பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த போது தப்பிச் சென்று நிட்டம்புவ – பஸ்யாலய பிரதேசத்தில் மாடிக் கட்டடம் ஒன்றில் இருந்து குதித்து உயிரிழந்த இளைஞர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களனி பிரிவிற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஸ்யாலய பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதிக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

பஸ்யாலய பிரதேசத்தில் வசித்த இளைஞர் ஒருவரே மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று (02) இரவு மோட்டார் சைக்கிளில் செல்லுகையில் லொரி சாரதி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

லொரிக்கு முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செலுத்தப்பட்டதாக லொரியின் சாரதி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன், லொரி மீது மற்றுமொரு இடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் கற்களைக் கொண்டு தாக்கியதாகவும் லொரியின் சாரதி தெரிவித்துள்ளார்.

பின்னர் லொரியின் சாரதியும் உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் சென்றவரைப் பிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த இளைஞரை பொலிஸாரிடம் லொரியின் சாரதியும் உதவியாளரும் ஒப்படைத்துள்ளனர்.

இதன் பின்னரே குறித்த இளைஞர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

32 வயதான கயான் புபுது குமார என்ற திருமணமான இளைஞரே உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply