திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை, இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், யாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று பொதுவான கருத்தைக் கூறியிருந்தார்.
அந்த அதிகாரி தனது பெயரை மட்டும் வெளியிடவில்லை. அதுபோலவே, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைவது யார் என்றும் அவர் கூறவில்லை. எவ்வாறாயினும், அந்த அதிகாரி குற்றம்சாட்ட வந்தது இந்தியாவாகத் தான் இருக்க முடியும்.
ஏனென்றால், தலாய்லாமா விவகாரம் புதிய அரசாங்கத்துக்கு சிக்கலாக உருவெடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அண்மையில் புதுடில்லியில் நடந்த பௌத்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த, இலங்கையின் பௌத்த பிக்குகள் குழுவொன்று, தலாய்லாமாவைச் சந்தித்து, அவரை இலங்கைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.
அதுபோலவே, அவர்கள் மத்தியில், உரையாற்றிய திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமாவும், இலங்கைக்கு வருவதில் தானும் ஆர்வம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைக்கு வருகை தருவது தலாய்லாமாவின் ஒரு நீண்டகாலக் கனவாகவே இருந்து வந்திருக்கிறது.
காரணம், அனுராதபுரத்திலுள்ள சிறிமாபோதியிலும், கண்டியில் தலதா மாளிகையிலும் வழிபாடு செய்வது அவரது விருப்பமாக இருக்கிறது. அதனை அவர் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுபோலவே, தலாய்லாமாவை இலங்கைக்கு அழைப்பதற்கு ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
அதற்குக் காரணம், ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் விரும்பாமையே யாகும்.
1999ஆம் ஆண்டும், 2006ஆம் ஆண்டும், தலாய்லாமாவை வரவேற்கும் பௌத்த பிக்குகளின் முயற்சிகள், சந்திரிகா அரசாங்கத்தினாலும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினாலும், கைவிடச்செய்யப்பட்டன.
கடந்த ஆண்டில், பொது பலசேனா மேற்கொண்ட முயற்சியையும் கூட, அரசாங்கமே தடுத்திருந்தது.
சீனா கொடுத்த அழுத்தங்களின் காரணமாகவே, அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.
திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா, திபெத் மக்களின் விடுதலைக்காக அமைதி வழியில் போராடுபவர்.
திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனா அதனைத் தனது பிரதேசம் என்று சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை ஏற்கத் தயாராக இல்லை. அதனால்தான், தலாய்லாமாவுக்கு தர்மசாலாவில் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறது இந்தியா.
இலங்கைத் தமிழ் அகதிகளைப் போலவே, திபெத்திய அகதிகளும் பெருமளவில் வட இந்தியாவில் தங்கியுள்ளனர்.
ஒரு காலகட்டத்தில், திபெத்திய மக்களின் விடுதலைக்கு இந்தியா உதவியிருந்தாலும், பின்னர் சீனாவுடனான உறவுகளில் சமரசம் செய்து கொள்வதற்காக, திபெத்திய மக்களின் போராட்டத்தை இந்தியா கைவிட்டு விட்டதான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
1980களின் தொடக்கத்தில், வட இந்தியாவில் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளித்திருந்தது.
அவ்வாறு பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட போராளிகளுக்கு சமையல் செய்பவர்களாக திபெத்தியர்களைத் தான் இந்தியா அமர்த்தியிருந்தது.
அவர்கள் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசிய போது தமக்குப் பயிற்சி தருவதாக இந்தியா அழைத்து வந்து சமையல்காரர்களாக்கி விட்டதாகவும், அதுபோல நீங்களும் ஆகி விடாதீர்கள் என்று அறிவுரை கூறியதாகவும், அண்மையில் பிரான்சில் மரணமான ஈரோஸ் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, சீனாவுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை இந்தியா ஊக்குவிக்கவில்லை. ஆனாலும், தலாய்லாமாவை இந்தியா பாதுகாத்து வருகிறது.
அதற்குக் காரணம், திபெத்தியர்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும், அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, சீனாவுக்கு எதிரான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தலாம் என்பதற்காகவே தலாய்லாமாவை இந்தியா பாதுகாத்து வருகிறது.
இலங்கைத் தமிழர் விவகாரத்தையும் இந்தியா இதுபோலத் தான் கையாண்டது.
தனது நலன்களுக்குத் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்வதும், பின்னர் அவர்களைக் கைவிட்டு விடுவதும், இந்தியாவினது கொள்கை மட்டுமல்ல, பொதுவாகவே வல்லாதிக்க நாடுகளினதும் பண்பு தான்.
தலாய்லாமாவை இப்போது இந்தியா, ஒரு துருப்புச்சீட்டாக இலங்கைக்குள் களமிறக்கப் பார்ப்பதாகவே தெரிகிறது.
ஆனால் இது இலங்கைக்கு சங்கடங்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும், இதனை இலங்கைக்கு எதிரான நகர்வு என்று கூற முடியாது.
உண்மையில் சீனாவுக்கு எதிரான நகர்வு தான் இது. சீனாவுக்கு எல்லா வகையிலும், சவால் விட வேண்டும் என்பதே இந்தியாவின் இப்போதைய மூலோபாயமாக உள்ளது.
காரணம், இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீனாவின் தலையீடுகள் எல்லை கடந்து சென்று விட்டது.
எனவே, சீனாவின் தலையீடு தெற்காசியப் பகுதியில் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறது புதுடில்லி.
தெற்காசியாவில் சீனாவின் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும், அதற்கு முட்டுக்கட்டையேனும் போட வேண்டும் என்பது இந்தியாவின் மூலோபாயமாக உள்ளது. அதற்கு இலங்கையைத் தன் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது இந்தியா.
இதற்காகத் தான், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், புதிய அரசாங்கத்துடன் இறுக்கமானதும் நெருக்கமானதுமான உறவை இந்தியா ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு கணிசமான இடைவெளி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அந்த இடைவெளியே மேலும் விரிவாக்குவதற்கான துருப்புச்சீட்டாகவே தலாய்லாமாவைக் களமிறக்கப் பார்க்கிறது இந்தியா.
இலங்கைக்குத் தலாய்லாமா பயணம் மேற்கொண்டால், அது சீனாவுக்கு கடுமையான எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சீனா மற்றெல்லா விடயங்களையும் விட, திபெத் விவகாரத்தில், கடுமையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
திபெத்துக்கு – தலாய்லாமாவுக்கு ஆதரவளிக்கும் எவரையும், தனது விரோதியாகவே பார்க்கிறது சீனா.
சீனாவின் பலம் காரணமாக, தலாய்லாமாவுக்காக கதவுகளைத் திறக்காமல் அடைத்து வைத்திருக்கின்றன பல நாடுகள். அதில் இலங்கையும் ஒன்று.
ஒரே சீனா என்ற கோட்பாட்டை இலங்கை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிரதி உபகாரமாக, இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட தருணங்களில் எல்லாம், சீனா உதவிக்கு வந்திருக்கிறது.
குறிப்பாக, 1950களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, இறப்பருக்கு அரிசி என்ற பண்டமாற்றுத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சீனா கைகொடுத்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலும் கூட, மற்றெல்லா நாடுகளும் கைவிட்ட போது, ஆயுதங்களைக் கொடுத்து உதவியது சீனா.
போருக்குப் பின்னர், இலங்கையில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான டொலர்களைக் கொண்டு வந்து கொட்டியது.
அதுமட்டுமன்றி, ஜெனீவா போன்ற சர்வதேச அரங்கில், மனித உரிமை விவகாரங்களில் நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட போதும், சீனாவே காப்பரணாகவும் நின்றது.
இவ்வாறாக பல்வேறு வழிகளிலும் சீனாவுக்கு இலங்கை நன்றிக்கடன் பட்டுள்ளதால் தான், தலாய்லாமாவுக்காக இலங்கை அரசாங்கம் தனது கதவுகளைத் திறக்க மறுத்து வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கம் தலாய்லாமாவுக்கு கதவுகளைத் திறக்குமாயானால், சீனாவுடன் மோதல் போக்கை வளர்த்து விடும்.
அது இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
ஏனென்றால், ஏற்கனவே பில்லியன் கணக்கான டொலர் கடன்கள் மற்றும் பொருளாதார, வர்த்தகத் திட்டங்களுடன், சீனாவுடன் தொடர்பு வைத்திருக்கிறது இலங்கை.
இந்தநிலையில், சீனாவுடனான உறவுகள் இப்போதுள்ளதை விடவும் மோசமடைவதை புதிய அரசாங்கம் விரும்பாது.
ஆனால், இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படுவது இந்தியாவுக்குச் சாதகமாக அமையும். அதனால் தான், தலாய்லாமாவை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே இருந்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுகின்றன.
இந்தக் கட்டத்தில், இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரி, யாரோ குட்டையைக் குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டது இந்தியாவாகத் தான் இருக்க முடியும். ஆனால் அதனை வெளிப்படையாக கூறும் துணிச்சல் அந்த அதிகாரிக்கு இருந்திருக்காது.
ஏனென்றால், இலங்கை இப்போது இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கிறதே.
-ஹரிகரன்-