தமிழ்த் தேசிய அரசியல், மீண்டும் அச்சுறுத்தலான சூத்திரத்துக்குள் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் திணறுகின்றது. தமிழ் மக்களின் சுயாதீனம், பாதுகாப்பு, அதிகாரம் என்ற இலக்குகளை நோக்கி கூர்மைப்படுத்தப்பட வேண்டிய தமிழ்த் தேசிய அரசியல், தனக்குள்ளேயே குழுநிலை வாதத்தை தொடர்ந்தும் உருவாக்கி வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஜனநாயக விழுமியங்களின் மேல் எழுச்சியை ஓரளவுக்கு காட்டியிருக்கின்றது. அல்லது அப்படியான தோற்றப்பாட்டை வழங்கியிருக்கின்றன.
ஆனால், இந்த ஜனநாயக எழுச்சியை தமிழ்த் தேசிய அரசியல் சூழல் தனக்கு சாதகமான முறையில் கையாளாமல், சிக்கலாக்கிக் கொண்டுள்ளதாக கருத முடியும்.
அது, என்ன மாதிரியான சிக்கல் என்றால், 2002ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலத்தில் தமிழ் ஆயுதப் போராட்ட சூழல் எதிர்நோக்கிய சிக்கலுக்கு ஒப்பானது.
தொடர்ச்சியான இயங்குநிலைதான் போராட்ட அமைப்புக்களின் நிலைபெறுகையின் நீட்சியைத் தீர்மானிக்கின்றன. மாறாக, அவற்றின் உறங்குநிலை அந்த அமைப்புக்களின் வல்லமையையும் நிலைபெறுகையையும் கலைத்துவிடுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும் அழிவும் கூட அதையே நமக்கு உணர்த்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளும் இந்தியாவும் எப்படியாவது இலங்கை அரசோடு இணைந்து அழித்தொழித்திருக்கும் என்பது வேறு விடயம்.
ஆனால், அது, இன்னும் இன்னும் பாரிய முயற்சிகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். ஏனெனில், விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு அல்லது வெளித்தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட உடைப்புத்தான் ஒப்பீட்டளவில் விடுதலைப் புலிகளின் வேகமான வீழ்ச்சிக்கு காரணமாகின. அப்படியான அச்சுறுத்தலையே தமிழ்த் தேசிய அரசியல் சூழலும் எதிர்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் தெரிவு என்பது பிரதான ஆயுதப் போராட்ட அமைப்பினை அல்லது அரசியல் அமைப்பினை நோக்கியதாக எப்போதுமே இருந்திருக்கின்றது.
ஏனைய ஆயுதப் போராட்ட அமைப்புகளையோ, அரசியல் அமைப்புக்களையோ அங்கிகரித்தாலும் அதற்குப் பின்னால் அணிதிரள்வதை மறுதலித்திருக்கின்றது.
அந்தத் தெரிவே தமிழ் மக்களின் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றது. அதுதான், காலம் காலமாக மீட்டப்படும் வரலாறு.
தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பிரதான நிலைப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புக்களும் பின்னரான காலத்தில் புளோட்டில் ஆரம்பித்து கொள்கை மற்றும் தக்கன பிழைத்தலின் போக்கில் கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்தது வரை அதுதான் நிகழ்ந்தது.
அதன் நீட்சிதான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் தமிழ் மக்கள் இருப்பதற்கான காரணமும்.
ஆயுத போராட்டங்களின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழல் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முன்னிறுத்தியது.
ஆனால், தமிழ் மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எப்போதுமே பிணக்குகள் இருந்து வந்திருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பு என்கிற ரீதியில், ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாப்பு ரீதியாக இணக்கப்பாடு கொண்டு பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல.
புலிகளின் காலத்தில் அதற்கான தேவையும் இருக்கவில்லை. ஏனெனில், விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தீர்மானங்களை பிரதிபலிக்கும் அமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்தப்பட்டது.
அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாப்போ, கொள்கை வரையறைகளோ எழுத்து வடிவில் அவசியமற்றதாக இருந்தது.
ஆனால், இன்றைய நிலையில் யாப்பு மற்றும் கொள்கைகளின் எழுத்து வடிவம், கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் ஆகியவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது.
இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்திருக்கும் தமிழ் மக்கள், அரசியல் தீர்மானங்களின் போக்கில் குழம்பிப் போய் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். அது, எதிராளிகளுக்கான அதீத சாதகத்தன்மையை வழங்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த பங்காளிக் கட்சிகளும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் அந்த விடயத்தை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள்.
ஆனால், அதற்கான சாதகமான பதிலை தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் வழங்கவில்லை. மாறாக, எழுத்து வடிவில் இல்லாத கொள்கையின் போக்கில் இணங்கிச் செயற்படுவதே சிறந்தது என்கிற ரீதியிலான முன்னிறுத்தலை தொடர்கின்றன.
இன்னொரு பக்கம், ஈபிஆர்எல்ஃஎப், ரெலோ, புளோட் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யாதுவிடின் தமது நிலைபெறுகை கேள்விக்குள்ளாக்கிவிடும் என்பதை உணர்ந்துவிட்டன.
அந்த ஒரு காரணத்தை மறைமுகமாக முன்னிறுத்தியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதிலிருந்து தமிழரசுக் கட்சியும் விலகிச் செல்கின்றது என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.
எதிர்கால தமிழர் அரசியலில் தமிழரசுக் கட்சியே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவாக வேண்டும் என்பது அந்த கட்சியின் நோக்கமாக இருக்கலாம். அந்த உண்மையை தமிழ் மக்கள் உணராமல் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான தமிழ் மக்களின் அபிமானம் என்பது, விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு என்கிற ரீதியிலேயே பெரும்பாலும் இருக்கின்றது.
இதனை, யார் மறந்தாலும், அல்லது மறுத்தாலும் அது அவர்களுக்கு பாதகமான விளைவுகளையே வழங்கும். அதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியும், பிரிந்து சென்ற தமிழ்க் காங்கிரஸ§ம் பெற்ற அனுபவங்கள் நல்ல பாடங்களாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனக்குள் வைத்திருக்க வேண்டும் என்று செயலாற்றும் தமிழரசுக் கட்சியின் போக்கு மீது, மக்கள் அதிருப்தி கொண்டால் அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்றுமுழுதாக உடைத்துவிடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், மக்களுக்கு பூரண திருப்தி இருப்பதாக யாரும் கருத வேண்டியதில்லை.
மற்றைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது இருக்கும் அதிருப்தி போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களுக்கு அதிருப்தி உண்டு.
ஆனால், ஒரேயிடத்தில் தமது ஆணை குவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கருதுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி.
வேறுவழியில்லாத நிலையில், அதுதான் தக்கவைத்தலின் உச்ச போக்கென்றும் தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். மாகாண சபைத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் அதனையே தமிழ் மக்கள் ஆணையாக வழங்கியிருக்கின்றார்கள்.
இப்போது, 2002ஆம் ஆண்டு காலம் மீள வருகின்றதோ என்று தமிழ் மக்கள் அச்சம் கொள்வதற்கு காரணமிருக்கின்றது.
ஜனநாயக தன்மைகளின் மேலெழுச்சிக் காலத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசிய அரசியல் சூழலுக்குள் உடைவை ஏற்படுத்துவதற்கு வெளித்தரப்புக்கள் முயற்சிக்கின்றன.
அதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற பெரும் இழுபறிகளின் போக்கிலும் பிரதிபலிக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ என்கிற பெரும் இடையூறை தாண்டியாகிவிட்டது என்கிற நிலையில், கிடைத்திருக்கின்ற அமைதியான உறங்குநிலைக் காலம், யார் பெரியவர் யார் தீர்மானிக்கும் சக்தி என்கிற விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரச்சினையாக்கி விட்டிருக்கின்றன.
தொடர்ச்சியான முரண்பாடுகளின் போக்கில், ஊடக வெளியில் எந்தவித தார்மீக அறிமுமின்றி கருத்து மோதல்களில் ஈடுபட்டு தம்முடைய கசடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இப்படியான தருணத்துக்காக காத்திருந்த வெளியவர்கள் தமது செயற்பாடுகளின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான காலம் நெருங்கி வரும் வேளையில் இப்படியான முரண்பாடுகள் அச்சுறுத்தலானது.
இன்னொரு பக்கம், நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குத்து வெட்டுக்கள் ஆரம்பித்துவிட்டன. மக்களின் அபிமானம் பெற்றவர்கள் யார், அவர்களின் வாக்கு வங்கி என்ன என்பது பற்றிய பிரச்சினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சிலருக்கு பெரும் பிரச்சினையாகியிருக்கின்றது.
தமது வெற்றிவாய்ப்பை தனிநபர் ஆளுமைகள் பறித்துவிடுமோ என்கிற பயத்தினால் எழுவது அது. அதுதான், எப்படியாவது சில தரப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதற்கு காரணம்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்ஃஎப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்கு இடையில் பல விடயங்களில் ஒருமித்த கருத்தும், சில விடயங்களில் பலத்த முரண்பாடுகளும் உண்டு.
இவர்களுக்கிடையிலான ஒருமித்த கருத்தை கண்டு கொள்ளாமல், முரண்பாடுகளை பெருமளவில் காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிலரும்,
வெளித்தரப்புக்களும், சில ஊடகங்களும் செயலாற்றுகின்றன. இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
உள்வீட்டுப் பிரச்சினையை பேசித் தீர்ப்பது அவசியம். அதனை மறுத்து ஊடகங்களில் தமது பிரச்சினைகளின் ஆழம் புரியாமல் வாக்குவாதங்களில் ஈடுபடுவது தமிழ் மக்களை இன்னும் இன்னும் சலிப்புக் கொள்ள வைத்துவிடும். அது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு அச்சுறுத்தலானது.
தமிழ்த் தேசிய அரசியலின் உண்மையான நிலையை உணர்ந்து கொண்டு களமாற்றுவதற்காக இளைஞர்கள் முன்வர வேண்டிய காலம் இது. இளைஞர்களின் வருகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மறுதலிப்பதற்காக அல்லாமல், அவர்களை சீர்படுத்துவதற்காக இருக்க வேண்டும்.
ஏனெனில், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் உடைப்பு ஏற்படுத்தப்பட்டால் அது, தமிழ் மக்களின் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை தகர்த்துவிடும்.
ஆக, தமிழ் மக்களின் அரசியல் மீதான நம்பிக்கைகளைச் சிதைக்காதவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கசடுகளை அற்றுவதற்கான அழுத்தங்களை வழங்கும் வகையாக இளைஞர்களின் வருகை அமைய வேண்டும்.
அது, பிற்காலத்தில் தீர்மானம் மிக்க அரசியல் சக்தியாக கொள்கையளவில் முன்னோக்கி செல்ல உதவும்.
இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேவைப்படுவது தமிழ் இளைஞர்கள் எனும் வடிவில் கண்டிப்புடன் கூடிய நல்ல ஆசான். அதுதான், தமிழ்த் தேசிய அரசியலை காப்பாற்ற உதவும்!
-புருஜோதமன் தங்கமயில்-