இஸ்ரேலிய விமானங்கள் வந்திருந்தன.
ஆக, அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம் நிகழ்ந்தால் இஸ்ரேல் சூளுரைத்தபடி ஈரானைத்தாக்கவே முடியாது போய்விடும். மத்திய கிழக்கில் இன்னுமொரு அணுசக்தி நாடு உருவாகி விடும். இதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு மட்டுமே அமெரிக்கா வழங்கியிருந்த அணு சக்தி ஏகபோகம் இன்னொரு நாட்டுக்கு பகிரங்கப்படுவதை காணலாம்.
இதுவரை அரபிகளை தலை தூக்காமற் செய்யவே யூதரை அமெரிக்கா வலிமைப்படுத்தி வந்தது. இப்போது அஹ்லு ஸ்ஸுன்னாக்கலை முடக்குவதற்கே ஷியாக்களை வலிமைப்படுத்த முனைகிறது.
ஈராக்கில் 60 வீதம் ஷியாக்கள். அதனால் தான் அவர்களின் கையை ஓங்க வைக்க சதாம் ஹுசைனை அமெரிக்கா அழித்தொழித்தது.
சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் பகை இருந்தபோதும் சிரியா ஷியாக்களின் நாடு என்பதால் அமெரிக்கா அதை விட்டு வைத்திருக்கிறது.
ஈரான் ஷியாக்களின் பெரிய நாடு என்பதாலேயே அதன் வலிமையை மேலும் கூட்டும் தேவையும் தற்போது அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
காரணம் ஈரானுக்கும் சிரியாவிற்கும் நடுவே அஹ்லுஸ் சுன்னாக்களின் தீவிர அரசு உருவாகியிருப்பதேயாகும். இந்த போராளிகளிடமிருந்து ஈராக்கையும் சிரியாவையும் மட்டுமல்ல, ஈரானையும் இஸ்ரேலையும் கூட அமெரிக்கா காப்பாற்ற வேண்டியுள்ளது.
அதன் அனுமதியின்றியே இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ஈராக், சிரியா ஆகியவற்றின் அணு உலைகளை தாக்கியதையும் உலைகளை தாக்கியதையும் ஈரான் தாக்கப்படாது காப்பற்றப்பட்டதையும் நம்ப முடிகிறதா? நம்புவோர் நம்பலாம்.
-நிஜாம்-
A new video shows Iranian atomic destruction of Israel