வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவத்தை வெளியேற்றுவதாக உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் ரணிலுடன் கைகுலுக்கத் தயாரென வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
முல்லைத்தீவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய சத்திரசிகிச்சைக்கூடம், விடுதி மற்றும் இரத்த வங்கி ஆகியன இன்று திறந்து வைக்கப்பட்டன.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் அரசியல் ரீதியாக இலாபம் தேடும் செயற்பாடுகளிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக வட மாகாண முதலமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், கிளிநொச்சி வைத்தியசாலையின் இரத்த வங்கியும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன், வைத்தியசாலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.