ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேற்முறையீட்டு மனுவில் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தின் வாதம் தொடர்கிறது…
இதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பசந்த், குமார், மணிசங்கர், அசோகன், நவநீதகிருஷ்ணன், செந்தில், பன்னீர்செல்வம், பரணிகுமாரும் இவர்களோடு தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் மூத்த மருமகன் காசிராஜனும் வந்து பார்வையிடுகிறார்.
அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ் மராடியும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் தாமரைசெல்வன், குமரேசன், சரவணன், ராமசாமியும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சிறப்பு பணி அமர்த்தல் ஐ.ஜி.குணசீலனும், டி.எஸ்.பி., சம்மந்தமும் ஆஜராகி வருகிறார்கள்.
என் தீர்ப்பும் இறுதியானது அல்ல...
பசந்த்: ஏ1 ஜெயலலிதா 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்தார். இந்த காலகட்டம்தான் வழக்கின் காலகட்டமாக கருதப்படுகிறது.
இந்த வழக்கு காலகட்டத்தில் ‘ஜெயலலிதா தன் வருமானத்துக்கு அதிகமாக சம்பாதித்த 66.65 கோடி பணம் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றது.
அதன் மூலம் சசிகலா, சுதாகரன், இளவரசி கூட்டாகவும், தனித்தனியாகவும் 32 கம்பெனிகளைத் தொடங்கி அதில் இந்த பணத்தை முதலீடு செய்துள்ளதாக’ தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால் இந்த வழக்கு காலகட்டத்துக்கு முன்பே ஜெயலலிதாவும், சசிகலாவும் நண்பர்களாக இருந்தார்கள். ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் என்ற இரண்டு நிறுவங்களில் மட்டும் ஜெயலலிதா பார்ட்னராக இருந்தார்.
அதற்கு முறையாக வருமானவரித் துறையில் வரியும் கட்டி இருக்கிறார். மற்ற எந்த ஒரு கம்பெனியிலும் ஜெயலலிதா பார்ட்னராக இல்லை.
அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் 32 கம்பனிகளுக்கு எந்த ஒரு பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. இந்திய தண்டனை சட்டம் 109 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளில் கூட்டுச்சதி செய்து வருமானம் ஈட்டினார்கள் என்பதும் தவறு.
தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரும் ஜெயலலிதாவிடம் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஒரு ஆதாரத்தையோ சாட்சியத்தையோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
நான்கு பேரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள் என்பதைத் தவிர எந்த ஒரு ஆதாரங்களும் கிடையாது. 32 கம்பெனிகளின் உரிமையாளர்கள் குறித்தும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் விசாரிக்கவில்லை.
இதையெல்லாம் சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னோம். ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி கவனத்தில் கொள்லாமல் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அதனால், உங்களுக்கு பணி சுமை அதிகமாகியுள்ளது.
நீதிபதி குமாரசாமி: ஆவணங்களையும் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் பார்க்காமல் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்? யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம். என்னுடைய தீர்ப்புகூட இறுதியானது கிடையாது. அதன் மீது உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குப் போகலாம்.
பசந்த்: வழக்கு காலகட்டத்துக்கு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என நான்கு பேரின் சொத்து மதிப்பு தனித்தனியாக பதிவு செய்யப்படாமல், ஒன்றாக போட்டதன் குளறுபடியால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
நீதிபதி: அப்படியென்றால் வழக்கு காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வந்த வருமானத்தின் ஆதாரங்களைக் காட்டுங்கள்.
பசந்த்: இதை கேட்பீர்கள் என்று தெரியவில்லை. அதனால் எடுத்து வரவில்லை.
150 முடிச்சுகளில் ஒன்றைகூட அவிழ்க்கவில்லை.
நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் எப்போது தொடங்கப்பட்டது?
பசந்த்: 1988, 89-ம் வருடங்களில் தொடங்கப்பட்டது.
நீதிபதி: நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான ஆதாரங்களின் ஆவணங்களைக் கொடுங்கள்.
பசந்த்: (துலாவினார்கள்)
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) 32 கம்பெனிகள் பணப்பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரம் உள்ளதா?
பவானிசிங்: (மௌனம்)
நீதிபதி: இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யார்?
பவானிசிங்: (தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் டி.எஸ்.பி சம்பந்தத்தைக் கூப்பிடுகிறார்)
சம்பந்தம்: நான்தான்.
நீதிபதி: குற்றவாளிகள் தரப்பு சொல்வது உண்மையா?
சம்பந்தம்: உண்மையில்லை. அதற்கான ஆதாரங்கள் உள்ளது.
மராடி (அரசுத் தரப்பு வழக்கறிஞர்): குற்றவாளிகள் பங்குதாரர்களாக உள்ள 32 கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு 1988, 89-களில் தொடங்கப்பட்டாலும், அதில் பணப்பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை.
ஏ1 ஜெயலலிதா முதல்வராக இருந்த 91 முதல் 96 காலகட்டத்தில்தான் இந்த 32 கம்பெனிகளில் 1000-க்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதற்கு அரசு சாட்சியங்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
நீதிபதி: (பசந்தைப் பார்த்து) நீங்கள் ஒரு வாததை வைப்பதற்கு முன் அதற்குத் தேவையான முழு விவரங்களையும் தயார் செய்துகொண்டுதான் வாதிட வேண்டும். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அரசு சாட்சியங்கள் 182, 201 படியுங்கள்.
பசந்த்: அந்த வாக்குமூலங்கள் பெரியதாக உள்ளது.
நீதிபதி: அதை முழுமையாகப் படியுங்கள். அப்போதுதான் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியும். தேவையில்லாததைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வழக்கின் தீர்ப்பில் கீழ்நீதிமன்ற நீதிபதி 150 முடிச்சுகள் போட்டுள்ளார். அதில் இதுநாள் வரை ஒன்றைக்கூட நீங்கள் அவிழ்க்கவில்லை.
பசந்த்: அந்த முடிச்சுகளைச் சொல்லுங்கள்.
நீதிபதி: அதை நீங்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் உங்கள் மீது சுமத்தி இருக்கிற குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு மறுப்பதோடு, அவர் தீர்ப்பில் உங்கள் சொத்துக்குவிப்பு 55 கோடி என்று எழுதி இருக்கிறார். அதற்கு சரியான ஆதாரத்தோடு, சரியான கணக்குகளைக் காட்டுங்கள்.
நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்கத் தயாரா?
பசந்த்: ஜெயலலிதாவிடம் இருந்தும், என் மனுதாரர் சசிகலாவிடம் இருந்தும் 32 கம்பெனிகளுக்கு பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
பவானிசிங்: அவர்கள் சொல்வது உண்மையில்லை.
நீதிபதி: அதை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா? அந்த ஆதாரத்தைக் கொடுங்கள்.
பவானிசிங்: தற்போது இல்லை.
நீதிபதி: அவர்கள் சொல்லும் புகாருக்கு நுனி விரலில் பதில் கொடுக்க வேண்டும். இப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது. எப்படி கீழ்நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடினீர்கள்?
பவானிசிங்: (ஆதாரங்களை நாளைக்குக் கொடுக்கிறேன்)
நீதிபதி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
advacate saravanan.
சரவணன்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு 18 ஆயிரம், 15 ஆயிடம் என டெபாசிட் தொகை வசூலித்தார்கள். அதில் 14 கோடி வசூலானது. அந்தப் பணம் 32 கம்பெனிகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் 44-வது பிறந்தநாளுக்கு டி.டி-யாக வந்த 2.15 கோடி பணமும் கம்பெனிகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை கீழ்நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாகக் கொடுத்திருக்கிறோம்.
நீதிபதி: உங்கள் கட்சி பத்திரிகைக்கு இதுபோன்ற டெபாசிட் வசூலிக்கப்படுகிறதா? உங்க தலைவர் பிறந்தநாளுக்கு கிஃப்ட் வாங்குவது இல்லையா?
சரவணன்: நாங்கள் ஸ்கீம் டெபாசிட் திட்டத்தைப் பின்பற்றுவது இல்லை. பத்திரிகை தேவைப்படுபவர்கள் சந்தா செலுத்தி வாங்கிக்கொள்வார்கள். எங்கள் தலைவர் கிஃப்ட் வாங்க மாட்டார்.
நவநீதகிருஷ்ணன் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): (குறுக்கிட்டு) கருணாநிதி பிறந்தநாளின்போது உண்டியல் வைத்து பணம் வசூல் செய்வார். அவரின் தலைவர் கருணாநிதி அறிவியல்பூர்வ குற்றவாளி என சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது.
சரவணன்: கனம் பொருந்திய நீதிபதி அவர்களே… அன்றைய கமிஷன்கள் என்பது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடியவை. எங்கள் தலைவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி, அதை ஆதாரங்கள் இல்லாமல் நிரூபிக்க முடியவில்லை. இந்த நீதிமன்றத்தை அவர்கள் அரசியல் மேடையாக்கத் தயார் என்றால், நாங்களும் அரசியல் மேடையாக்கத் தயார்.
பசந்த்: அரசியல் பேச வேண்டாம். வழக்குதான் எங்களுக்கு முக்கியம். அதைப் பார்ப்போம்.
நல்லமநாயுடுவை வரச் சொல்லுங்கள்!
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) சி.டி ஃபைல், கேஸ் டைரி எங்கே? (சி.டி ஃபைல் என்பது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யும்போது சாட்சியங்கள் சொல்லும் வாக்குமூலங்களையும் அதை போலீஸார் பதிவு செய்வதையும் வீடியோவில் பதிவு செய்வார்கள். இதைதான் சி.டி ஃபைல் என்பார்கள். எஃப்.ஐ.ஆர் போட்டதில் இருந்து அந்த வழக்கின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவுசெய்வது கேஸ் டைரி.)
பவானிசிங்: (ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி சம்பந்தத்தைக் கூப்பிட்டார்)
சம்பந்தம்: அனைத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்துவிட்டோம்.
நீதிபதி: செக் ஷன் 161-ன்படி சாட்சியங்களின் வாக்குமூல ஆவணங்கள் எங்கே?
சம்மந்தம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது சமர்ப்பித்துவிட்டோம்.
நீதிபதி: இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரி யார்?
சம்பந்தம்: நல்லமநாயுடு.
பவானிசிங்: அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.
நீதிபதி: அவர் ஓய்வு பெற்றாலும் நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியது அவருடைய கடமை. அதனால், அவரைக் கட்டாயம் வரச் சொல்லுங்கள்.
குற்றங்களை நிரூபிப்பதாக பவானிசிங் சவால்!
(சாட்சி 182: சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் அருணாசலம், சாட்சி 201: சென்னை மைலாப்பூர் கனரா வங்கி மேலாளர் வித்யாசாகர் ஆகியோரின் சாட்சியங்களைப் படித்து முடித்த பிறகு…)
பசந்த்: இந்த வங்கி அதிகாரிகள் சொன்ன வாக்குமூலங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஏ1 ஜெயலலிதாவிடம் இருந்து யாருக்கும் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்பது நிரூபணமாகிறது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் பணத்தை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறோம். அதனால் வருமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
நீதிபதி: அப்படியென்றால் மைனஸ் 13(1)ஈ போட்டுவிடலாமா? (13(1)ஈ என்பது ஊழல் தடுப்புச் சட்டம் )
பசந்த்: (சிரிப்பு)
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) இதற்கு என்ன சொல்றீங்க?
பவானிசிங்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு வசூலிக்கப்பட்ட தொகை சட்டத்துக்குப் புறம்பானது. அரசு தரப்பு சாட்சியங்கள் 198- ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த ஜெயராமனின் வாக்குமூலத்தையும், 94- கம்பெனிகளின் பதிவாளரின் வாக்குமூலத்தையும் நானும் படித்துக்காட்டி குற்றங்களை நிரூபிக்கத் தயார்.
குமார்: அந்த வாக்குமூலங்களில் ஒன்றும் இல்லை. ஜெயலலிதா வீட்டுச் செலவுகளும், கார்டனில் வளர்க்கப்பட்ட நாய்களுக்கு வாங்கிய கறியைப் பற்றியும்தான் சொல்லி இருப்பார்.
நீதிபதி: சாட்சியங்கள் சட்டம் 10-ன் படி அவர்கள் படிப்பதற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்தானே? அதிலும்கூட சொத்துகள் இருக்கலாம். எப்போது படிக்கிறீர்கள்?
பவானிசிங்: திங்கள்கிழமை படிக்கிறேன்.
சட்டத்திற்கு புறமாக ஆஜராகி இருக்கிறீகள்:
கம்பெனிகள் தொடர்பான வழக்கு குமாரசாமி முன்னிலையில் கோர்ட் ஹால் 14-ல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பவானிசிங்கை நீக்க வேண்டும் என மீண்டும் அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனுவின் விசாரணை, துணை முதன்மை நீதிபதி மஞ்சுநாத் மற்றும் நீதிபதி சுஜாதா ஆகிய 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கோர்ட் ஹால் 2&ல் நடைபெற்றது.
அன்பழகன் தரப்பு மனுவைப் பார்வையிட்ட நீதிபதிகள், பவானிசிங்குக்கும் கர்நாடக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்கள்.
இதை அறிந்துகொண்ட நீதிபதி குமாரசாமி: (பவானிசிங்கைப் பார்த்து) அரசு வழக்கறிஞர் சிவில் வழக்காக இருந்தால் மட்டும்தான் கீழ் நீதிமன்றத்தில் இருந்து தொடர்ந்து மேல்முறையீட்டு விசாரணையிலும் ஆஜராகலாம். ஆனால், இந்த கிரிமினல் வழக்கில் அப்படி தொடர்ந்து ஆஜராக முடியாது. சட்டத்துக்குப் புறமாக எப்படி இந்த வழக்கில் ஆஜரானீர்கள்? இதுபற்றி முதன்மை நீதிபதியிடம் ஆலோசனை செய்யுங்கள்.
பவானிசிங்: இந்த வழக்கில் ஆஜராக என்னை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அனுமதித்து இருக்கிறது.
– வீ.கே.ரமேஷ்
படங்கள்: வி.சதீஷ்குமார்
தொடரும்..